• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உருகியோடும் 2

Sungudi

Moderator
Joined
Apr 6, 2025
Messages
20
2. முகுந்தா முகுந்தா!


தான் ஏதோ திருட்டுத்தனம் செய்ய வந்தவர் போல் தயங்கித் தயங்கி நடந்தார் சத்தியபாமா.

‘தர்மம் பண்ணுங்க தாயி!’ என்று எழுந்த குரல்களைக் கண்டு கொள்ளவில்லை. “எப்பவும் இந்த அம்மா வந்தா தலைக்கு ஒத்த ரூபாயாவது போடாமப் போகாதே, இப்ப என்ன?” என்று அந்தப் பெரிய கோயிலின் வாசலில் அமர்ந்திருந்த யாசகர்கள் வாய்விட்டே பேசிக்கொண்டனர்.

நேரே சுவாமி சன்னதிக்குள் நுழையாமல், அந்தத் திசையில் ஒரு வணக்கம் கூட வைக்காமல் வெளிப்பிரகாரத்தில் நடந்து சென்று தான் வழக்கமாக அமரும் இடத்தில் இல்லாமல் கொஞ்சம் மறைவாகவே அமர்ந்து கொண்டார்.

கடந்த நான்கு நாட்களாகவே மகனின் நடவடிக்கைகள் சரியாக இல்லை. “உன் மகன் நாளைக்கு ஏதோ பெருசா பிளான் பண்றான் போய் பாத்துக்கோ அத்தை. கோவில்ல வச்சு தான் ஏதோ சம்பவம் இருக்கு. பின்ன, நீதான கூடவே சுத்துறே.‌. என்கிட்ட சொல்லலையா அப்படின்னு சொல்லாதே” என்று முகுந்தனின் நண்பன் சொல்லி விட்டுப் போனான்.

ஆம். அவனது பதின் வயதிலிருந்தே அவனது நடவடிக்கைகள் சரியாக இல்லை தான். என்ன செய்வது? சத்தியபாமாவின் வாழ்க்கையே போராட்டம் ஆகிவிட்டது. கல்யாணம் முடிந்த நாளிலிருந்து தன் பெயருக்கும் குணத்திற்கும் விரோதமாக நடக்க வேண்டியதாகிற்று.

கணவனின் தவறுகள், குற்றங்கள் அனைத்திற்கும் குடும்பத்தையும் சமூகத்தையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம். அவன் எங்கோ போய்த் தொலைந்து, பின் நீண்ட நாட்கள் கழித்து அவனது மரணச் செய்தி வரும் வரையிலும், மகனுக்கு பதில் சொல்லிச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஓரிரு வருடங்கள் கூடத் தெளிவாக அவள் வாழ்க்கை பயணம் சென்றிருக்காது மீண்டும் மகனால் குழப்பங்கள்.

“அப்பனைப் போலவே வர்றான்” என்ற முணுமுணுப்புக்கள் சத்தியபாமாவுக்கும் கேட்காமல் இல்லை. சமயத்தில் அவளுக்கு அப்படித்தான் தோன்றும். ‘பேச்சையும் முழியையும் பாரு.. அப்படியே அப்பனை மாதிரி’ என்று.

ஆனால் வாய் விட்டுச் சொல்ல மாட்டார். இல்லாத ஒன்றைச் சொல்லி நாமே ஏதாவது உருவாக்கி விடக் கூடாது, ‘என் மகன் நல்லவன் தான். சரியாயிடுவான்’ என்று சொல்லிக் கொள்வாள்.

வாழ்க்கை படுத்திய பாட்டில் இப்போதெல்லாம் சத்தியபாமா வாயைத் திறந்தாலே உண்மை போலவே பொய்யும் சரளமாக வந்து விழும் என்பது உண்மையானது. மகன் தலையெடுத்த பின் அது இன்னமும் அதிகம்தான். ‘இவனால என்னென்ன அவமானமெல்லாம் பட்டாச்சு. இன்னும் என்னென்ன செய்யக் காத்திருக்கானோ? ஈஸ்வரா நீ தான் காப்பாத்தணும்!’ சத்தியபாமா அமர்ந்திருந்த இடத்திலிருந்து விமானம் நன்றாகத் தெரிந்தது. அதைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டார்.

“அக்கா! அபிஷேகமாகப் போகுது. வரலையா நீங்க?” அவ்வப்போது கோவிலில் பார்த்து புன்னகைத்துக் கொள்ளும் பெண். அவள் பெயரெல்லாம் தெரியாது.

“இப்பத்தான் கும்பிட்டுட்டு வந்து உட்கார்ந்திருக்கேன். கால் வலிக்குது. நீங்க போங்க, வரேன்” என்றார் சத்தியபாமா.

இதுவும் பொய் தான். என்ன செய்வது? “சிவசிவா! உன் கோவில்ல உட்கார்ந்துக்கிட்டே பொய் சொல்றேன். சின்னச் சின்ன விஷயத்தில் கூட பொய் சொல்ல வைக்கிறியே.. ஆனா அதுக்குக் காரணமும் நீ தான். அதனால தப்பு, சரி எதுவா இருந்தாலும் பலன் உனக்குத் தான்” சொல்லிக் கொண்டார் சத்தியபாமா.

ஓரிரு மணித்துளிகள் கடந்தன.‌ ‘குமரன் தெரியாம சொல்லி இருப்பானோ.. முகுந்தனைக் காணலையே..விவகாரமா எதுவும் நடக்கப் போகுதா? தெரியலையே’

வெள்ளை வேஷ்டி சட்டையுடன் முகுந்தன் வருவது தெரிந்தது. சத்தியபாமா அமர்ந்திருந்த பிரகாரத்தின் ஆரம்பத்தில் தான் கோவில் அலுவலகம் இருந்தது. “வேஷ்டி சட்டை போட்டா பெரிய மனுஷன் மாதிரி எப்படி அம்சமா இருக்கான்?” அந்தக் குழப்பத்திலும் மகனைக் கண்கள் ஒரு முறை ரசித்தன.

கோவில் அலுவலகத்துக்குள் போனான் முகுந்தன். பார்த்துக் கொண்டே இருந்தார் சத்தியபாமா. அவன் கூட வந்த இரண்டு இளைஞர்கள் வெளியே நின்றார்கள். அவர்கள் இதுவரை பார்த்ததில்லை. புது முகங்களாக இருந்தார்கள். “இங்கே எதுவும் ஆளைப் புடிச்சிருக்கானோ.. யாருக்கும் வேலை வாங்கித் தரேன், காண்ட்ராக்ட் வாங்கித் தரேன்னு இவங்களை எதுவும் ஏமாத்தப் போறானோ?” யோசித்தார்.

இப்போது அவர் இருந்த தூணுக்கு அடுத்த தூணின் மறைவில் இரண்டு இளம்பெண்கள் வந்தமர்ந்தார்கள்.

ஒருத்தி அரக்கு நிறத்தில் கைத்தறிப் புடவை அணிந்திருந்தாள். ‘சிரிச்ச முகமா, அழகா இருக்காளே!’ களேபரத்திலும் அவள் முகம் இவர் மனதில் பதிந்தது.

“ஒண்ணுக்கு நாலு தடவை யோசிச்சுக்கோ சித்ரா.. யார் மனசையும் கஷ்டப்படுத்த மாட்டியே நீ” கூட வந்தவள் அந்த பெண்ணிடம் சொன்னது சத்தியபாமாவும் காதுகளில் விழுந்தது.

“அதெல்லாம் எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. இப்ப வந்து சொல்றீங்களே அக்கா.. சும்மா இருங்க”

“உங்க அம்மா என்னை கேள்வி கேட்டா நான் என்ன சொல்லுவேன்?”

“அக்கா! இதோட நூறாவது முறையா இதே கேள்வியைக் கேட்டாச்சு நீங்க.. விடுங்க” கண்டிப்பா அன்பும் ஒரே அளவில் அவள் குரலில் தெரிந்தது. அதற்கிடையில் சித்ராவின் அலைபேசி அடித்தது.

“வந்துட்டோம். இங்கே பிரகாரத்தில் தான் இருக்கோம். வந்துடலாமா?” அழைப்பைத் துண்டித்தவள், “வாங்க அக்கா, முகுந்தன் வரச் சொல்லிட்டார்”

பக்கென்று இருந்தது சத்தியபாமாவுக்கு. ‘அந்தப் பொண்ணும் பளபளப்பா வந்திருக்கு. வீட்டுக்கு தெரியாம ஏதோ பண்ற மாதிரி பேசுறாங்க.. என்ன நடக்குது? இங்க நான் நெனச்சதை விட விஷயம் பெரிசா?’ அந்த பெண்கள் இருவரும் பிரகாரத்தைச் சுற்றிக்கொண்டு கோவிலில் நுழைகையில் சீரான இடைவெளி விட்டுத் தொடர்ந்தார் சத்தியபாமா.

அந்த இரண்டு இளம் பெண்களுக்கும் முன்னால் ஒரு குழந்தை குடுகுடுவென்று ஓடிக்கொண்டிருக்க, தம்பி நில் பார்த்து விழுந்துடாத என்றபடியே பின்னால் விரைந்து கொண்டிருந்தார் அவனின் அம்மா. சொல்லி வாயை மூடவும் அந்தத் துறுதுறு குழந்தை கால் தடுக்கி விழவும் சரியாக இருந்தது.

ஓடிப்போன சித்ரா என்று அழைக்கப்பட்ட அந்த பெண் அந்தக் குழந்தையைத் தூக்கி இரண்டு முறை உதறி, செல்லம் கொஞ்சி, “பார்த்து போகக் கூடாதா தங்கம்.. அழகான சட்டை போட்டிருக்கீங்களே.. சூப்பரா இருக்கே.. எனக்கும் ப்ளூ கலர் ரொம்ப பிடிக்குமே.. இந்தாங்க இந்த ப்ளூ கலர் சாக்லேட் சாப்பிடுங்க” என்று தன் கைப்பையை திறந்து ஒரு சாக்லேட் எடுத்துக் கொடுத்தாள் சித்ரா.

அழுகை நின்றுவிட்டது. தேங்க்ஸ்ங்க என்றபடி குழந்தையின் அம்மா அவனை வாங்கிக் கொண்டாள். சத்தியபாமாவும் ஒரு நிமிடம் நிதானித்துப் பின் தொடர்ந்தார். பிரகாரத்தைச் சுற்றி விட்டு மீண்டும் கோவிலில் முன்புறமாக வந்து பார்த்தால் அந்த திருப்பத்தில் இரண்டு பெண்களையும் காணவில்லை.

அப்போது பார்த்து, “நல்லா இருக்கீங்களா?” என்று தெரிந்த ஒரு பெண் பிடித்துக் கொள்ள, அங்கே ஓரிரு நிமிடம் கடந்தது.

‘எங்கே போனாங்க.. அபிஷேகம் பார்க்கவா, இல்ல வேற எங்கேயுமா? என்று அவர் பரபரப்பான நேரம், பக்கவாட்டில் இருந்த முருகன் சன்னதியில் இருந்து மின்சார மேளதாளம் முழங்கியது. அவர் தலையைத் திருப்பவும் முகுந்தனும் சித்ராவும் மாலை மாற்றிக் கொள்ளவும் சரியாக இருந்தது.

அதிர்ந்து நின்றார் சத்தியபாமா. சினிமாவில் காட்டுவது போல் ஓடிப்போய் நிறுத்துங்கள் என்று சொல்லிவிடலாமா என்று தோன்றியது. அதற்குள் ஐயர் தாலியை எடுத்து நீட்டி, அதனை முகுந்தன் எடுத்து சித்ராவின் கழுத்தில் கட்டியே விட்டான். அடுத்ததாக முகுந்தனின் அருகில் இருந்த ஒருவன் ஒரு டப்பாவை திறந்து சித்ராவிடம் நீட்ட அவள் அந்த மோதிரத்தை எடுத்து முகுந்தன் கையில் போட்டாள்.

எல்லாம் ஐந்து நிமிடங்களுக்குள் முடிந்து விட்டது. அடுத்ததாக இரண்டு கல்யாண கோஷ்டிகள் தயாராக இருந்தன. இவர்களது குழுவில் தான் ஆட்கள் மிகவும் குறைவு.

“நகர்ந்துக்கோங்க, அடுத்த ஜோடி வாங்க!” என்று ஐயர் சொல்லவும் முகுந்தனும், சித்ராவும் கையைக் கோர்த்துக்கொண்டு முருகன் சன்னதியை விட்டுக் காலை எடுத்து வெளியே வைக்க, சத்தியபாமா கண்ணீர் மல்க அவர்களைப் பார்த்தார்

ஆம், அழைப்பில்லாமலேயே சென்றிருந்தாலும் மகனின் திருமணத்தைத் தெள்ளத் தெளிவாக கண் குளிரப் பார்த்து விட்டார். கண்ணீரில் கண்கள் குளிர்ந்து தான் கிடக்கின்றன. மனம் குளிர்ந்திருக்கிறதா என்ன என்று அவராலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கண்ணீரைத் துடைத்துவிட்டு நிமிர்ந்த நொடி, முகுந்தனின் பார்வையும் அவரது பார்வையும் ஒன்றை ஒன்று நோக்கின.

தொடரும்.
 

Author: Sungudi
Article Title: உருகியோடும் 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
தாய்க்கு தெரியாமல்
திருமணமா....
திருட்டு கல்யாணம் ஏன்
தவறு எங்கு நடக்கிறது
தாயின் வளர்ப்பிலா???
தாயே பதறுவது ஏன்??
👏🏻👏🏻👏🏻💐👍🏻
 
Top Bottom