• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உருகியோடும் 3

Sungudi

Moderator
Joined
Apr 6, 2025
Messages
20
உருகியோடும் மெழுகு போல 3

3. சித்திரமே நில்லடி

கலைந்த சித்திரம் போல் படுத்திருந்தாள் சித்திரை வடிவு.‌ காலைச் சூரியன் அறைக்குள் நுழைய இடுக்குகளைத் தேடிக் கொண்டிருந்தது. வெற்றிக்களிப்புடன் அமர்ந்து சித்ராவைப் பார்த்திருந்தான் முகுந்தன். தன் இரு உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டான். ஆயுள் ரேகை, அட்சய ரேகை, இன்ன பிற ரேகைகள் எல்லாம் என்ன சொல்கின்றன என்று யோசித்துப் பார்த்தான்.

‘நமக்கு எல்லாமே டாப்பா தான் இருக்கும்.‌ ஏன்னா எனக்கு ஆல்வேஸ் நல்ல நேரம் தான்’ தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். அந்த ரேகைகளின் பின்னால் அறிவியல் பூர்வமாக என்ன இருக்கிறது என்று அவனுக்குத் தெரியாது. ஜோதிடம் சொல்லும் தகவல்கள் முழுவதுமாகத் தெரியுமா என்றால் அதுவும் இல்லை. அவனைப் பொருத்த வரை அவை அவன் உரையாடலைத் துவங்குவதற்கான கோடுகள். ஒருவரை அவன் ஆழம் பார்ப்பதும், நூல் விட்டுப் பார்ப்பதும் அப்படித்தான்.

முகுந்தன் தொழில் முறையில் ஒரு ஜோசியர். அப்படித்தான் சொல்லிக் கொள்கிறான். விசிட்டிங் கார்டு அச்சடித்து அதில் பி ஏ அஸ்ட்ராலஜி என்று போட்டிருக்கிறான். ஆனால் எட்டாம் வகுப்புப் பாதியில் நிறுத்திவிட்டவன். கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாததால் முகமும் உருவமும் திருத்தமாகவே இருக்கும். அவனுக்கு அப்பா கொடுத்துவிட்டுப் போன சொத்துக்கள் சிலவற்றில் இந்த தோற்றப் பொலிவும் ஒன்று. வெள்ளையும் சொள்ளையுமாக இவன் போய் நின்றால், ‘நான் எட்டாம் வகுப்பு ஃபெயிலானவன்’ என்று அவனே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.

டீக்கடை மாஸ்டராக இருக்கட்டும், பூக்காரப்பாட்டியாக இருக்கட்டும், உழைப்பவர்களின் கையை போகிற போக்கில் உற்றுப் பார்க்கும் முகுந்தன், “உங்களுக்கு இப்ப உடல் நலத்துல ஒரு பிரச்சனை இருக்கணுமே?” என்றோ, “குடும்பத்தில் ஓயாத மனப் போராட்டம் இருக்குமே?” என்றோ ஆரம்பிப்பான்.

உழைப்பவர்களுக்கும், அடிமட்டத்தவர்க்கும் உடல் பிரச்சினைகளும் வீட்டுப் பிரச்சினைகளும் என்றைக்குத் தான் இல்லாமல் இருக்கும்? “கரெக்டா சொல்லிட்டீங்களே! எப்படி?” என்பார்கள்.

“உங்க ரேகை சொல்லுது. நீங்க டீ ஆத்தும் போது பார்த்தேன்”

“அட! என்ன சொல்லுது என் ரேகை?” என்று எதிராளி கேட்டு விட்டான் என்றால் முகுந்தன் வீசிய பந்தில் அந்த விக்கெட் ஆட்டம் காணத் துவங்கி விட்டது என்று அர்த்தம்.

அரசு ஊழியர்கள், ஈபி ரீடிங் எடுக்க வந்த பணியாளர், யாசகம் கேட்கக் கையேந்தித் யாசகர் என்று இவன் பார்த்த உள்ளங்கைகள் ஏராளம். பஸ் கண்டக்டரைக் கூட விட்டு வைக்கவில்லை.

அவர்கள் வாயிலிருந்தே ஒன்றிரண்டு வார்த்தைகளை வரவழைத்து, அதன் மூலமாக இவன் ஒரு பிட்டை போட்டு, பின்,

“இவ்வளவு தான் இன்னைக்கு மனசுல தோணுது. நேரம் இருக்கும்போது எனக்குக் கூப்பிடுங்க, எல்லாத்துக்கும் விசிட்டிங் கார்டு கொடுக்க மாட்டேன், என்னமோ உங்களைப் பார்த்தவுடனே குடுக்கணும்னு தோணுச்சு” என்றபடி விசிட்டிங் கார்டை நீட்டுவான்.

அந்த மனிதரும் இவன் சொன்னதை எல்லாம் அசை போட்டு, யோசித்து, ஒரு வாரத்திற்குள் இவன் எண்ணுக்கு அழைத்து விடுவார். இந்த நபர் இத்தனை நாளில் தனக்கு அழைப்பார் என்பது வரை அவனுக்குத் தெளிவாகத் தெரியும் ஏனென்றால் அவன் கொளுத்திப் போட்ட வெடி தானே. எப்போது வெடிக்கும் என்பது தெரியாதா?

அந்த நபரின் தொலைபேசி அழைப்புக்காகக் காத்துக் கொண்டிருப்பான் தான். ஆனால் அவர்கள் அழைத்தவுடன் ஆலாய்ப் பறப்பது போல் காட்டிக் கொள்ள மாட்டான். அழைப்பை ஏற்றவுடன் தன் எதிர்பார்ப்பைக் குரலில் காட்டாமல், “யாரு.. யாரு? எங்க பார்த்தேன்?” என்றெல்லாம் இழுத்துவிட்டு, “ஓ! சரி சரி லைட்டா ஞாபகம் இருக்கு. சொல்லுங்க..” என்பான்.

அவர்கள், “இல்ல.. நீங்க இப்படி ஒரு பிரச்சனைன்னு சொன்னீங்களே?” என்றவுடன்,

“ஆமா, இன்னைக்கு ஏழரை டு ஒன்பது ராகுகாலம். ஒரு ஒரு மணி நேரம் கழிச்சுக் கூப்பிடுறீங்களா?” என்பான். “இன்னைக்கு அசைவம் சாப்பிட்டேன் அதனால ஜோசியம் விஷயமா எதுவும் பேச மாட்டேன்” என்பான். சமயங்களில் “மௌன விரதம். நாளை நானே கூப்பிடுகிறேன்” என்று மெசேஜ் கூட தட்டி விடுவான். இப்படியாக அந்த நபரின் எதிர்பார்ப்பை எகிற வைத்து பின் ஏதாவது ஆலோசனை சொல்வான்.

அப்படி இப்படி என்று எதையாவது ஒரு கணக்கைச் சொல்லி அந்த மனிதரைக் குழப்பி விட்டு, “இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா?” என்று அவரையே கேட்க வைப்பான். அவர் கேட்டவுடன், “ஒரு மனுசனோட ஜாதகமும் ரேகையும் பார்த்து அது சொல்றதை உங்ககிட்ட சொல்றது தான் என்னோட வேலை. பரிகாரம் பொதுவா யாருக்கும் பண்ண மாட்டேன். நீங்க விரும்பிக் கேட்கிறதால பண்றேன்” என்பான்.

எந்த நிலையிலும், ‘நான் வந்து உங்களிடம் நிற்கவில்லை, நீங்களாகத் தான் என்னிடம் வந்தீர்கள்’ என்பதாகப் படம் போட்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பான். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று அந்த மனிதர் ஒரு வார்த்தை சொல்லி விட்டார் என்றால் இவன் வலையில் முழுவதுமாக விழுந்து விட்டார் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்‌.

அதன்பின்‌ அவனது வேலை சுலபம். “உங்க ஜாதகத்தை வாட்ஸ்அப்ல அனுப்புங்க. பாத்து வைக்கிறேன். அப்புறம் இந்த இடத்துக்கு வாங்க, நான் என்னென்ன பண்ணலாம்னு கணக்குப் போட்டுச் சொல்றேன்” என்பான். அந்த இடைப்பட்ட காலம் என்பது ‘இந்த நபரிடம் எப்படி காசைக் கறக்கலாம், சிங்கிள் பேமென்ட்டா அல்லது இன்ஸ்டால்மென்டா’ என்பதைத் தீர்மானிக்க இவன் எடுத்துக் கொள்ளும் கால அளவாக இருக்கும்.

“ஜாதகம் பாக்குறதுக்கு சென்டர், ஆபீஸ் எதுவும் வச்சிருக்கீங்களா தம்பி?” என்று கேட்டவர் நிறைய பேர். அதைத்தான் தினம் தினம் சத்தியபாமாவும் கேட்கிறார்.

“வேற வேலைக்குப் போன்னு சொல்றேன் கேக்க மாட்டேங்கற.. சரி இருக்கட்டும்.. அதுதான் தொழில்னு ஆகிப்போச்சுன்னா ஒரு கடையை வாடகைக்கு எடுத்து உக்காரேன் தம்பி.. அங்கே இங்கே புரட்டி அட்வான்ஸ்க்கு காசு ரெடி பண்ணித் தரேன்” என்பார்.

‘நான் காட்டாற்று வெள்ளம் போல. என்னை யாராலும் அணை கட்டி தடுத்து வைக்க முடியாது’ என்று பதில் சொல்வான்.

ஆனால் உண்மை அதுவல்ல. யாராவது ஒருவர் தனது தகிடுதத்தங்களைக் கண்டுபிடித்து சண்டை போடவோ, கைது செய்யவோ வந்து விட்டால் என்ன செய்வது? ஒரு அலுவலகம் என்று இருந்தால் வேலைக்கு வசதி தான், அலேக்காக அள்ளிக் கொண்டு போக அடி வெளுக்க வருபவனுக்கும் அது வசதி தான் அல்லவா?

எனவேதான் விசிட்டிங் கார்டையும் வாய் ஜாலத்தையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டிருக்கிறான் முகுந்தன்‌.
மாதக்கணக்கில் வீட்டிற்கு ஐந்து ரூபாய் கூட கொடுக்காது அலைபவன் திடீரென்று ஐம்பதாயிரத்தைக் கொண்டு வந்து நீட்டுவான். “இவ்வளவு காசு எதுக்குடா? ஒழுங்கா ஒரு வேலைக்குப் போ. என்னைக்கா இருந்தாலும் இதெல்லாம் பிரச்சனைதான். சிக்கலில் மாட்டிக்குவே” என்றபடியாக இவன் காதில் சத்தியபாமாவின் அறிவுரை விழுந்தால், அடுத்த நான்கைந்து நாட்களுக்கு வீட்டுப் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டான்.

‘என்னவும் செஞ்சுட்டுப் போ, வீட்டுக்கு வந்தாப் போதும்’ என்ற நிலைக்கு சத்யபாமா வந்தவுடன் மெல்ல ஒன்றுமே நடக்காதவன் போல் வீட்டுக்கு வருவான். இந்த நாடகம் எல்லாம் சத்தியபாமாவுக்கு எப்போதோ பழகிப் போய்விட்டது.

மகனின் திடீர் திருமணம் முடிந்த அன்று இரவு முழுவதும் தூக்கமும் விழிப்புமாகப் படுத்திருந்த அவர், அப்போதுதான் எழுந்து பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்தார்.

‘குழந்தைத் தன்மை மாறாமல் இருக்கு இந்தப் பொண்ணு. கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுக்கலாம் போல இருக்கு. இந்தப் பிள்ளையை எப்படி, என்ன சொல்லி கரெக்ட் பண்ணினானோ?’ என்ற எண்ணம் தான் அவர் மனதில் ஓடியது.

சித்ராவையும் ரேகையை வைத்துத் தான் பிடித்தான் முகுந்தன். தவறாமல் கோவிலுக்கு வரும் அவள் தீபாராதனைத் தட்டில் இருந்து சுடரின் வெப்பத்தைக் கையில் வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் போது, அருகில் இருந்து,

“வளர்ந்த குழந்தை நீங்க. எப்பவும் சந்தோஷமா சிரிச்சுக்கிட்டே இருப்பீங்க” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக.

கோவிலில் வைத்து திடீரென்று யாரோ பேசுகிறார்களே, யார் இது என்று நிமிர்ந்து பார்த்தவன், “உங்க ரேகை சொல்லுதுங்க! வாழ்க வளமுடன்!” என்று விட்டு, தன் கையில் கொடுக்கப்பட்ட விபூதியை ஒரு பேப்பரில் தட்டி மடித்துக் கொண்டே நகர்ந்து விட்டான்.

அன்று முழுவதும் தன் கையை அப்படியும் இப்படியுமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா. அடுத்த நாள் எதேச்சையாக வருபவன் போல் சித்ராவின் முன்னால் முகுந்தன் சென்று நிற்க, சாமியைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு அப்படியே சித்ராவையும் பார்த்துத் திரும்பிப் புன்னகைத்தான்.

பரிச்சயமான பார்வையைக் கொடுத்தாள் சித்ரா. அடுத்த நாளில் லேசான ஒரு புன்னகையை வீசினாள்.

ஒரே வாரத்தில், “வேற என்ன சொல்லுது என்னோட ரேகை? சொல்லுங்க பாப்போம்” என்று அவன் முன் தன் கையை நீட்டிய வண்ணம் பிரகாரத்தில் அமர்ந்திருந்தாள்.

பட்டும் படாமலும் அவள் கையைப் பிடித்துக் கொண்டு தன் பொய் மூட்டையை அவிழ்த்து விடத் துவங்கியிருந்தான் முகுந்தன்.

கொஞ்சம் அழகு, கொஞ்சம் மிடுக்கு, நிறைய வாய் ஜாலம்- இது போதுமானதாக இருந்தது சித்ராவுக்கு. அது மட்டுமல்ல, நீண்ட நாட்களாக வீட்டிற்கு சம்பாதித்து போடும் ஒரு தன்னம்பிக்கை, தான் யாரை கை காட்டினாலும் அம்மா ஒன்றும் சொல்ல மாட்டாள் என்ற சிந்தனை எல்லாம் சேர்த்து சித்ராவை வளைத்தது.

முகுந்தன் போட்ட ஸ்கெட்ச் மற்றுமொரு முறை வெற்றிகரமாக நடந்தேறியது. மற்றவர்களிடம் பழகும் பொழுது முகுந்தனின் ஒரே நோக்கம் அவர்களை ஏமாற்றுவது தான். ஆனால் சித்ராவிடம் அப்படி அல்ல. ஏனோ இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை முழுவதும் உடன் பயணிக்கலாம் என்று தோன்றியது. வேறு விதங்களில் பழகிக் காதல் சொல்வதை எல்லாம் அவன் நினைத்தே பார்ப்பதில்லை. அவனுக்குத்தான் கைவசம் அவனுடைய பலமுறை நிரூபிக்கப்பட்ட டெக்னிக் இருக்கிறதே. அதில் தான் அவன் கரைகண்டவன் ஆயிற்றே, அதையே சித்ராவிடமும் பிரயோகித்தான்.
அவர்கள் அலைபேசி எண்ணைப் பரிமாறிக் கொண்ட ஓரிரு தினங்களில் அவர்கள் ஒரு பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். “நேரமாச்சு! வரேன்” என்று விடைபெற்று சில எட்டுக்கள் எடுத்து வைத்திருப்பாள் சித்ரா.

“எனக்கு ஒரு கால் பண்ணு பார்ப்போம்” என்றான் ஒரு இருக்கையில் அமர்ந்தபடி. சித்ரா நடந்து கொண்டே அவன் எண்ணிற்கு அழைக்க, அவனது அலைபேசி, “சித்திரமே நில்லடி, முத்தமிட்டால் என்னடி” என்று பாடியது.

அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்த சித்ரா, அவனது பார்வையைக் கண்டவுடன் வெட்கப் புன்னகை ஒன்றைச் சிந்தி விட்டு விறு விறுவென்று நடந்தாள்.

தொடரும்..
 

Author: Sungudi
Article Title: உருகியோடும் 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
ஜாதகம் வைத்து தனக்கு
சாதகமாக மாற்றி
சூதனமாக இருந்து
நூதனமாக ஏமாற்றி
பாதகமாய் ஒரு பெண்ணின் வாழ்வை
புதைத்து விட்டாயே...
பெண் பாவம் பொல்லாதது....
 
Top Bottom