• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

காதல் காலமிது 12. பாப்பா கெஹ்தே ஹை

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
308
காதல் காலமிது 12

பாப்பா கெஹ்தே ஹை

மாலை வாங்கப் போன அர்ஜுன், வேஷ்டி புடவை வாங்கப் போன மேனகா என்று எல்லாரும் திரும்பி வந்திருக்க, மோதிரம் வாங்கப் போன மித்ரனை மட்டும் காணவில்லை.

“எங்கே போனான் இந்த மித்ரன். அவன் கூடயே சுத்திக்கிட்டு இருக்குற பூனையும் இங்கதான் நிக்குது” என்று எல்லாரும் தேட,

“ஃபோன் பண்ணினேன். கடையை விட்டுக் கிளம்பிட்டேன்னு சொல்லி முக்கா மணி நேரம் ஆச்சு.. வந்துருவான்” என்றார்கள் யாரோ.

மித்ரன் ரிசார்ட்க்கு வரும் வழியில் தன் காரில் அமர்ந்தவாறு ஒரு தெளிந்த நீரோடையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனம் தான் குழம்பிக் கிடந்தது. சட்டை பாக்கெட்டில் தயாளனுக்கும் செவ்வந்திக்கும் வாங்கிய இரு ஜோடி மோதிரங்கள் பத்திரமாக இருக்க, உள்ளங்கையில் வேறு இரண்டு மோதிரங்கள்.

“என்னடா எதிர்பார்த்ததை விட டபுள் மடங்கு காசுக்கு மோதிரம் வாங்கி இருக்கே” என்று ஃபோனில் கேட்டார் அவன் அப்பா.

“என்ன டபுள் மடங்கா?” என்று அவன் கேட்க,

“ஆமாடா உன்னோட இண்டியா அக்கவுண்டுக்கு நீ என்ன ட்ரான்ஸாக்ஷன் பண்ணினாலும் எனக்குத் தான் எஸ்எம்எஸ் வரும்னு தெரியாதா உனக்கு* என்று அவர் கேட்க,

“அது ஒன்னும் இல்ல.. சித்தப்பாவுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் வாங்கினேன்” என்றான்.

“அப்பாக்கு ஒன்னும் கிடையாதா டா?” என்றார் அவர்.

அடுத்த வாரம் அவர்களுக்கு அறுபதாம் கல்யாணம் வருகிறது, அதற்காக மகன் சர்ப்ரைஸ் தருவான் என்று எதிர்பார்த்தார்.‌ அவரது மெக்கே பிக்கே சிரிப்பு ஆடியோ காலில் கூட அவனுக்கு தெளிவாகக் கண் முன் ஓடியது.

மித்ரனின் உள்ளங்கையில் இருந்த இரண்டு மோதிரங்கள் இளம் வயதுக்காரர்களுக்கானவை. குறிப்பாகச் சொல்லப்போனால், மித்திரனின் அளவில் ஒன்று, ரித்திகாவின் மோதிர விரலுக்குச் சேரும் என்று மித்ரன் எதிர்பார்த்த உத்தேசமான அளவு ஒன்று.

இரண்டு மோதிரங்களையும் அருகருகே வைத்தால் ஒன்றை ஒன்று ஒட்டிக்கொண்டு ஒரே பெரிய இதயமாகக் காட்சி அளிக்கக் கூடியது. தனியாகப் பார்த்தால் வேறு மாதிரி டிசைன் தெரியும். கிட்டத்தட்ட அதேபோல ஒன்றைத்தான் தயாளனுக்கும் செவ்வந்திக்கும் கூட வாங்கியிருந்தான். ஆனால், அதைவிட இது அழகாக இருந்தது.

தனக்கு பெஸ்ட் வேண்டும் என்று நினைப்பது தவறில்லையே. இப்படி ஒரு மலைப்பிரதேசத்தின் அருகில் இருக்கும் சிறிய நகைக் கடையில் இவ்வளவு அழகாக டிசைன்கள் இருக்கும் என்று யார் கண்டார்கள். ஒருவேளை இந்த நிச்சயதார்த்தத்தைப் போல சர்ப்ரைஸ் நிகழ்வுகள் இங்கே நிறைய நடக்குமோ என்னவோ.

‘இப்ப நான் ஏன் மோதிரம் வாங்கினேன்?’ நூறாவது முறையாகத் தன்னையே கேட்டுக் கொண்டான் மித்ரன். ‘எனக்கு அந்தப் பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கா? இல்லல்ல.. எப்படின்னாலும் ஏதாவது ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணனும்.. அது இந்த ரித்துவா இருந்தா என்ன.. அதுதான் என் மனசுல ஓடுது’ அவனே பதில் சொல்லிக் கொண்டான்.

இப்போது அவன் செல்ஃபி கேமராவை ஆன் செய்து வைத்து அதில் தெரிந்த தன் முகத்திடம் பேசிக் கொண்டிருந்தான்‌. ‘அது எப்படிடா.. அந்தப் பொண்ணுக்கு வேற டிசைன் புடிச்சிருந்ததுன்னா? இல்ல இந்த மோதிரம் சேராமப் போயிடுச்சுன்னா?’ என்று கேட்டது கேமராவில் இருந்த அவனுடைய உருவம்.

‘அதெல்லாம் சேரும். ரித்து கைவிரல் இந்த சைஸ்ல தான் இருக்கும். நான் சொன்னா சரிதான்’ என்றான் அவன்.

அலைபேசியில் தெரிந்த அவன் முகம், ‘அப்ப அந்த பொண்ணுக்கு தான் மோதிரம்னு முடிவு பண்ணிட்டியா? அப்புறம் ஒத்துக்கோயேன் டா.. ரித்திகாவ லவ் பண்றேன்னு.. ரித்து ரித்துன்னு இதுவரைக்கும் ஷார்ட் நேம்ல வேற கூப்பிட்டு இருக்கே?’ என்றது அவன் செல்ஃபி முகம்.

‘வாய மூடு!’ என்று அந்த கேமராவில் தெரிந்த முகத்தின் வாயிலேயே போட்டவன், ஃபோனை அணைத்து டேஷ்போர்டில் போட்டான். கையில் வைத்திருந்த மோதிரத்தை பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டு ரிசார்ட்டை நோக்கி காரை நகர்த்தினான்.

“சீக்கிரம் கிளம்பு என் தம்பிக்கு ஒரு நல்லது நடக்குதேன்னு உனக்கு ஆர்வமே இல்லையா?” அங்கே அர்ஜுன் மற்றும் மித்ரனின் அம்மா எந்தப் புடவையைக் கட்டுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க, அவர்களின் அப்பா கடுப்பில் இருந்தார். வாய் விட்டுக் கேட்டும் உங்களுக்குத் தான்பா கிஃப்ட்னு இந்த மித்ரன் பய சொல்லலையே.. இந்த அர்ஜுன், மூத்த பிள்ளையா லட்சணமா, அப்பாவோட அறுபதாம் கல்யாணத்துக்கு வேலை பாக்காம தன்னோட கல்யாணத்திலேயே போராடிட்டு இருக்கான்.. இப்படி அரை வேக்காடுங்களையா பெத்து வச்சிருக்கேன்.. ம்ஹும்.. 60 வயசாச்சு.. வாய் விட்டு கிஃப்ட் கேட்கிறேனே.. நானே ஒரு ஹாஃப் பாயில்ட் தானோ?’ என்ற சிந்தனையில் இருந்த அவர், தன்னுடைய கடுப்பை மனைவிக்கும் கொஞ்சம் ட்ரான்ஸ்பர் செய்தார்.

“என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க தயாளனுக்குக் கல்யாணம்னா எனக்கு எவ்வளவு சந்தோஷம்.. அதுவும் செவ்வந்தி மாதிரி ஒரு பொறுப்பான பொண்ணு வந்தா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.. இங்கே பாருங்க.. பத்து பட்டுப் புடவை கொண்டு வந்தேன்.. மெஹந்தி, சங்கீத், கல்யாணம், ரிசப்ஷன்னு எல்லாமே காலி ஆயிடுச்சு.. இப்ப புதுசா ஒரு புடவையும் இல்லை. மேனகா கடைக்கு போனாளே.. அவகிட்ட சொல்லி எனக்கும் ஒரு புதுப் புடவை வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கலாம்..” என்று அர்ஜுன் அம்மா வருத்தப் பட்டார்,

“நினைச்சேன் கல்யாணப் பொண்ணை விட அதிகமாக காஸ்ட்யூம் மாத்தினவ நீதான்.. அப்பவே புதுப் புடவை எதுவும் கேட்பேன்னு நெனச்சேன்.. நல்ல வேளை வர்ற வழியில எதுவும் ஜவுளிக்கடை தென்படலைன்னு நிம்மதியா இருந்தேன்.. இந்தா கேட்டுட்டேல்ல.. இருக்கிறதுல ஒரு புடவையைக் கட்டு.. இதோ இதை நீ கொஞ்ச நேரம் தான் கட்டியிருந்தே..” என்று ஒரு புடவையை எடுத்து அர்ஜுன் அப்பா கொடுக்க,

“பாருங்களேன் என்னை விடத் துல்லியமா நீங்க தான் கவனிச்சு இருக்கீங்க.. உங்களுக்கு என் மேல அவ்வளவு லவ்வு.. என்னங்க?” என்றார் அர்ஜுன் அம்மா பாசமாக..

“லவ் கிடக்குது லவ்வு.. நீ கிளம்புற மாதிரித் தெரியல.. நான் தயாளனுக்கு எதுவும் உதவி வேணுமான்னு கேக்கப் போறேன்.. விட்டா அடுத்த வாரம் நம்ம அறுபதாம் கல்யாணத்தையும் இங்கேயே கொண்டாடலாம்னு சொல்லுவ”

“அட! அது கூட நல்ல ஐடியாவா இருக்குங்க.? நாம செகண்ட் ஹனிமூன் எங்கேயாவது போகணும்னு உங்ககிட்ட 40 வருஷமா கேட்கிறேன்.. இதோ இப்ப இங்க வந்திருக்கோமே.. வந்திருக்கிற கெஸ்ட் எல்லாம் போகட்டும்.. நாம மட்டும் ஒரு வாரம் இங்கே தங்கிடுவோம். மறுபடி அறுபதாம் கல்யாணத்துக்கு இதே ஹாலை புக் பண்ணி எல்லாரையும் இங்கே வரச் சொல்லிடலாம்.. இது ரொம்ப ராசியான ஹால் மாதிரி தெரியுதுங்க.. அங்கே கோயில்ல வச்சிருக்கற ஃபங்ஷனை இன்னொரு நாள் பாத்துக்கலாம். என்ன சொல்றீங்க?”

அவசரத்துக்கு அடிப்பதற்கு எதுவும் அகப்படாமல் அங்குமிங்கும் சுற்றிப் பார்த்துவிட்டு தன் கையால் தன் தலையிலேயே அடித்து விட்டு வெளியேறினார் அர்ஜுனின் அப்பா.

“இத்தனை வயசாகியும் பொண்டாட்டி ரொமான்டிக்கா இருக்காளே அப்படின்னு இந்த மனுஷனுக்குத் தோணுதா?” சலித்தபடி அவர் கைகாட்டிய புடவையை அரை மனதுடன் கட்டக் கிளம்பினார் அர்ஜுன் அம்மா.

அங்கே மேனகாவின் பெற்றோர் சுஜித்திடம், “இருடா.. உங்க அம்மாவும் அப்பாவும் வருவாங்க.. கடைக்குப் போயிருக்காங்க” என்று சொல்ல, அதனால என்ன மெதுவா வரட்டும் என்பது போல் கண்டு கொள்ளாமல் பார்த்தான் சுஜித்.

அழகுக் கலை நிபுணரை வரவைத்து செவ்வந்திக்கு ஃபேசியல், மேனிக்யூர், பெடிக்யூர் என்று என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் செய்து கொண்டிருந்தனர். செவ்வந்திக்கு வெட்கமான வெட்கம்.

“ஐயோ இதுங்க எல்லாம் சேர்ந்து என்னை மேக்கப் பண்றேன்னு பாடா படுத்துங்களே.. இத்தனை வயசுக்கு மேல எனக்கு கல்யாணம் வருது.. அதைப் பத்தி நான் தனியா உக்காந்து, யோசிச்சு, மனசுல புகுத்திக்கிறதுக்குக் கூட அவகாசம் கொடுக்க மாட்டேங்குதுங்க” என்று சலித்துக் கொண்டார். உண்மையில் தயாளனின் அழைப்புகள் அவரது அலைபேசிக்கு மாறி மாறி வந்த வண்ணம் இருந்தன.

“டூயிங் ஃபேஷியல்”, “நௌ ஹேர் கட்” என்று அவரும் மெசேஜ் செய்து தயாளனை சமாளித்து வந்தார். சுற்றிலும் உறவுக் கூட்டம் அதுவும் இதுவும் பேசியபடி சலசலத்துக் கொண்டிருந்தது.

அழகு நிலையப் பெண்ணே, “மேடம்! வேணும்னா பாத்ரூம்குள்ள போய் பத்து நிமிஷம் போன் பேசிட்டு வரீங்களா?” என்று பிறர் கேட்காத வண்ணம் செவ்வந்தியின் காதில் கடித்தார். திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண் எப்படிப் ‘பொழுதன்னைக்கும்’ கடலை போடுவாள் என்று தெரியாதவர்களா அழகுநிலையப் பெண்கள்?

வெட்கத்தை அடக்க முடியாத செவ்வந்தி, “இருக்கட்டும் பாப்பா! நீ ஹேர் கட்டை முடி” என்று கண் மூடி அமர்ந்து கொண்டார். மாஸ்க் போட்ட முகத்திற்கு ஊடாகத் தெரிந்த அவரது புன்னகையை வைத்து அவரது வெட்கத்தின் அளவுகோலை கணக்கிட்டு கொண்டு அழகு நிலையப் பெண் ரகசியமாகச் சிரித்தாள்.

நிச்சயதார்த்த ஏற்பாடுகளில் மற்றவர்கள் இருக்க, ரித்திகாவோ கடமையை கண்ணாக, எதிர்வரும் தன் வெளிநாட்டுப் பயணத்தை முன்னிட்டு தங்கள் குழுவினருடன் ஒரு ஜும் மீட்டிங்கில் இருந்தாள். அவர்களுடையது ஒரு பெண்ணிய அமைப்பு. அதனை குழு, அமைப்பு, இயக்கம் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.‌ உறுப்பினர்கள் அனைவரும் தீவிர பெண்ணியவாதிகள்

சிலர் திருமணம் ஆகி, கணவன் குழந்தை என்று வசிப்பவர்கள். சிலர் திருமண உறவிலிருந்து வெளியே வந்து விட்டவர்கள். இன்னும் சிலரோ திருமணமே வேண்டாம் என்று இருப்பவர்கள். ஒரு மணி நேரம் திட்டமிட்ட கூட்டம் நாற்பது நிமிடத்தில் முடிவடைந்தது. இன்னும் 20 நிமிடம் இருந்தது.

“என்னாச்சு ரித்திகா? நீ வழக்கத்தைவிட இன்னிக்கு சீரியஸா இருக்கிற மாதிரி தெரியுது” என்றாள் ஒரு தோழி.

“அதை ஏன் கேக்குறே.. ரித்திகா வீட்ல ஒரே களேபரம்.. மேடம் மேட்ச் மேக்கிங்ல பிஸி..” என்றார் மூன்றாவதாக ஒரு பெண்மணி.

“என்ன மேட்ச் மேக்கிங்கா? எதுவும் தீப்பெட்டி கம்பெனில பார்ட் டைம்ல வேலைக்கு சேர்ந்திருக்கியா?” என்றார் அந்த மத்திய வயதுப் பெண்மணி.

“இது இன்னொரு மேட்ச் பேக்கிங். கல்யாணத்துக்கு ஜோடி சேக்குறது..” என்றாள் கல்யாணத்துக்கு எதிராக அந்தக் குழுவுக்குள்ளேயே இயங்கும் ஒரு சிறு குழுவின் தலைவி.

“என்ன கல்யாணமா? யாருக்கு? ரித்திகாவுக்கா?” ஆச்சரியக் குரல்கள்.

“போன இடத்துல எவனும் உன்னைப் பார்த்து மயங்கிட்டானா! இல்லை நீ மயங்கிட்டியா? எப்ப கல்யாணம்?”

“அடங்குங்க எல்லாரும்” என்றாள் அந்த ஆன்ட்டி- கல்யாண ப்ராஜெக்ட்காரி.

“கல்யாணம் எனக்கு இல்ல..”

“அவங்க சித்திக்கு பொருத்தமா ஒரு மாப்பிள்ளை தேடி நிச்சயதார்த்தம் பண்ண ரித்திகா உதவியா இருந்திருக்கா” என்றாள் அவளது அத்தியந்த சினேகிதி.

“எங்க சித்தி ஒருத்தி தான் கல்யாணம் பண்ணிக்காம நிம்மதியா இருக்காங்க அப்படின்னு சொல்லுவியே.. இப்ப அந்த விக்கெட்டும் விழுந்திருச்சா?”

அத்தனை கேள்விகளுக்கும் ரித்திகா எந்த பதிலும் சொல்லவில்லை. “என்ன, பதிலே பேச மாட்டீங்குற? இந்த விஷயத்துல நாங்க பேசினது பிடிக்கலையா?”

“அதெல்லாம் இல்ல நானுமே செவ்வந்தி சித்தியை இத்தனை வயசுக்கு அப்புறம் ஒரு திருமண பந்தத்தில் மாட்டி விடணுமான்னு தான் யோசிச்சேன்.. ஆனா அவங்க நிஜமாவே இந்த ஆளைக் கட்டிக்கிட்டா சந்தோஷமா இருப்பாங்க.. என்னதான் நமக்கு சரிக்கு சமமாப் பேசினாலும் அவங்க சிந்தனை எல்லாம் வயசானவங்க மாதிரி தான் இருக்கும்.. நம்மளை மாதிரி துணிச்சு முடிவெடுக்கிற கெபாசிட்டி கொஞ்சம் கம்மிதான். அதனால அவங்களுக்கு கல்யாணம்ங்குற ஆப்ஷனை சூட்டபிளா இருக்கும்னு நினைச்சேன். அதுவுமில்லாமல் சட்டுன்னு தோணுச்சு..
ஐடியா கொடுத்தேன்” என்றாள் ரித்திகா.

“உனக்கும் அப்படி ஏதாவது சட்டுனு தோணுமா? ஒரு பூ பூக்க ஒரு நொடி தான் வேணும்னு சொல்லுவாங்களே? அதே மாதிரி?” இன்னும் காதல் கல்யாணம் அனைத்திலும் நம்பிக்கை வைத்திருந்த ஒரு ரொமான்டிக்கான பெண்ணியவாதி கேட்க,

“யோசிக்க வேண்டிய விஷயம். யோசிச்சுட்டு அடுத்த மீட்டிங்ல சொல்றேன்” என்று அழைப்பைத் துண்டித்தாள் ரித்திகா.

ஒரு வழியாக அந்தா இந்தாவென்று நேரத்தை கடத்திவிட்டு மித்திரனின் கார் ரிசார்ட்டுக்குள் நுழைந்திருந்தது. அவனுக்காகவே காத்திருந்தார் அவனுடைய அப்பா. பார்க்கிங்கில் வைத்தே அவனைச் சந்தித்தார். அங்கே அவனும் அந்தப் பெர்ஷியப் பூனையும் வழக்கமாக அமரும் பெஞ்ச் காலியாகக் கிடந்தது. “மித்ரன் இங்கே வா உன் கூட பேசணும்” என்று அப்பா சொல்ல, அவனும் அந்த பெஞ்ச்சை நோக்கி நகர்ந்தான்.

அங்கேயே தள்ளி நின்று இவனுடைய வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்த அந்த பூனை குதித்தோடி வந்துவிட்டது. “அட! இந்த சோப்ளாங்கி பூனை இவ்வளவு சுறுசுறுப்பா என்னைக்காவது ஓடி வந்து பாத்திருக்கியா? இந்தப் பையன அதுக்கு ரொம்பப் புடிச்சிருச்சு போல” என்று இரண்டு வயதான தோட்டக்காரர்கள் பேசிக் கொண்டனர்.

“சொல்லுங்கப்பா!” என்றபடியே மித்ரன் மேல் சட்டை பாக்கெட்டில் இருந்து தயாளனுக்காக வாங்கி இருந்த மோதிரங்களை காட்டினான். “நல்லா இருக்குப்பா” என்றார் அவன் தந்தை.

நல்ல வேளை அந்த எக்ஸ்ட்ரா தொகைக்கு வாங்கிய நகை எங்கே என்று கேட்கவில்லை. பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு தன்னுடைய ரகசிய மோதிரங்கள் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டுக் கையை எடுத்தான் மித்ரன். அந்தப் பூனை அந்த பாக்கெட்டின் அருகே வந்து தலை வைத்துப் படுத்துக்கொண்டது என்ன பேசுவது என்று தெரியாமல் சற்று நேரம் சும்மா அமர்ந்திருந்தான் மித்ரன்.

“அப்பா சொல்லுங்கப்பா என்னமோ சொல்லணும்னு சொன்னீங்க” என்று மித்ரன் கேட்க,

“எல்லாம் உன் கல்யாண விஷயம் தான். பாரு.. உங்க அம்மா கொஞ்சம் விளையாட்டா இருந்துட்டா. அண்ணன் வாழ்க்கையில டைவோர்ஸ் அது இதுன்னு வந்தவுடனே நான் ரொம்ப பதட்டப்பட்டுட்டேன்.. ரித்திகா ரொம்ப நல்ல பொண்ணு.. இல்ல உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு.. நீ இன்னும் ஒரு மாசம் இருப்பேல்ல.. அதுக்குள்ள வேற பொண்ண பார்த்து நிச்சயம் பண்ணிடலாம். அடுத்து ஆறு மாசமோ எட்டு மாசமோ நீ வர்ற நேரம் கல்யாணத்தை வச்சுக்கலாம்”

“யோசிக்கிறேன் பா” என்றான் மித்ரன்.

“இனிமேல் யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு.. அந்த ரித்திகா வேணுமா வேண்டாமா?”

“ உங்களுக்கு என்ன தோணுதுப்பா?” என்று முடிவை அவரிடமே விட்டான்.

“உங்க அம்மாவும் அண்ணியும் இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு சண்டை போடுற டைப்பு.. அந்த பொண்ணு ரொம்ப பொறுப்பானது. சின்ன வயசுலேயே பெரிய பெரிய விஷயங்கள் பண்ணுது.. கல்யாணமாகி நம்ம வீட்டுக்கு வந்துட்டா குடும்பத்தைப் பொறுப்பா பாத்துக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. யாரு கண்டா அந்தப் பொண்ணு வந்து நல்ல நேரம், உங்க அம்மா கூட கொஞ்சம் திருந்தலாம், எனக்கு வாழ்க்கைல நிம்மதி கிடைக்கவும் வாய்ப்பு இருக்கு.. உங்க அம்மாவுக்கு ரித்திகாவ ரொம்ப புடிச்சிருக்கு புகழோ புகழ்னு புகழ்றா.. ஆனா அந்தப் பொண்ணு ஒத்துக்குமான்னு தான் தெரியலை” என்றார்.

தன் மனதில் இருப்பதை எல்லாம் அப்படியே அப்பா சொன்னது போல அவனுக்குத் தோன்றியது. “இவ்வளவு சொல்றீங்களேப்பா.. அந்தப் பொண்ணு கிட்ட பேசிப் பார்ப்போம்.. அவங்க அம்மா அப்பா கிட்ட முறையா பேசலாம். அண்ணி ஏதோ காமெடி பண்ற மாதிரி ஆரம்பிச்சு வச்சாங்க. சீரியஸான டாக் (talk) ஸ்டார்ட் ஆச்சுன்னா அப்படியே ப்ரோசீட் பண்ணுங்க எனக்கு எதுவும் அப்ஜக்ஷன் இல்ல” என்றான். ‘அப்பாடி! மோதிரம் வாங்குற அளவுக்கு போயிட்டேன.. இனிமேல் என்னை நானே ஏமாத்திக்கிட்டா நல்லா இருக்காது. அப்பா கேட்டது நல்லதாப் போச்சு! இனிமே யாரு இதைப் பத்திப் பேசினாலும் அப்பா ரொம்ப விரும்பி கேட்டாங்க, அம்மாவுக்கு ரொம்ப ரொம்பப் புடிச்சிருச்சு அப்படின்னு அவங்க மேல பழியை போட்டுடலாம்’ என்று ஒரு மாஸ்டர் பிளானைப் போட்டான் மித்ரன்.

தொடரும்

(பாப்பா கஹ்தே ஹை அப்படின்னா ‘அப்பா சொல்றாரு’ அப்படின்னா அர்த்தம். இது அனுபம் கேர் நடித்த ஒரு படம். செஷல்ஸ் தீவுல ஷூட்டிங் நடந்துச்சு. அப்பதான் செஷல்ஸ் தீவு ரொம்ப ஃபேமஸ் ஆச்சு. சுஷ்மிதா சென்னோ, ஐஸ்வர்யாராயோ பங்கெடுத்த உலக அழகிப் போட்டி ஏதோ ஒன்னு அங்க நடந்ததா நியாபகம்.. சின்ன வயசுலேயே ஹீரோயினோட அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சிட்டாங்க. ஹீரோயினும் அனுபம் கேரும் தாங்கள் அப்பா பொண்ணுன்னு தெரியாமலேயே எதேச்சையா சந்திச்சு பாசமா பழகுறாங்க.. அதுக்கப்புறம் தான் அவங்களுக்கு உண்மை நிலவரம் சர்ப்ரைஸா தெரிய வருது.. அப்பா சொல்றதுக்காக தலையாட்டுறான்ல மித்ரன்.. அதனாலதான் இந்த அத்தியாயத்துக்கு அந்தப் பேரு..
இதே வரிகளோட ஒரு ஆமிர் கான் படத்தில் ஃபேமஸ் பாட்டு இருக்கு. அது செம ஹிட். இன்னிக்கும் நாம கேட்டா முணுமுணுக்க வைக்கும்..)
 

Author: SudhaSri
Article Title: காதல் காலமிது 12. பாப்பா கெஹ்தே ஹை
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom