- Joined
- Jun 17, 2024
- Messages
- 27
அனந்தன் காடு 4
அனந்த பத்மநாபனுக்கு அடிமை செய்பவர் பாக்கியசாலி
பேசுமின் கூசமின்றிப்
பெரியநீர் வேலைசூழ்ந்து,
வாசமே கமழுஞ்சோலை
வயலணி யனந்தபுரம்,
நேசம்செய் துறைகின்றானை
நெறிமையால் மலர்கள்தூவி,
பூசனை செய்கின்றார்கள்
புண்ணியம் செய்தவாறே.
திருவாய்மொழி
ஸ்ரீ ஸ்வாதித் திருநாள் மஹாராஜா
திருவாங்கூர் சமஸ்தானத்தின் ராணி கௌரி லட்சுமி பாய்க்கு முதல் மகவாக கௌரி ருக்மிணி பாய் என்னும் மகள் இருக்க, ராணி இரண்டாவதாகக் கருவுற்றிருந்தார்.
திருவாங்கூரின் அப்போதைய பிரிட்டிஷ் பிரதிநிதியும், திவானுமான கர்னல் மன்றோ (Colonel Munro) பிரிட்டிஷ் அரசு திருவாங்கூர் சமஸ்தானத்தை தங்களுடன் இணைக்காதிருக்க வேண்டி, ராணி பிரசவிக்கும் முன்னரே அரியணைக்கு ஆண் வாரிசு பிறந்து விட்டதாக இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் தலைமைக்கு அறிவித்தார்.
தன் கூற்றின் மகத்துவத்தை உணர்ந்தவர், அது பொய்த்துவிடக் கூடாதென
ஸ்ரீபத்மநாப ஸ்வாமியிடம் பிரார்த்தனை செய்தார்.
‘என் வேண்டுதலை நிறைவேற்றா விட்டால், உன் கோவிலைத் தகர்க்க சட்டம் கொண்டு வருவேன்’ என பத்மநாப ஸ்வாமிக்கே மிரட்டல் விடுத்த கர்னல் மன்றோவின்
விண்ணப்பம் வீண் போகாது, மிகுந்த எதிர்பார்ப்புக்கும் கொண்டாட்டங்களுக்கும் இடையே ராணி ஸ்வாதி நட்சத்திரத்தில் திருவாங்கூரின்
ஆண் வாரிசை ஈன்றெடுத்தார்.
கர்னல் மன்ரோவையும் திருவாங்கூர் சமஸ்தானத்தையும் திருவாங்கூர் சமஸ்தானத்தின் அடுத்த மன்னரையும் சங்கடத்திலிருந்து காப்பாற்றினார் அனந்தபத்மநாபஸ்வாமி.
கருவிலே திருவுடன் பிறந்த ஸ்ரீ ஸ்வாதித் திருநாள் கர்ப்பஸ்ரீமான் என்றே அழைக்கப்பட்டார்.
அரசருக்கெனவே இறையிமன் தம்பி என்பவர் ஒமனத்திங்கள் கிடவோ என்ற தாலாட்டை இயற்றினார்.
அவரது பிறப்புக்கு நன்றி சொல்லும் விதமாக, கர்னல் மன்றோ அனந்தனின் ஆலயப் படிக்கட்டில் தன் தலைப்பாகையை கழற்றி, மண்டியிட்டு வணங்கியதோடு, தன் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றினார். பொன் வேய்ந்த குடையும் தங்கச் சேணமிட்ட குதிரையும் காணிக்கையாக வழங்கினார். அவரது சார்பாக அனந்தனுக்கு வெல்லமும் அரிசியும் சேர்த்து தினசரி அமுது படைக்கச் செய்தார்.
மஹாராஜா பிறந்த சமயம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் வடக்குப் பகுதி மலைகளில் வெள்ளையானை ஒன்று தென்பட்டதை நல்ல சகுனமாகக் கருதி மகிழ்ந்த ராணி, திருவாங்கூரின் பாதுகாப்புக்கு அச்சாரமாகவோ என்னவோ,
ஸ்வாதித் திருநாள் நான்கு மாதக் குழந்தையாக இருக்கையில் அவரை கர்னல் மன்றோவின் பொறுப்பில் ஒப்படைத்தார்.
அடுத்த ஓரிரு மாதங்களிலேயே ராணி கௌரி லக்ஷ்மி பாய் தனது இருபத்து நான்காவது வயதிலேயே இயற்கை எய்த, அவரது தங்கை ராணி கௌரி பார்வதி பாய் அரசின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.
சிறுவயது முதலே கலை, இலக்கியம் இசை, வான சாஸ்திரம், சட்டம் என பல துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த ஸ்ரீ ஸ்வாதித் திருநாள் பதினெட்டு மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
தன் பதினாறாவது வயதில் பட்டமேற்ற ஸ்ரீ ஸ்வாதித் திருநாள் தலைநகரை கொல்லத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றியது நிர்வாக மேம்பாட்டுக்காக என்று சொல்லப்பட்டாலும், கொல்லத்திலிருந்து ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியை நினைத்த நேரத்தில் தரிஸிக்கத் தடையாக இருந்த பயண தூரத்தையும் தொலைவையும் அகற்றுவதுதான் பிரதான காரணம்.
ஸ்ரீஸ்வாதித் திருநாள் நன்கு
கற்றறிந்த பல மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. அந்த மொழியையும், அவர்களது அறிவியல் மற்றும் சமூக முன்னெடுப்புகளையும் புரிந்து, அவற்றால் தன் ராஜ்ஜியத்திற்கும், மக்களுக்கும் நன்மை தரக்கூடியவற்றை ஒவ்வொன்றாக செயல்படுத்தத் தொடங்கினார்.
மக்கள் நலனும் எதிர்காலம் குறித்த அக்கறையும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட மஹாராஜா, தன் குடிமக்கள் இரண்டு பக்க பலன்களும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் பள்ளியையும், மேற்கத்திய மருத்துவ சேவை புரியும் மருத்துவமனையையும் நிறுவினார்.
தைக்காடு மருத்துவமனையில் பெண்களுக்கென தனியிடமும், கால்நடை மருத்துவமனையும், கட்டுமானப் பணிகளும், பால் பண்ணையும் நிறுவினார். திருவாங்கூர் ராஜ்ஜியத்தின் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது.
மஹாராஜா ஸ்ரீ ஸ்வாதித் திருநாளின் சிந்தனையைச் செயலாக்க, திவான் வெங்கட ராவ் மற்றும் திவான் சுப்பா ராவ் இருவரும் முழுமனதுடன் ஒத்துழைத்தனர்.
வானியல் ஆய்வுக் கூடம், விலங்குகள் சரணாலயம் அமைத்தார். நிலங்களை அளந்து அளவை எண்ணை உறுதி செய்தது, பல்வேறு நிலையிலான நீதிமன்றங்களை உருவாக்கியது, கலை மற்றும் கல்விக் கூடங்களை நெறிப்படுத்தியது, என ஸ்வாதித் திருநாள் மஹாராஜா செய்த நலப்பணிகள் அநேகம்.
அந்நாளில் பயணிப்பது எளிதாக இல்லாதபோதிலும்
கலைகளில் மிகுந்த பற்றுக்கொண்ட ஸ்ரீஸ்வாதித் திருநாள் மன்னரின் தர்பாரில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சீனர்கள், ஜப்பானியர்கள், மலேசியர்கள், ஆப்பிரிக்கர்கள் மற்றும் அரபு தேசத்தவர் கூட , திருவாங்கூருக்கு வந்து தங்கள் கலைகளை வெளிப்படுத்தினர்.
‘இசையரசர்’
ஸ்ரீஸ்வாதித் திருநாள் மஹாராஜா ஆங்கிலம் உள்பட பதினெட்டு மொழிகளை அறிந்திருந்ததோடு, மலையாளம், சமஸ்க்ருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராட்டி போன்ற மொழிகளில் ஸாஹித்யங்கள் புனையுமளவு பாண்டித்யமும் பெற்றிருந்தார்.
அவரது பாடல்களை எந்தக் கடவுளைக் குறித்து பாடினாலும் அதில் பெரும்பாலும் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமியை குறிப்பிடும் அளவு ஸ்வாதித் திருநாள் அனந்தனிடம் கொண்ட பக்தி, அளப்பரியது.
ஸாஹித்யங்களை இயற்றுபவர்கள் எல்லோருமே, அதன் வரிகளின் முடிவில் எழுதியது யாரென்று தெரிவதற்காகத் தங்கள் பெயரைச் சேர்ப்பது பழக்கம். அதிலும் கூட ஸ்ரீ ஸ்வாதித் திருநாள் அனந்த பத்மநாபப் பெருமாளையே தன் முத்திரையாகப் பதிந்தவரது சிந்தையில் நிறைந்திருந்தது அனந்தனே.
மோகினியாட்டம்
கேரளத்தின் பாரம்பர்ய நடனக் கலையான மோகினியாட்டத்தை பெரிதும் பிரபலப் படுத்திய ஸ்ரீ ஸ்வாதித் திருநாள், அதற்கென ஸ்வரக் கோர்வைகள், 20 வர்ணங்கள், 50 பதங்கள், 5 தில்லானாக்கள் என கர்நாடக இசையை மோகினியாட்டத்துக்காக ஒருங்கிணைத்தார்.
அவரது சமீபத்திய ஆசை, கனவு, லட்சியம், பிரார்த்தனை எல்லாம் ஸ்ரீ பத்மநாபஸ்வாமியின் மேல் சதகம் எனப்படும் நூறு பாடல்களைப் பாட வேண்டுமென்பதுதான்.
வெளியில் மழை அடித்துப் பெய்து கொண்டிருக்க, இருக்கையில் சாய்ந்து, சிந்தனையில் இருந்த மஹாராஜா, காலடி ஓசையில் கண்களைத் திறவாமலே “கேசவா, யாரானு?”
“திவான் வெங்கட் ராவ்”
“வரச்சொல்”
முகமன்கள் முடிந்ததும், திடீரென வந்து நின்ற திவானை கேள்வியாகப் பார்த்தார் மன்னர்.
“அது…”
“எந்தா…?”
“நாராயணி அம்மாச்சி ”
“என்னவாம்?”
“தங்களைப் பார்க்க விரும்புகிறார். அம்மாவீட்டுக்கு வரச்சொல்லி…”
அறை வாசலில் நிழல் தண்டவும். திவான் பேச்சை நிறுத்தினார். இளையம்மா கௌரி பார்வதி பாய் நின்றிருந்தார்.
“நமஸ்காரம்”
திவானின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டவர், மஹாராஜாவிடம் “போய் நோக்கான் உன்னி. ”
“...”
என்னதான் திவானுக்கு உள் விவகாரங்கள் அனைத்தும் தெரியும் என்றாலும், அதற்கு மேல் அவர் முன் பேச விரும்பாத இளையம்மா, அவரை போகச் சொல்லி தலையசைத்தார்.
மஹாராஜா “ராவ், வேறெந்தா?”
“புதன் கிழமைதான் ஜெனரல் கலனை சந்திக்க வேண்டும்”
“நாளை சந்திப்போம்” என திவானுக்கு விடை கொடுத்த மன்னர் அமைதி காக்க, இளையம்மா சிறிது கண்டிப்புடனே நோக்கினார்.
“உன்னி, பதி, பத்னிக்கு இடையில் சண்டை வருவது சகஜம்தான். அதற்காக அதோடு எல்லாம் முடிந்துவிடுமா? இப்போதுதான் ஒரு பிள்ளையை இழந்திருக்கிளாள். நாராயணியும் சின்னப் பெண்தானே?”
“...”
“நீங்களிருவரும் இப்படி எலியும் பூனையுமாக இருந்தால், எப்படி?”
“...”
“உன்னி…”
“கொறச்சு சமயம் தரு”
மஹாராஜா ஸ்ரீ ஸ்வாதித் திருநாளுக்கும் நாராயணிக்கும், அவர் அரியணை ஏறும் முற்னரே திருமணம் முடிந்துவிட்டது.
நாராயணி சிறந்த கர்நாடக சங்கீதப் பாடகி. மிக நன்றாக வீணை வாசிப்பாள். அதைவிட, அவளது அழகு வெகு பிரசித்தம்.
பதினாறு வயதிலேயே ஒரு சமஸ்தானத்தின் மஹாராஜாவை மணந்த நாராயணிக்கு கணவரின் பொறுப்புகளும் அதற்குத் துணைநிற்க வேண்டிய தன் கடமையும் புரிந்தாலும், பேறுகாலம், குழந்தையை இழந்தது என ஒரு பெண்ணுக்கான மன அழுத்தங்களும் எதிர்பார்ப்புகளும் சேர, அரசருக்கும் மனைவிக்கும் இடையே சிறு ஊடலாகத் தொடங்கியது மாதக் கணக்கில் பிரிந்திருக்கும் அளவிற்கு சென்றுவிட்டது. இப்போது மனைவியாகவே தூது அனுப்பியதில் சிறு திருப்தி வர, கீற்றாகப் புன்னகைத்த ஸ்ரீ ஸ்வாதித் திருநாள், மாற்றுடை அணிந்து மனைவியைக் காணச் சென்றார்.
ஸ்ரீஸ்வாதித் திருநாள் அறைக்குள் நுழைந்ததும் இருவருக்கும் இடையே இருந்த பெரும் சுவர் ஒன்று நிற்பது போலவும், ஏன் வந்தாய் என்பது போலவும் தோன்றிய முகபாவனைகள் நேரமாக ஆக சகஜமானது.
நாராயணி “நான் பாடவா?”
“இப்போதா, சரி பாடேன்”
பிராணநாதன் எனக்கு நல்கிய
பரமானந்த ரஸதே பரவதிநேழுதமோ
பலே...பரவதிநெழுதமோ..
நாராயணியின் இனிமையான குரலில் மன்னரின் முகமும் மனமும் இளகிக் கனிந்தது.
பாடல் வரிகளில் ஒலித்த ஸ்ருங்காரத்திற்கு சற்றும் குறையாத புன்சிரிப்போடு
“ஆரானு எழுதியது?” என்றார் மஹாராஜா.
“இறையிமன் தம்பி”
கணவரை விட்டுப் பிரிந்து வாடிய நாராயணி தீர்வைத் தேடி இறையிம்மன் தம்பியிடம் சென்று உதவி கேட்டார். மஹாராஜாவின் மனம் மகிழும் வகையில் பிராணநாதன் எனக்கு நல்கிய பாடலை என்ற எழுதி அளித்திருந்தார்.
ஸ்ரீஸ்வாதித் திருநாள் தனக்காக, தன்னுடன் இணையவும் தன் மனதை நெருங்கவும் நாராயணி எடுத்த முயற்சியில் அகமகிழ்ந்ததில் கணவன் மனைவிக்கு இடையே வெண் கொடி பறந்தது.
மஹாராஜா ஸ்வாதித் திருநாளின் மனைவி நாராயணி மூன்றாவது முறையாக கருத்தரித்திருந்தாள்.
தாய்வழிச் சமூகமான திருவாங்கூர் மஹாராஜாவின் மனைவியருக்கு, அரச குடும்பத்தைச் சேர்ந்த மற்ற ராணிகளுடன் எந்த விதத் தொடர்பும் கிடையாது. அரசரின் மனைவி என்ற மரியாதை இருந்தாலும், அரச குடும்பத்திற்கான அதிகாரம் எதுவும் கிடைக்காது. அவரது கையால் சமைத்ததை அரசர் உண்பதோ, இணைந்து அமர்ந்து உண்பதோ கூடாது.
இருவரும் தம்பதிகளாகப் பொதுவெளியில் சேர்ந்து தோன்றவோ, பயணிக்கவோ அனுமதியில்லை. அப்படியே தவிர்க்க இயலாத சூழலில் பயணித்தாலும், அரசரின் / கணவரின் அருகே அமர்ந்து செல்லக் கூடாது. எதிர்ப்புறம்தான் அமர்ந்து செல்ல வேண்டும்.
நிறைய அணிமணிகள், உடைகள் என வாரி வழங்கப்பட்டு, திருமணம் முடித்து, அம்மாவீடு எனப்படும் அரண்மணையில் குடி வைத்தபின், அங்கேயே இருக்க வேண்டும்.
அரசருக்கு மனைவியானபின், அவள் அந்த வீட்டில் வாழும் காலம் வரை அவள் தனித்திருக்க பணமும் பாதுகாப்பும் வழங்கப்படும்.
அம்மாச்சிக்கும் சரி, அவளது குழந்தைகளுக்கும் சரி அரச குடும்பத்திற்குக் கிடைக்கும் அங்கீகாரம் கிடைக்காது.
கணவரின் மறைவுக்குப் பின் இன்னுமே தனிமைப்படுத்தப்பட்டு விடுவர்.
அரசரின் மனைவியாகவே இருப்பினும் தொடக்கம் முதலே அவரது அந்தஸ்திற்குக் கீழேதான்.
ஒரு மஹாராஜாவிற்கான கடமைகளும் பொறுப்புகளும் நாட்டில் நிலவிய அரசியல் சூழலும் சேர கணவரை காண்பதே அரிதாகத்தான் இருந்தது.
மணமாகி பத்து வருடங்கள் கடந்திருந்தாலும் இருபத்திரெண்டு வயதிற்குள் அடுத்தடுத்து கர்ப்பம், பிரசவம், முதல் இரண்டு குழந்தைகளை இழந்த வருத்தம், இந்தப் பிள்ளையாவது தங்க வேண்டுமே என்ற பயமும் எதிர்பார்ப்பும் சேர, சோர்ந்தே காணப்பட்டாள் நாராயணி.
பிறந்த, புகுந்த வீட்டினருடன் தொடர்பின்மையும், கர்ப்பகால அவஸ்தைகளும் மன அழுத்தங்களும் சேர, ஆண் குழந்தையை பிரசிவித்த சில நாட்களிலேயே காலமானாள்.
திருவட்டாறு சித்திரைநாள் அனந்தபத்மநாபன் செம்பகராமன் தம்பி என்று பெயரிடப்பட்ட குழந்தை, தந்தையோடு அரச குடும்பத்தில் வளர முடியாத காரணத்தால் தாயுமின்றித் தனித்து நின்றது.
மஹாராஜா ஸ்ரீ ஸ்வாதித் திருநாள் குழந்தையைப் பராமரிக்கவென நீலம்மா பிள்ளை அம்மாச்சி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இருப்பினும் அந்த இளங்குருத்துமே விரைவிலேயே இறைவனடி சேர, மஹாராஜா மனம் சோர்ந்தார்.
இந்தக் காலகட்டத்தில் மஹராஜா ஸ்ரீ ஸ்வாதித் திருநாளின் அக மற்றும் புற வாழ்வில் இரண்டு முக்கியமான நபர்கள் வந்தனர்.
மேஜர் ஜெனரல் வில்லியம் கலன் (General Cullen)
கர்னல் மன்ரோவைத் தொடர்ந்து திருவாங்கூரின் பிரிட்டிஷ் பிரதிநிதியாகப் பதவியேற்றார் ஜெனரல் கலன்.
ஸ்ரீஸ்வாதித் திருநாள் அரியணை ஏறிய நேரம், திருவாங்கூர் சமஸ்தானம் அநேகமாக பிரிட்டிஷரின் பிடியில்தான் இருந்தது. இந்த மாற்றத்தினால் விளைந்த அடிமை மற்றும் அவமான உணர்வை மஹாராஜாவால் சகிக்க இயலவில்லை.
அதிலும் அவரது அரசவை உயரதிகாரிகளே உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தனர்.
திருவாங்கூர் சமஸ்தானத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அனைத்தையும் தங்களது உதவியுடன் செய்தாலுமே, திருவாங்கூர் மன்னர் நிறைய இடங்களில் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்பட்டதோடு, சிறந்த நிர்வாகத் திறனையும் வெளிப்படுத்தியதை ஜெனரல் கலன் விரும்பவில்லை.
நிர்வாகத்தில் பெரும்பங்கு அதிகாரத்தைக் கைப்பற்றத் துடித்த அவரும் அவரது ஊழல் மிகுந்த அதிகாரிகளும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும் அதன் மன்னருக்கும் நெருக்கடி தரத் தொடங்கினர்.
ஸ்ரீ ஸ்வாதித் திருநாள் மஹாராஜாவிற்கும் ஜெனரல் கலனுக்கும் தொடக்கத்தில் மரியாதை நிமித்தமாக இருந்த உறவு நாளடைவில் விரிசல் கண்டதில், இருவருக்குமிடையே பேச்சுவார்த்தை இல்லாத நிலைக்குச் சென்றது.
ஜெனரல் கலனின் குறைவான கேட்கும் திறனும், நுரையீரல் குறைபாட்டின் காரணமாக மெலிந்து ஒலித்த ஸ்ரீ ஸ்வாதித் திருநாளின் குரலும் செய்த சதியால், நேரடி சந்திப்புகளைத் தவிர்த்தார் மஹாராஜா.
இந்த இடைவெளியை ஜெனரல் கலனின் ஆதரவில் இருந்த கிருஷ்ணாராவ் என்பவன் பயன் படுத்திக் கொண்டான். தனக்கு ஒரு வேலை தருமாறு அவரையே மஹாராஜாவிடம் கேட்கச் செய்தான்.
காரியதரிசிகளில் ஒருவராக நியமிக்கப்பட்ட கிருஷ்ணா ராவின் குறி திவான் பதவியாக இருந்தது.
கிருஷ்ணா ராவின் தூண்டுதலில், ஜெனரல் கலன் திருவாங்கூர் சமஸ்தான திவானும், ஸ்ரீஸ்வாதித் திருநாளின் முன்னாள் ஆசிரியருமான சுப்பாராவின் முடிவுகள் அனைத்தையும் ஆட்சேபித்தார்.
பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்திய மிரிட்டிஷ் பிரதிநிதியின் அலுவலகம் சூழ்ச்சியின் மையப் புள்ளியானது.
ஜெனரல் கலன் கொடுத்த அறிக்கையின்படி மஹாராஜா ஸ்வாதித் திருநாளை பலமற்றவர் என்றது மதராஸ் அரசு.
மஹாராஜா தனது பழைய திவான் வெங்கட் ராவை திரும்ப அழைத்தார். இதை மதராஸ் மாகாண அரசு ஏற்றாலும் ஜெனரல் கலன் ஆதரிக்கவில்லை.
பிரிட்டிஷ் பிரதிநிதி, அதிகாரிகள், சம்பந்தமே இல்லாத சுப்பாராவ் போன்றவர்கள் கொடுத்த நெருக்கடியில் மன்னரின் மன அழுத்தங்கள் அதிகரித்தது.
ஏனேய சுதேச அரசுகளின் மன்னர்களைப் போல் அதிகாரத்தை ஆங்கிலேயரின் கையில் கொடுத்துவிட்டுத் தனது வாழ்க்கையை உல்லாசமாக வாழ விரும்பாது, தன் கடமையையும் கௌரவத்தையும் பிரிட்டஷாரிடம் அடகு வைக்காது, அனந்தபத்மநாபஸ்வாமிக்கு தாஸனாக, திருவிதாங்கூர் சமஸ்தான மரபுகளுக்கும், மக்களுக்கும் உண்மையாக இருக்க விரும்பிய மஹாராஜாவை புடம் போடத் தொடங்கினார் ஸயன பெருமாள்.
Author: VedhaVishal
Article Title: அனந்தன் காடு 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அனந்தன் காடு 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.