உசுரே நீதானே - 3
தன் கழுத்தில் இருந்த அந்த கருப்புக் கயிறை அறுக்க முயன்றான் மாணிக்கம்.
இதை அவனுக்குப் பேசி வைத்த பெண்ணான மீனா அவன் கழுத்தில் கட்டி விட்ட நிகழ்வை மனதுக்குள் நினைத்துப் பார்த்தான்.
"தோ பாரு மாணிக்கம்! நம்மள்க்கு தொளில் சுத்தமா ருக்கணும்! உன்னிய நம்பி நம்மள் பணம் போடறான். நீ நம்மள்க்கு ஏமாத்தினா நம்மள் உன்னிய சும்மா வுட மாட்டான்!" என்று சொல்லிக் கொண்டிருந்தான் பஜன்லால் சேட்.
"ஐய சேட்டு! சொம்மா நையி நையின்னு புடுங்காத.. நா கரீட்டா பண்ணிடுவேன்.. என்னிய நீ முள்சா நம்பலாம்.." என்று கூறிய மாணிக்கம், சேட் கொடுத்த சின்ன கவரை வாங்கி தன் பேன்ட் பேக்கெட்டில் பத்திரப் படுத்திக் கொண்டான்.
"ஜாக்ரத மாணிக்கம். இந்த அட்ரஸ்ல இன்னிக்கு சாந்தரம் பாஞ்ச் மணிக்குள்ள சரக்க குடுத்துடு.. சரக்கு அங்க போய் சேர்ந்ததும் எனுக்கு அவங்க பைசா அனுப்புவாங்கோ.. அவங்க பைசா அனுப்புனதும் நா உனுக்கு பைசா அனுப்புவேன்.. ஒரு வேள நீ போலீஸ்ல மாட்டிகிட்டா நம்மள் பேர் வெள்ள வரக் கூடாது.. சரக்கும் போலீஸ் கைக்கு போயிடக் கூடாது.. சம்பால் கே!" என்று எச்சரிக்கை செய்தான் சேட்.
"அதெல்லாம் கவலப் படாத சேட்டு! போலீஸ்ல மாட்னாலும் அசால்ட்டா தப்ச்சிருவேன்.." என்று கூறிவிட்டு சேட் கொடுத்த முகவரியை வாங்கி கவனமாகப் பார்த்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
சேட் சொன்னபடியே அந்த முகவரியில் அந்தக் கவரை ஒப்படைத்தான்.
அடுத்த அரை மணி நேரத்தில் அவனுடைய கைப்பேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
எடுத்துப் பார்த்த போது, அவனுடைய வங்கிக் கணக்கில் பத்தாயிரம் ரூபாய் வரவு வந்துள்ளதாக அந்தச் செய்தி கூறியது.
மாணிக்கத்துக்கு மனசெல்லாம் மகிழ்ச்சிப் பூ பூத்துக் குலுங்கியது.
'அவ்ளோதானா! இந்த சின்ன வேலைக்கு இம்மாந் துட்டா! இப்டி ஒரு மாசம் வேல பண்ணினா போதுமே! தினம் பத்தாயிரம்ன்னா.. முப்பது நாளைக்கு..' என்று கணக்குப் போட்டுப் பார்த்து, 'ஐயோ! மூணு லச்சம்.. ஒரு மாசத்தில மூணு லச்சம் சம்பாரிச்சிடலாம்.. அஞ்சு மாசம் சம்பாரிச்சா பாஞ்சு லச்சம்.. ஒரு வருசம் சம்பாரிச்சா முப்பத்தாறு லச்சம்.. போறும்.. இது போறும்.. என் மீனாவுக்கு நகை நட்டெல்லாம் வாங்கி போட்டு வூட்டுக்கு வேணுங்கற வாசிங் மிசினு, மிச்சி, கிரெய்ண்டரு அல்லாம் வாங்கி போட்டு ராணியாட்டம் வச்சிக்குவேன்.. அவள தரையிலயே நடக்க வுட மாட்டேன்.. எப்பயும் எங்க போவணும்னாலும் நானே என் கையால அவள தூக்கினு போவேன்..' என்று கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான்.
அவன் கற்பனையைத் தடை செய்வது போல அவனுடைய கைப்பேசி சிணுங்கியது.
எடுத்துப் பார்த்தான்.
பஜன்லால் சேட்தான் அழைத்தான்.
"ம்!" என்றான்.
தான் எப்போது அழைத்தாலும் வளவளவென்று பேசாமல் தான் சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டுவிட்டு அழைப்பைத் துண்டிக்க வேண்டும் என்று சேட்தான் சொல்லியிருந்தான். அதனால் மாணிக்கம், 'ம்!' மைத் தவிர வேறு எதையும் பேசவில்லை.
"குட் மாணிக்கம்! சரக்கு சரியான நேரத்துக்கு நல்லபடியா வந்துச்சுன்னு பார்ட்டி கன்ஃபர்ம் பண்ணியாச்சு. எனுக்கும் பணம் அனுப்பிட்டாங்க.. நா உனுக்கு அனுப்புனேனே.. வந்துச்சா?"
"ம்!"
"சரி மாணிக்கம். வேற அட்ரஸ் அனுப்பறான்.. நாளிக்கு அங்க சரக்கு டெலிவரி பண்ணிடு.. உன்னும் ஒரு வாரத்துக்கு வேற வேற அட்ரஸ்ல டெலிவரி பண்ணு.. நிம்மள் டெலிவரி ஒளுங்கா பண்றான்.. நம்மள் பணம் ஒளுங்கா அனுப்பறான்.. இப்ப நம்மள் போனை வெக்கறான்.." என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
சேட் சொல்லியபடியே அந்த வாரம் முழுதும் வேறு வேறு முகவரிகளில் சேட் கொடுத்த சரக்கை சரியான நேரத்தில் சேர்ப்பித்தான் மாணிக்கம்.
சேட்டும் தான் வாக்கு கொடுத்தது போல மாணிக்கத்தின் வங்கிக் கணக்கில் அவன் செய்த வேலைக்குண்டான பணத்தை சரியாக அனுப்பி வைத்தான்.
இப்போது மாணிக்கத்தின் வங்கிக் கணக்கில் எழுபதாயிரம் ரூபாய்கள் இருந்தன.
இதைத் தவிர அவன் சேட் சொன்ன வேறு சின்னச் சின்ன வேலைகளும் செய்து கொடுக்க சேட் அதற்குண்டான பணத்தையும் அவனுடைய வங்கிக் கணக்கில் சேர்த்தான்.
இதனால் கணிசமான தொகை அவனுடைய வங்கிக் கணக்கில் சேர்ந்தது.
வங்கிக்குச் சென்று தன்னுடைய கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்றும் அதை எப்படி எடுத்து பயன்படுத்தலாம் என்றும் அறிந்து கொண்டான்.
தன்னுடைய நிலைமை ஒரே வாரத்தில் மாறியதை நினைத்து குதூகலமான மனநிலையில் வீடு திரும்பினான்.
வீட்டில் அவனை வியக்கை வைக்கும் விதமாக மீனாவும் அவளுடைய தம்பி பூபதியும் வந்திருந்தனர்.
மீனாவைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு பரவசமாக இருந்தது.
இளஞ் சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்தாள். அந்தச் சுடிதார் கொஞ்சம் பழசாக சாயம் போய் இருந்தாலும் அவன் கண்களுக்கு அதிலும் அவள் அழகாகத் தான் தெரிந்தாள்.
"வா.. வா மீனா.. இன்னா? இம்மாந் தூரம்?" என்று தயங்கியபடி கேட்டான்.
"அட்த்த வாரம் கண்ணால பொடவ எடுத்தாரலாமா? நல்ல நாளான்னு அத்தயாண்ட கேட்டுப் போக வந்தோம் மாமா!" என்றான் அவள் தம்பி பூபதி.
பாவம்! அவர்கள் இருவருக்கும் பெற்றவர்கள் இல்லை. வழி காட்டுவதற்கு வீட்டில் பெரியவர்களும் இல்லை.
அதனால் மாணிக்கத்தின் அம்மாவையே அவர்கள் இருவரும் தனக்கும் அம்மாவாகக் கருதி வந்திருந்தார்கள்.
"அட்த்த வாரம் இன்னாத்துக்கு? இன்னிக்கே போலாம்!" என்றான் மாணிக்கம் உற்சாகமான குரலில்.
"இ.. இன்னிக்கா?" என்று அதிர்ச்சியும் தயக்கமுமாகக் கேட்டாள் மீனா.
"யான்? இன்னிக்கி நல்ல நாளு இல்லியாம்மா?" என்று மாணிக்கம் தன் அம்மாவைப் பார்த்துக் கேட்டான்.
மகனின் பேச்சைக் கேட்டு திகைத்தாள் சிவகாமி.
"இல்ல.. ரெண்டு நாள்ல எனுக்கு சம்பளம் வந்துரும்.. அதுக்கப்றம் போலாமே!" என்றாள் மீனா.
"துட்டப் பத்தி நீ ஏன் கவலப் படற மீனா! என்னாண்ட துட்டு கீது.." என்றான் மாணிக்கம்.
"அதெப்டி மாமா! கண்ணால பொடவ நாங்கதானே எடுக்கணும்? அதானே மொற?" என்றான் பூபதி.
"அதானடா?" என்று மாணிக்கத்தின் அம்மா சிவகாமியும் ஆமோதித்தாள்.
"அட மொறயாவது? கிரையாவது? பொண்ணு வூடும் நம்மதான்.. மாப்ள வூடும் நம்மதான்.. நம்ம ரெண்டு வூட்டுலயும் சொந்தக்காரவுங்கன்னு யாரும் கெடையாது.. அவங்களுக்கு ஒண்ணுன்னா நாமதான் ருக்கோம்.. நமக்கு ஒண்ணுன்னா அவங்கதான் ருக்காங்க.. அப்றம் என்ன மொறை கிரைன்னுகிட்டு.. நல்லத எப்ப செஞ்சா இன்னா?" என்று கேட்ட மாணிக்கம்,
"வாம்மா! இன்னிக்கே போயி கண்ணாலப் பொடவ எடுப்போம்!" என்றான்.
போன வாரம் வரை கையில் பத்து ரூபாய் கூட இல்லை என்று சொல்லிக் கொண்டு தன்னிடமிருந்த நூறு ரூபாயைப் பிடுங்கிக் கொண்டு போனவன் இப்போது கல்யாணப் புடவையைத் தானே வாங்கித் தருகிறேன் என்று சொல்கிறானே என்று திகைத்தாள் சிவகாமி.
மகனை அவசரமாக சமையலறைக்குத் தள்ளிக் கொண்டு போனாள்.
"ஏண்டா? அறிவு கீதா ஒனக்கு? கண்ணால பொடவன்னா இன்னான்னு தெரியுமா ஒனக்கு? அத்த இன்னா.. நூறு ரூபாய்க்கு எடுக்க போறியா? ஒரு பொடவையே பாஞ்சாயிரம் ஆவும்.." என்று மெல்லிய குரலில் அவனிடம் கடுகடுத்தாள்.
"ஐய! அது தெர்யாதா எனுக்கு?" என்று கேட்டுச் சிரித்தான் மாணிக்கம்.
"தெரியும்ன்னா? துட்டு வோணாவா?"
"என்னாண்ட துட்டு கீது ம்மா!" என்றான் மாணிக்கம்.
"இன்னாடா ஒன்னோட படா பேஜாரா கீது.. செரி! எம்மாந் துட்டுடா வச்சிருக்க?" என்று கேட்டாள் சிவகாமி.
"அது.. அத்த வுடு.. இன்னிக்கு பொடவ எடுக்க நல்ல நாளா இல்லியா? அத்த சொல்லு!" என்று அடாவடியாகக் கேட்டான்.
"ம்க்கும்.. அல்லா நாளும் நல்ல நாளுதான்.." என்று கூறி கழுத்தை வெட்டிக் கொண்டாள் சிவகாமி.
"அவ்ளோதான்! வுடு! வா! அல்லாரும் போயி பொடவ எடுத்தாரலாம்.." என்று கூறி அவர்களை அழைத்துக் கொண்டு திநகர் சென்றான்.
மீனாவுக்கு பத்தாயிரம் ரூபாயில் பட்டுப்புடவை எடுத்தான். கூடவே தன் அம்மாவுக்கும் ஏறக்குறைய அதே விலைக்கு புடவை எடுத்தான்.
மீனா அவனைப் பார்த்து வியந்தாளோ இல்லையோ சிவகாமி தன் மகனைப் பார்த்து வாயைப் பிளந்தாள்.
"டே மாணிக்கம்! எப்டிடா? எப்டிடா இம்மாந் துட்டு?" என்று வாய்விட்டு கேட்டே விட்டாள்.
தனியாக அழைத்துக் கேட்டிருந்தால் மாணிக்கம் கட்டாயம் தன் அம்மாவிடம் கோபப்பட்டிருப்பான்.
மீனாவின் முன்னிலையில் கேட்டதால் அவனால் கோபப்பட முடியவில்லை.
"இன்னாமா? என்னிய நம்ப மாட்டியா? மெய்யாலுமே நா சம்பாரிச்ச துட்டுமா!" என்றான் மெல்லிய குரலில்.
"ஒரே வாரத்துல இம்மாந் துட்டு சம்பாரிக்கற அளவுக்கு அப்டி இன்னா வேலடா?" என்று மெல்லிய குரலில் கேட்டாலும் தன் பற்களைக் கடித்துக் கொண்டு கோபமாகக் கேட்டாள் சிவகாமி.
"ம்மா! ஒன் மேல சத்தியமா சொல்றேன்.. நா வேலக்கி போயி சம்பாரிச்ச துட்டு இது.." என்று மீண்டும் கூறினான் மாணிக்கம்.
"இல்ல.. அத்த கோவத்தில நாயம் ருக்குது.. ஒரே வார வேலக்கி இம்மாந் துட்டு தராங்கன்னா அது நல்ல வேலயா ருக்குமான்னு எனுக்கே டவுட்டாதான் கீது.." என்று தயங்கிய குரலில் கூறினாலும் தெளிவாகவே கூறினாள் மீனா.
"இன்னா மீனா? நீ கூட என்னிய நம்ப மாட்டியா? நா நம்ப பஜன்லால் சேட்டுல்ல.. அவராண்டதான் வேலக்கி போறேன்.. அந்தாளுக்கு நெகை பிஸ்னஸ்தானே.. நா அவரு கோடவுன்ல இர்ந்து கடைக்கு நெகைங்கள எடுத்துட்டு போயி குடுக்கற வேலதான் பண்றேன்.. தங்க நெகை.. வைரம்.. இது மாரி வெல சாஸ்த்தியான ஐட்டங்க.. அத்த பத்ரமா எடுத்துட்டு போயி குடுக்கறதால இம்மாந் துட்டு சம்பளமா தராரு.. நா இத்த வெளிய சொல்ல கூடாதுன்னு சொன்னாரு.. சொன்னா என்னிய ஃபாலோ பண்ணி எவனாச்சும் நெகைய ஆட்டைய போட்ருவானுங்கல்ல.. அதான்.. நா அந்தாள்ட்ட வேலக்கி சேந்தத யாருக்கும் சொல்லல.." என்று கோர்வையாகச் சொல்லி முடித்தான்.
அப்படி அவன் சொல்லும் போது சுற்று முற்றிப் பார்த்துக் கொண்டே மெல்லிய குரலில் கூறினான்.
அவனுடைய குரலும் செய்கையும் சிவகாமியை அமைதியடையச் செய்தது. ஆனால் மீனாவை அல்ல.
"பஜன்லால் சேட்டா?" என்று சந்தேகமாகக் கேட்டாள்.
"அக்காங்!" என்றவன்,
"ஏன் மீனா?" என்றான். அவனுக்கு உள்ளுக்குள் படபடப்பாக இருந்தது.
"இல்ல.. அந்தாளு நெறைய தப்பு வேல பண்றாருன்னு எங்க ஓட்டல் மொதலாளி ஒரு தபா பேசிட்டிருந்தாரு.. எதுக்கும் நீங்க கொஞ்சம் சாக்ரதையாவே இருங்க.. சீக்ரமா அந்த வேலய வுட்டுட்டு வேற வேலக்கி மாறிடுங்க.." என்றாள் மீனா.
"தப்பு வேலையா? ஐய.. அத்த நம்பாத மீனா.. சேட்டு ரெம்ப நல்லவரு.." என்றான் மாணிக்கம்.
"நல்லவரா இருந்தா சர்த்தான்.. ஆனா எதுனாச்சும் பிரச்சனைல உங்கள மாட்டி வுட்ராம பாத்துக்கங்க.." என்று கூறிவிட்டு திரும்பிக் கொண்டாள்.
ஏதேதோ சொல்லி அவளை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துக் கொண்டு உணவகம் சென்றான்.
எல்லாருக்கும் பிடித்தது கேட்டு வரவழைத்துக் கொடுத்தான்.
அனைவரும் உண்டு முடித்து வெளியே வந்தவுடன் பூபதி சவாரி உள்ளதென்று கிளம்பிவிட்டான்.
"கவலப் படாத பூபதி! நா மீனாவ இட்டாந்து வூட்ல வுட்ர்றேன்!" என்று சொல்லி மாணிக்கம் அவனை அனுப்பி வைத்தான்.
உணவகத்தின் வாசலில் நரிக்குறவப் பெண் ஒருத்தி பாசி மணிகளை கடை பரத்தி விற்பனை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து மீனா அங்கு சென்றாள்.
"இன்னா மீனா? பாசி மணியா வாங்க போற?" என்று சிவகாமி கேட்டாள்.
"எனுக்கு ரொம்ப புடிக்கும் அத்த. ஏன்? நா இத்த போட்டா ஒங்களுக்கு புடிக்காதா?" என்று கவலையுடன் கேட்டாள் மீனா.
"ஐய! நீ போட்டா எனுக்கின்னாமா வந்துச்சி?" என்று கூறி சிவகாமி சிரித்தாள்.
மீனா கவலை அகன்றவளாய் பாசி மணிகளை பார்க்கத் தொடங்கினாள்.
மிகவும் சன்னமான மணிகளால் பல வரிசைகளில் கோர்க்கப்பட்ட கருப்பு நிற சங்கிலி அவள் கருத்தைக் கவர்ந்தது.
அதிலிருந்த சின்ன மீன் வடிவ பதக்கமும் அவளுக்கு மிகவும் பிடித்தது.
வெள்ளி முலாம் பூசப்பட்டு பளபளப்பாக இருந்தது அந்த மீன் பதக்கம். அந்த இருட்டின் மிகச் சிறிய வெளிச்சத்திலும் அந்த மீன் பதக்கம் பளபளத்தது.
அதைக் கையில் எடுக்கும்போது அதனருகில் அதே மீன் வடிவ பதக்கத்துடன் அடர்த்தியான கருப்புக்கயிற்றால் செய்யப்பட்ட சங்கிலியும் அவள் கண்ணில் பட்டது.
இரண்டில் எதை எடுப்பது என்று அவளுக்குப் புரியவில்லை.
"ரெண்டுமே நல்லாருக்கு.. எத்த எடுக்க?" என்று மாணிக்கத்திடம் கேட்டாள்.
"ரெண்டுமே எட்த்துக்க மீனா!" என்றான் அவன்.
அவள் மகிழ்ந்து போய் இரண்டையும் எடுத்துக் கொண்டாள்.
அவன் அதற்கான பணம் கொடுத்துவிட்டுத் திரும்பும் போது அந்த கருகமணியால் ஆன சங்கிலியை அவனிடம் கொடுத்து தன் கழுத்தில் அணிவிக்கச் சொன்னாள்.
அவனும் பூரித்துப் போய் அதை அவளுடைய கழுத்தில் அணிவித்து அழகு பார்த்தான்.
அவளுடைய அழகுக்கு அழகு சேர்ப்பது போல இருந்தது அந்தச் சங்கிலி.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நின்றிருந்த சிவகாமி, சும்மா இல்லாமல்,
"அத்த அவன் கயித்தில நீ கட்டு மா!" என்றாள்.
மீனா அவள் சொன்னது புரியாமல் முழிக்க, சிவகாமியே மீனாவின் கையிலிருந்த மற்றொரு சங்கிலியை எடுத்து தன் மகன் மாணிக்கத்தின் கழுத்தில் கட்டிவிடுமாறு மீனாவிடம் கூறினாள்.
மீனா தயங்கினாள்.
"நா எப்டி அத்த.. அவரு கயித்தில.."
"அட சொம்மா கட்டு மா! அவன் ஒன் கயித்தில கட்டலான்னா நீ அவன் கயித்தில கட்ட கூடாதா? கட்டு!" என்றாள் சிவகாமி.
தயங்கினாலும் மீனா அந்த கருப்புக் கயிற்றாலான சங்கிலியை மாணிக்கத்தின் கழுத்தில் அணிவித்தாள்.
"அவ்ளோதான்! இன்மே நீங்க ரண்டு பேரும் புர்சன் பொஞ்சாதி.." என்று கூறிய சிவகாமி,
"டே மாணிக்கம்.. மீனா எப்பயும் அந்த சங்கிலிய கயித்தில ருந்து கயட்ட மாட்டா.. அதே மாரி நீயும் ஒன் கயித்தில ருந்து இத்த கயட்ட கூடாது.. புரீதா? இது ஒனக்கு தாலி மாரி!" என்றாள் சிவகாமி.
"ம்மா!" என்று கடுகடுத்தான் மாணிக்கம்.
"அம்மா மெய்யாலுந் தான் சொல்றேன் கண்ணு.. பாரு.. அவ ஒன் கயித்தில கட்டுன சங்கிலியில மீன் கீது! அதாவது மீனா ஒன் நெஞ்சில கீரா! அதே மாரி அவ கயித்தில நீ போட்ட சங்கிலியில ருக்கற மீன் கண்ணுக்கு செவப்பு கல்லு கீது பாரு.. அதாவது.. நீயி! மாணிக்கம்.. அவ நெஞ்சில நீ கீற.. புரீதா?" என்று கேட்டாள் சிவகாமி.
அதன் பிறகே மீனா தன் கழுத்தில் மாணிக்கம் அணிவித்த சங்கிலியில் இருந்த மீன் பதக்கத்தில் சிறிய சிவப்புக் கல்லை கவனித்தாள்.
அவளுக்கு உள்ளமெல்லாம் பூரித்துப் போனது.
"அத்த!" என்று அழைத்து புன்னகைத்தாள்.
அந்தப் புன்னகையில் அளவிட முடியாத மகிழ்ச்சியும் வெட்கமும் இருந்ததை மாணிக்கம் பார்த்தான்.
அவளுடைய மகிழ்ச்சி அவனையும் தொற்றிக் கொண்டது.
மீனாவின் கைகளை ஆசையாகப் பிடிக்கப் போனான்.
அவள் சிரித்துக் கொண்டே அவனைத் தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடிப் போனாள்.
"ஐயியோ! வொர்க் அவுட் ஆவுதே! வொர்க் அவுட் ஆவுதே!" என்று சொல்லி குதூகலமாய்ச் சிரித்தான் மாணிக்கம்.
சிவகாமி தன் மகனைச் செல்லமாய் அடித்தாள்.
மகிழ்ச்சியும் சிரிப்புமாக அன்றைய மாலைப் பொழுது மிகவும் ரம்மியமாகக் கழிந்தது.
இந்த நிகழ்வினை நினைத்துக் கொண்ட மாணிக்கம் தன் கழுத்திலிருந்த கருப்புக் கயிற்றை அறுக்கவும் முடியாமல் அதை வைத்துக் கொண்டிருக்கவும் முடியாமல் மிகவும் திண்டாடினான்.
'இத்த கயித்தில வச்சிக்கிட்டு அவ கிட்ட பொய் சொல்ல முடீல.. கண்ணால தேதி நெருங்குது.. அவ கூட சேந்து வாள பணம் வோணும்.. அதுக்காக சேட்டு சொல்ற அல்லாத்தையும் செய்றதா ருக்கு.. அதனால அந்தாள்ட்ட வெட்டிக்கவும் முடீல.. நா இன்னா பண்ண போறேன்..' என்று குழப்பத்துடனே வளைய வந்தான் மாணிக்கம்.
- தொடரும்....
Author: Bandhini
Article Title: உசுரே நீதானே - 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உசுரே நீதானே - 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.