உசுரே நீதானே - 4
மாணிக்கம் பஜன்லால் சேட்டிடம் வேலை செய்வதாய்க் கூறினாலும் எப்போதும் வெளியில் சுற்றிக் கொண்டிருப்பதால் மீனாவுக்கு அவன் வேலை வெட்டி எதற்கும் போகாமல் சும்மா பொழுதைக் கழிப்பதாகத் தோன்றியது.
வெளியிலேயே சுற்றிக் கொண்டிருப்பதாலும் தன்னுடைய தோற்றத்தைப் பேணாமல் எப்போதும் அழுக்கு லுங்கியுடனும் பரட்டைத் தலையுடனும் திரிந்து கொண்டிருப்பதாலும் அவன் சம்பாதித்த பணத்தை ஊதாரித்தனமாய் செலவு செய்வதாய் அவள் நினைத்தாள்.
அதனால் அவனை நல்வழிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தான் வேலை செய்யும் ஓட்டலில் அவனுக்கு வேலைக்கு வாங்கிக் கொடுத்தாள்.
ஆனால் அவனோ அரை மணி நேரம் கூட அந்த ஓட்டலில் வேலை செய்ய முடியாமல்,
"கோச்சிக்காத மீனா! இதல்லாம் எனுக்கு செட்டாவாது.." என்று சொல்லி அங்கிருந்து நழுவினான்.
சரி! சாப்பாடு பரிமாறவும் அடுத்தவர்களின் எச்சில் பாத்திரங்களை எடுப்பதற்கும் அவன் கௌரவம் இடம் கொடுக்கவில்லை என்று நினைத்து அவள் தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.
அவளுடைய தம்பி பூபதியும் தன்னுடைய நண்பர்களிடம் சொல்லி லேத்துப் பட்டறை, பைக் ரிப்பேர் செய்யும் கடை, சூப்பர் மார்கெட்டில் செக்யூரிட்டி வேலை என்று பல இடங்களில் வேலை பார்த்து வைத்தான்.
ஆனால் மாணிக்கம், அந்த இடங்களில் வேலைக்குச் செல்லவில்லை. காரணம்,
'நா அவன் அக்காள கட்டப் போற மாமா! நாந்தான் அவனுக்கு வேல பாத்து வெக்கணும். அவன் எனுக்கு வேல பாத்து வெக்க கூடாது.. அவன் எனுக்கு வேல பாத்து வெக்கற அளவுக்கு நா ஒன்யும் டம்மி பீஸ் இல்ல..' என்று நினைத்தான்.
அதனால் மனம் நொந்து போனது மீனாதான்.
அவளுக்கு மாணிக்கத்தின் பேரில் ஏற்பட்டிருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தது. பேசாமல் இந்தக் கல்யாணத்தை நிறுத்தி விடலாமா என்று கூட அவள் யோசித்தாள்.
இந்நிலையில் மாணிக்கம் இரண்டு சிறுவர்களுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்து அவர்களுடைய கல்விக்கும் உறுதுணையாக இருக்கிறான் என்ற செய்தி அவள் காதுகளில் விழ, அவள் மாணிக்கத்தின் வீட்டுக்கு வந்தாள்.
மலர்ந்த முகத்துடன் சிவகாமி தன் வருங்கால மருமகளை வரவேற்றாள்.
"வா! வா! மீனா! எப்டி கீர? தம்பிய இட்டாறல?" என்று அன்புடன் கேட்டாள்.
"நல்லா கீரன் அத்த!" என்றபடி வருங்கால மாமியாரின் கையில் பழங்கள் அடங்கிய கவரைத் தந்தாள்.
"அட இன்னா மா நீயி? இதல்லாம் வாங்கியாரணுமா?" என்று செல்லமாய்க் கடிந்து கொண்டாலும் அவள் கொடுத்த பழங்கள் அடங்கிய கவரை மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் சிவகாமி.
"காபி குடிக்கிறியா? தோச ஊத்தவா?" என்று சிவகாமி கேட்க,
"எதும் வோணா அத்த.. இப்பதான் சாப்ட்டு வந்தேன்.." என்றாள் மீனா.
"இன்னிக்கு வேல இல்லியா? நீ லீவு போட்ருக்கியா?"
"லீவல்லாம் இல்ல அத்த.. ஒரு மணி நேரம் பர்மிசன் போட்டு வந்தேன்.."
"இன்னா விசியம்மா?"
"அது வந்து.." என்று மீனா தயங்கினாள்.
"அட சொம்மா சொல்லுமா.." என்று சிவகாமி மீனாவின் கையை அன்பாய்ப் பிடித்துக் கொண்டாள்.
"உங்க புள்ள ரெண்டு பசங்கள வூட்டுக்கு இட்டாந்து வச்சிருக்காருன்னு.. அதான்.. இன்னா ஏதுன்னு கேட்டு போலாம்னு வந்தேன் அத்த!" என்றாள் மீனா.
"அத்த ஏம்மா கேக்கற? இவனே ஒரு தெண்டம்.. இப்ப இவன் ரெண்டு உஸ்கோல் புள்ளீங்கள வேற இட்டாந்து வூட்ல வச்சி காப்பாத்த போறேன்னு சொல்லிகினு திரியறான்.. நீதாம்மா அவனுக்கு நல்ல புத்தி சொல்லணும்.." என்று வேண்டுமென்றே தனக்கு இது பிடிக்கவில்லை என்பது போலக் கூறி மீனாவை ஆழம் பார்த்தாள் சிவகாமி.
"ஐயோ! இன்னா அத்த? இப்டி சொல்டீங்க? இப்பதான் எனுக்கு உங்க புள்ள மேல நம்பிக்கையே வந்துகிது.. அவரு வேல வெட்டி எதுக்கும் போவாம ஊரச் சுத்தினு கிராரே.. பொறுப்பு எப்ப வரும்னு நானே ரொம்ப டென்சனா இர்ந்தேன்.. இப்பதா மன்சுக்கு ரொம்ப நிம்மதியா கீது அத்த.." என்றாள் மீனா.
"இன்னா மீனா சொல்ற? நிம்மதியா கீதா?"
"அக்காங்.. இன்மே அந்த புள்ளீங்களுக்கு செலவு செய்ய சம்பாரிப்பாருல்ல.. சம்பாரிச்ச துட்ட எட்தாந்து ஒங்களாண்ட குடுப்பாருல்ல.. அந்த புள்ளீங்க வூட்ல இர்காங்கன்னு தேவயில்லாத சகவாசம் எத்தையும் வச்சிக்க மாட்டாருல்ல.. அதான் அத்த எனுக்கு நிம்மதியா கீதுன்னு சொல்றேன்.." என்றாள் மீனா.
"அப்டியா சொல்ற?" என்று சிவகாமி சந்தேகம் போலக் கேட்டாள்.
"ஆமா அத்த.. நீங்க வோணும்னா பாருங்க.. உங்க புள்ள இன்மே மாறிடுவாரு.." என்றாள் மீனா.
சிவகாமிக்கு மனம் பூரித்துப் போனது.
மீனாவின் கன்னம் வழித்து திருட்டி கழித்தாள்.
அப்போது அந்தச் சிறுவர்கள் குமரேசனும் கதிரேசனும் வீட்டுக்குள் நுழைந்தனர்.
"அத்த! இவங்கதா அந்த பசங்களா?"
"அக்காங்.." என்றாள் சிவகாமி.
"யாரு அத்த இந்தக்கா?" என்றான் குமரேசன்.
"இவங்கதா உங்கண்ணன கெட்டிக்கப் போற பொண்ணு.. உங்களுக்கு அண்ணி!" என்றாள் சிவகாமி.
"வணக்கம் அண்ணி!" என்றார்கள் சிறுவர்கள் இருவரும் ஒரே குரலில்.
"வணக்கம்." என்ற மீனா,
"பரவால்லயே! வணக்கம்லாம் சொல்றீங்களே?" என்று வியந்தாள்.
"நாங்க இஸ்கோல்ல படிக்கறோம் அண்ணி.. ரெண்டு பேரும் இந்த வர்சம் பத்தாவது முட்ச்சிருவோம்.." என்றான் கதிரேசன் பெருமை பொங்கும் குரலில்.
மீனாவும் அதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ந்தாள்.
"நல்லா படிக்கணும்.. இன்னா? புரீதா? படிப்புதா நம்மள மாரி ஏயைங்களுக்கு சொத்து.. பட்ச்சாதான் நம்மல்லாம் மேல வர முட்யும்.." என்றாள் மீனா.
"எங்கம்மாவும் இத்தையே சொல்லும்.. அது மாரியே சொல்றீங்க அண்ணீ!" என்றான் குமரேசன்.
"ஒங்கம்மா அப்பா எங்கடா?" என்று மீனா கேட்க, குமரேசனின் முகம் விழுந்துவிட்டது.
சிவகாமி அவர்களைப் பற்றி சுருக்கமாகக் கூறினாள்.
அவள் கூறியதைக் கேட்ட மீனாவும் மனம் பாரமாகிப் போனது.
எப்படி அந்தச் சிறுவர்களுக்கு ஆறுதல் கூறுவது என்று அவளுக்குத் தெரியவில்லை.
தாய் தந்தையை ஒரே நேரத்தில் இழந்து அநாதையாக நிற்கும்போது இந்தச் சமுதாயம் தன்னையும் தன் தம்பியையும் எப்படி நடத்தியது என்றுதான் அவளுக்குத் தெரியுமே! சித்தப்பாவும் மாமாவும் தங்களை ஆதரித்தார்கள்தான். ஆனால் அன்பு செலுத்தவில்லையே! ஒரு வேளை அன்பு என்ற ஒன்று இருந்திருந்தால் அவர்கள் தங்களிருவரையும் நட்டாற்றில் கைவிட்டிருக்க மாட்டார்களே என்று நினைத்தாள்.
சில நிமிடங்கள் மௌனமாக இருந்தவள்,
"அல்லாம் சரியாகிடும் டா.. நீங்க ஒன்யும் கவலப்படாதீங்க.. நாங்க ஒங்கள நல்லா பாத்துக்குவோம்.." என்றாள்.
அவளுடைய வார்த்தையைக் கேட்ட சிவகாமிக்கு மீனாவைப் பற்றி நல்ல எண்ணம் தோன்றியது.
மீனா சிவகாமியிடமும் சிறுவர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.
எதிரே மாணிக்கம் வர, சிறிதாகப் புன்னகை புரித்து அவனிடம் தலையசைத்து விடைபெற்றாள்.
"இன்னாமா? மீனா வண்ட்டு போகுது?" என்று தன் அம்மாவிடம் கேட்டான் மாணிக்கம்.
"சொம்மா வந்தாடா!" என்றவள் சிறுவர்களைப் பற்றி அவள் விசாரித்ததைக் கூறவில்லை.
அதற்குள் குமரேசனும் கதிரேசனும் மாணிக்கத்திடம் ஓடி வந்தார்கள்.
"அண்ணே! அண்ணி சூப்பரா கீராங்க!" என்றான் குமரேசன்.
மாணிக்கம் புன்னகைத்தான்.
"அண்ணி எங்களாண்ட நல்லா படிக்கணும்னு சொன்னாங்க.." என்றான் கதிரேசன்.
மாணிக்கம் இதற்கும் புன்னகைத்தான்.
"எப்பண்ணே கண்ணாலம்?" குமரேசன் கேட்டான்.
"அட்த்த மாசத்துக்கு அட்த்த மாசம்.." என்றான் மாணிக்கம்.
"ஹை! அப்ப எங்க முழுப்பர்ச்ச முட்ஞ்சுரும்.. சூப்பர்ண்ணே!" என்றான் கதிரேசன்.
மாணிக்கம் அவர்களிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு சிவகாமியிடம் வந்தான்.
"ம்மா! நைட்டு முக்கியமான வேல கிது.. நைட்டு வூட்டுக்கு வரமாட்டேன்.." என்றான்.
"இன்னாடா முக்கியமான வேல?"
அவள் காதருகே வந்து,
"வைர நெகல்லாம் வருது ம்மா.. பத்ரமா வாங்கி வெக்க வோணாவா?" என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தான்.
"சர்த்தாண்டா! இந்தா! இத்த துன்னு!" என்று சொல்லிக் கொண்டே சில மாம்பழங்களை நறுக்கித் துண்டு போட்டு எடுத்து வந்து கொடுத்தாள்.
"இன்னா மா இது? மாம்பயமா? இத்த எப்ப வாங்கியாந்த?" என்று கேட்டுக் கொண்டே ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். அருகில் நின்றிருந்த சிறுவர்களுக்கும் கொடுத்தான்.
"நா எங்க வாங்கியாந்தேன்.. அல்லாம் மீனாதா வாங்கியாந்து குட்த்துச்சு!" எனாறாள்.
"இன்னாத்துக்கு வாங்கியாந்துச்சு?" என்று குழப்பத்துடன் கேட்டான்.
"டேய்! அது மருவாத தெர்ஞ்ச பொண்ணுடா.. ஒருத்தர் வூட்டாண்ட போ சொல்ல பயம் பூன்னு எதாச்சு வாங்கினு போணும்டா! ஒனக்கு எங்க அதல்லாம் தெரீது? ம்க்கும்!" என்று தன் கழுத்தை வெட்டிக் கொண்டாள்.
"எனுக்கு எதுக்கு தெர்யணும்? அதான் என்னிய கட்டிக்க போறவளுக்கு தெர்துல்ல.. அது போறும்.. சரி! சரி! எனுக்கு டூட்டிக்கு டயமாச்சு.. நா கௌம்பறேன்.. நீ வூட்ட பத்ரமா பாத்துக்க.. தம்பிங்கள பத்ரமா பாத்துக்க.." என்று கூறிவிட்டு தன் கை கால்களைக் கழுவிக் கொண்டு உடை மாற்றிக் கொண்டு கிளம்பினான்.
"ம்மா! இந்தா! இத்த வூட்டு செலவுக்கு வச்சிக்க!" என்று கூறி தன் பேன்ட் பேக்கெட்டிலிருந்து ஐந்து ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்துக் கொடுத்தான்.
"ம்!" என்று கூறி அவன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டாள்.
"சர்ரா! பத்ரமா போய்ட்டு வா! சாக்ரத!" என்றாள் சிவகாமி.
"கதிரு! குமாரு! ரெண்டு பேரும் வூட்ட பத்ரமா பாத்துக்கங்க.. நா டூட்டிக்கி போயிட்டு வரேன்.."
"சரிண்ணே!" என்ற சிறுவர்கள் இருவருக்கும் டாட்டா காட்டிவிட்டுக் கிளம்பினான் மாணிக்கம்.
அவன் சென்றதும் சிறுவர்கள் இருவரும் தங்களின் பாடத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினார்கள். சிவகாமி இரவு உணவு சமைக்கத் தொடங்கினாள்.
அவர்கள் படித்து முடித்து எழுந்து வந்த பின் சிவகாமி சிறுவர்கள் இருவருக்கும் சாப்பாடு போட்டு தானும் சாப்பிட்டாள்.
சாப்பிட்ட பின் சிறுவர்கள் தூங்கச் செல்ல சிவகாமியும் கதவுகளைப் பூட்டிக் கொண்டு மின்விளக்குகளை அணைத்துவிட்டுத் தூங்கப் போனாள்.
மாணிக்கத்தின் வீடு ஓட்டு வீடுதான் என்றாலும் மின் இணைப்பு இருந்தது. ஒரு படுக்கையறையும் ஒரு சமையலறையும் ஒரு கூடமும் இருந்தது. வீட்டுக்கு வெளியே ஒரு கிணறும் கழிப்பறை மற்றும் குளியலறையும் தனித்தனியாக இருந்தது. வீட்டைச் சுற்றி சுற்றுச் சுவர் இல்லையென்றாலும் வேலிக்காத்தான் முட்செடிகளாலான வேலி இருந்தது. அக்கம் பக்கத்து வீடுகளும் கிட்டத் தட்ட அதே போன்ற வீடுகள்தான். சிவகாமியின் மாமனார் காலத்தில் அவர் கட்டிய வீடு இது. பல வருடங்களாக அந்த வீட்டில் இருப்பதால் பாதுகாப்பான பழகிய இடமாக அவர்களுக்கு அது விளங்கியது.
நள்ளிரவுக்கு மேல் ஊரே அடங்கியிருந்த சமயம், குமரேசனுக்கு இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டியிருந்தது.
அதனால் தன் தம்பியை எழுப்பிக் கொண்டு பின் கதவைத் திறந்து கொண்டு வீட்டின் பின்புறம் சென்றான்.
இருவரும் கழிப்பறைக்குச் சென்றுவிட்டு வெளியே வரும்போது வேலிப்படலுக்கு வெளியே ஏதோ பேச்சுக் குரல் கேட்டது போல இருக்க, இருவரும் மெதுவாக அருகில் போய் கவனித்தார்கள்.
"த பாரு சேட்டு! நீ சொன்ன வேல அல்லாம் நா கரீட்டா முஸ்ட்டேன்.. என்னாண்டயே ஒன் வேலய காட்ற பாத்தியா.." என்று யாரோ யாரிடமோ பேசுவது கேட்டது.
குமரேசனும் கதிரேசனும் பூனை போல சத்தமில்லாமல் நடந்து பேச்சுக் குரல் வந்த இடத்தில் சென்று பார்த்தனர்.
வெளியில் யாரோ நிற்பது வரி வடிவமாகத் தெரிந்தது. ஆனால் வெளிச்சமில்லாத காரணத்தால் நிற்பவர் யாரென்று அடையாளம் காண முடியவில்லை.
"குமாரு? இந்தக் கொரலு.." என்று கதிரேசன் கிசுகிசுப்பாக ஏதோ கேட்கத் தொடங்க, குமரேசன் தன் தம்பியின் வாயைப் பொத்தினான்.
அவனை அமைதியாக இருக்கும்படியும் அந்த மனிதனையே கவனிக்கும்படியும் சைகை செய்தான்.
கதிரேசனும் தலையாட்டிவிட்டு அண்ணன் சொன்னபடியே அந்த மனிதனை கவனித்தான்.
அந்த மனிதன் தெருவைப் பார்த்தபடி, வேலிப்படலுக்கு முதுகைக் காட்டி நின்று பேசிக் கொண்டிருந்ததால் அவன் குரல் மட்டுமே சிறுவர்களுக்குக் கேட்டது. அதுவும் விட்டுவிட்டே கேட்டது.
"அதல்லாம் நீ பேசாத! உனுக்கு ஒரு நாயம்! எனுக்கு ஒரு நாயமா? ஏன்? என்னிய மட்டும் போலீஸ் புடிக்காதா? புட்ச்சா அத்தோட நா காலி.. எங்காத்தா என்னிய வூட்ட வுட்டு வெள்ல தெரத்திடும்.. தெர்யும்ல.."
அந்த மனிதன் காரசாரமாக யாரிடமோ விவாதிப்பது சிறுவர்களுக்குப் புரிந்தது.
"ஏய்! சொம்மா கெடந்தவன சொரிஞ்சி வுட்டல்ல.. ஒன் சரக்கு இன்னிக்கு எப்டி போவுதுன்னு நானும் பாத்துர்ரேண்டா.." என்று மிரட்டிய அந்த மனிதன் மேலும் சொல்லக் கூடாத கெட்ட வார்த்தைகளைச் சொல்லி திட்டிக் கொண்டே தன் கைப்பேசி அழைப்பைத் துண்டித்தான். தன் வலதுபுறமாகத் திரும்பினான்.
அப்போது தெருவில் ஒரு கார் ஒன்று மிதமான வேகத்தில் அந்த இடத்தைக் கடக்க, அந்தக் காரின் ஹெட் லைட் வெளிச்சத்தில், அந்த மனிதனின் முகம் சிறுவர்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்தது.
அந்த மனிதன் வேறு யாருமல்ல! மாணிக்கம்தான்.
சிறுவர்கள் இருவருக்கும் தூக்கி வாரிப் போட்டது போல இருந்தது.
உள்ளே போகலாமா என்று நினைத்துத் திரும்பினார்கள்.
மாணிக்கம் அங்கிருந்து நகராமல் மீண்டும் யாருக்கோ போன் செய்தான்.
அதனால் சிறுவர்களும் அங்கேயே நின்றார்கள்.
"டேய்! அந்தாள் சரி வர மாட்டாண்டா.. நீ சரக்க எடுத்தாந்துருடா.. இத்த போலீஸ் கையில குடுக்கறத வுட எசக்கியாண்ட குட்த்தா போரும்.. சேட்டும் மாட்டுவான்.. நமக்கும் லாபம்.. போலீசுக்கும் லாபம்.." என்றான் மாணிக்கம்.
சிறுவர்களுக்கு இன்னும் பயம் வந்தது. அவர்களுக்கு எசக்கி யார் என்று நன்றாகத் தெரியும்.
அவர்கள் இருந்த பகுதியில் தாதா போன்று வளைய வரும் பெரிய ரௌடிதான் எசக்கி என்கிற இசக்கிமுத்து. சாரயக்கடைகள் சிலவற்றின் முதலாளி. பல அரசியல் பிரமுகர்களுடன் மிக நெருக்கமானவன். அவனிடம் பல அடியாட்கள் உள்ளனர்.
அவனுடைய கடையில்தான் பல நேரங்கள் சிறுவர்களின் அப்பா குடித்துவிட்டு விழுந்து கிடப்பான். அவனைத் தூக்கி வர சிறுவர்கள் செல்லும் போது எசக்கி யாரையாவது போட்டு அடித்துக் கொண்டிருப்பதை சிறுவர்கள் பார்த்திருக்கிறார்கள். அவன் மேல் இவர்களுக்கு பயமும் வெறுப்பும் ஒருங்கே தோன்றி வளர்ந்திருந்தது.
அந்த மனிதன் பேசிவிட்டு தன் கைபேசியை சட்டைப் பேக்கெட்டில் வைத்தான். தன் பேன்ட் பேக்கெட்டிலிருந்து ஒரு சிறிய பாட்டிலை எடுத்துத் திறந்து அப்படியே தன் வாயில் சரித்துக் கொண்டான். அந்த பாட்டிலில் இருந்த திரவம் முழுதும் அவன் வாய்க்குள் இறங்கியது.
அனைத்தையும் ஒரே மொடக்கில் குடித்துவிட்டு கையிலிருந்த பாட்டிலை கோபமாக விட்டெறிந்தான்.
".." காதில் கேட்கச் சகிக்காத வார்த்தைகளை சொல்லி திட்டிக் கொண்டே தள்ளாடியடி அங்கிருந்து சென்றான்.
சிறுவர்கள் இருவரும் அதிர்ச்சி நீங்காதவர்களாக வீட்டுக்குள் வந்தனர்.
- தொடரும்....
Author: Bandhini
Article Title: உசுரே நீதானே - 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உசுரே நீதானே - 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.