• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நான் போடுற கோட்டுக்குள்ளே - 5

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
308
நான் போடுற கோட்டுக்குள்ளே - 5

நாத்தனார் ஒரேயடியாக பல்டி அடித்ததன் காரணம் புரியாவிட்டாலும் தான் பெற்ற பெண் சாமர்த்தியமாகச் செயல்பட்டதைப் பெருமையாக உணர்ந்தாள் அனுராதா. தன்னால் முடியாததை அவள் எப்படி சாதித்தாள் என்று மகளிடம் தனியாக விசாரிக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டாள். அதே நினைவு தான் ரங்கராஜனுக்கும் என்பதை அவரது முகபாவம் காட்டிக் கொடுத்தது. இப்படி யோசனையில் இருந்தவர்களை சுபிக்ஷாவின் குரல் வீட்டு ஹாலுக்கு இழுத்து வந்தது.

"கீதா அத்தை! நான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு உங்க ஆத்துக்குப் போனா, நீ இங்க இருக்க. டூ பேட் டூ பேட்"

"...."

"என்னை நீங்க நம்பலேன்னு நன்னாவே தெரியறது. அதுக்கு தான் எவிடென்ஸோட வந்திருக்கேன். அக்கட சூடு" என்று வாசலைக் காட்டினாள்‌

அப்போதும் அவளை நம்பாத பாவனையில் வாசலைப் பார்த்த கீதா வீட்டுக்குள் நுழைந்த நபரைக் கண்டதும் ஆச்சர்யம் அடைந்தாள்.

"அட வா வா ஹரி" என்று ரங்கராஜனும் அனுராதாவும் வரவேற்க, "வரேன் வரேன். சௌக்கியமா மாமா? மாமி நீங்க எப்படி இருக்கேள்?" என்றபடி உள்ளே வந்த ஹரி நேராக பாட்டியிடம் சென்று அமர்ந்தான்.

"என்ன பாட்டி மூஞ்சிய உர்ன்னு வச்சிண்டிருக்கே. சும்மாவே பேத்தி புராணம் பாடுவ. இப்போ, சுபி வேற பெரிய ஆளாகிட்டா. இனிமேல் என்னை எல்லாம் உன் கண்ணுக்குத் தெரியாது" என்றான் கேலியாக.

"டேய் ஏண்டா பொய் சொல்ற? நான் எப்போ பேத்தியைத் தூக்கி வச்சு உன்னை மட்டம் தட்டினேன். நீ எனக்கு முதல் பேரன். எப்பவும் எனக்கு நீ தான் முதல்ல" என்று வேகமாகச் சொல்லி விட்டுத் திருதிருவென விழித்தார் பத்மாசனி. அவரது பேத்தி தான் எதிரே வந்து நின்று தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தாளே..

பரிதாபமாக ஹரியைப் பார்த்தவரை "உனக்குத் தேவையா பாட்டி இது? நீயே உன் பேத்தியைச் சமாளி" என்று நழுவினான் பேரன்.

இது தானே நீ, நான் உனக்கு முக்கியம் இல்லாத போது நீ மட்டும் என்னிடம் ஏன் எதிர்பார்க்கிறாய் என்றதோ பேத்தியின் அந்தப் பார்வை. பத்மாசனியால் பேத்தியின் பார்வையைச் சந்திக்கவே முடியவில்லை. நமது ஊரில் மூத்த தலைமுறையினர் நிறைய பேர் பத்மாசனி செய்த தப்பைச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். மகன் வழிப் பேரன் பேத்திகளை விட மகள் வழிப் பேரன் பேத்திகளை உயர்வாக உயிராக நினைக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் அவர்களை மகனது குழந்தைகளாகப் பார்க்காமல் மருமகளது குழந்தைகளாகப் பார்க்கும் பாவனை அதிகம். மகனையே, மருமகளின் கணவனாகப் பார்க்கும் பெற்றோரும் எந்தக் காலத்திலும் இருக்கத் தான் செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொள்பவர்கள். தான் செய்த காரியத்தின் எதிரொலியை அந்தப் பிள்ளைகளிடம் காணும் போது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

பத்மாசனியும் அப்படி ஒரு இக்கட்டான நிலையில் தான் இப்போது இருந்தார்.
பேத்தியின் புத்திசாலித்தனத்தின் முன் தனது சமாதானங்கள் எதுவும் செல்லாது என்று தெரிந்தவர் சரண்டர் ஆக முடிவு செய்தார்.

"அவன் தான் முதல்லன்னு சொன்னா உன்னைப் பிடிக்கலைன்னு அர்த்தமா சுபி? ஹரி தான் எனக்கு முதல் பேரன்னாலும் அவன் இந்தாத்துக்கு உரிமைப்பட்டவன் இல்லையே. நீயும் ,மானுவும் தானே உரிமைப் பட்டவா.. அதை நான் என்னைக்காவது விட்டுக் கொடுத்திருக்கேனா.. இல்லையே.."

பாட்டியின் பேச்சுக்கு பேத்தியிடம் பதில் இல்லை. வெறும் தலையாட்டல் மட்டுமே கிடைத்தது. அவள் இன்னும் சமாதானம் ஆகவில்லை என்று தெரிந்து பாட்டியின் பேச்சு தொடர்ந்தது.

"சரி நான் தான் அந்தக் காலத்து மனுஷி. ஏதோ தெரியாமல் ஒரு தப்பு பண்ணிட்டேன். அதுக்காக நான் உனக்குப் பாட்டி இல்லேன்னு ஆகிடுமா? ஒரே ஆத்துல இருக்கற ஒரு பெரிய மனுஷின்னு நீயாவது விஷயத்தைச் சொல்லி இருக்கலாமே. நீ சொல்லலேன்னா கூட பரவாயில்லை, நான் பெத்த பிள்ளை கூட என்னை ஒரு பொருட்டாகவே நினைக்கலையே. இன்னைக்கு கார்த்தால கூட சொல்லி இருக்கலாம். இவளுக்கு எதுக்கு சொல்லணும்னு நினைச்சுட்டான் போல இருக்கு"

அவர் குரலில் நிஜமான வருத்தம். அந்த நொடியில் ரங்கராஜனும் தன்னை மிகவும் கீழாக உணர்ந்தார். "அம்மா! நான்…" என்று மேலே பேச முடியாமல் தடுமாறினார்.

"பாட்டி!" என்று ஹரியும் சுபிக்ஷாவும் பதறி அவர் அருகே அமர்ந்தனர்.

"தப்பு தான் பாட்டி! பெட்டர் லேட் தென் நெவர். எனக்கு xxxx கம்பெனில வேலை கிடைச்சிருக்கு பாட்டி. அதைக் கொண்டாடத் தான் இன்னைக்கு போனேன். இதைப் பாரு. உனக்காக வாங்கிண்டு வந்தேன். இதை வாங்கிண்டு என்னை ஆசிர்வாதம் பண்ணு." பாட்டியின் கையில் ஒரு கிஃப்ட் பார்சலைத் திணித்து விட்டு அவர் காலில் விழுந்தாள் சுபிக்ஷா.

சுற்றி இருந்த அனைவரும் 'ஆ'வென்று பார்க்க, "தீர்க்காயுசா இருடிம்மா" என்று அவசரமாக வாழ்த்தினார் யத்மாசனி. பாட்டியை அப்போதே கிஃப்ட்டைப் பிரிக்க வைத்து அவரது சந்தோஷத்தைப் பார்த்த பிறகே திருப்தியானாள் சுபிக்ஷா. அது ஒரு அழகான கலம்கரி புடவை. பாட்டிக்கு மிகவும் பிடிக்கும். அவள் அப்படித்தான், யாரையும் பெரிதாகக் கண்டு கொள்ளாமல் இருந்தாலும் சரியான நேரத்தில் சரியான காரியத்தைச் செய்து அவர்களைக் கைக்குள் போட்டுக் கொள்ளும் திறமை படைத்தவள்.

பாட்டியைக் கவிழ்த்தாயிற்று.. இப்போது அத்தை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அத்தையின் புறம் திரும்பினாள் மருமகள். அவளோ வாய்க்குள் ஈ போவது கூடத் தெரியாமல் அங்கே அரங்கேறிய காட்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"அம்மாஆஆஆ" என்று ஹரி அருகில் வந்து உலுக்கிய பின்பே சுற்றுப்புறம் அவள் கண்களுக்கு தெரிந்தது. மகன் வந்தது கூட அப்போது தான் அவரது புத்தியில் உரைத்தது போலும்.

"ஹரி! நீ எங்கடா இங்கே வந்த? என்னை பிக்கப் பண்ணவா? நான் நாளைக்கு கார்த்தால தானே வரேன்னு தானே சொன்னேன். அதுவும் நான் தனியா வந்துடுவேன்னு சொல்லிட்டுத் தானே வந்தேன். இது உங்க அப்பா வேலை தானே. அவரோட ஒரே தொல்லை டா. கல்யாணம் ஆன நாள் முதலா இதே பாடு தான். ஒரே ஒரு நாள், ஒரு இருபத்திநாலு மணி நேரம் நான் பொறந்தாத்துல சீராடினா கூடப் பொறுக்காது" என்று பேசிக்கொண்டே போன அத்தையை,

"அத்தை! ஸ்டாப் ஸ்டாப். விட்டா நீளமா பேசிண்டே போறயே. ஹரி ஒன்னும் உன்ன பிக்கப் பண்ண வரலை. என்னை ட்ராப் பண்ண வந்தான்" என்று தடுத்தாட்கொண்டாள் சுபிக்ஷா.

கீதா, 'அப்படியா' என்பது போலத் தன் பிள்ளையைப் பார்க்க அங்கே இருந்த அனைவரும் அதையே பிரதிபலித்தனர்.

"இதுல என்னம்மா சந்தேகம் உனக்கு? சுபி சாயங்காலமா நம்ம ஆத்துக்கு வந்தா. அவ ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் அனுப்பி வச்சிட்டா. அப்போ கூட தனியா போயிக்கறேன்னு தான் சொன்னா. நான் தான் அவளை ட்ராப் பண்றேன்னு சொல்லி அழைச்சிண்டு வந்தேன். இப்போ அவளை ட்ராப் பண்ணிட்டேன், அப்படியே கிளம்பறேன். நீ உன் பிளான் படி கார்த்தாலயே வா. நானும் அப்பாவும் இன்னைக்கு ஒரு நாளாவது ஃப்ரீயா இருக்கோம்" என்று விளக்கிய ஹரியை நோக்கி நெற்றிக் கண்ணைத் திறந்தாள் அவனது அன்னை.

"நான் இருந்தா மட்டும்…" என்று தோளில் முகவாயை இடித்துக் கொண்டு "நான் வேற எதுக்குடா தனியா டாக்ஸிக்குச் செலவழிக்கணும்? உன்னோடவே வந்துடறேன்" என்று கிளம்பத் தயாரானாள். இருக்கையில் இருந்து எழுந்தவள் எதிரே இருந்த சுபிக்ஷாவைப் பார்த்தும் பாதியில் தீர்ப்பு சொல்லாமல் நிறுத்தி வைக்கப் பட்ட பஞ்சாயத்து ஞாபகம் வந்தது. உடனே சட்டென்று அமர்ந்து கொண்டு கேள்விக் கணைகளை மருமகளை நோக்கி வீச ஆரம்பித்தாள்.

அப்படி வந்த கேள்விக் கணைகளை எதிர்கொள்ள சுபிக்ஷா தயாராக இருந்தாலும் அவளது அத்தை பதிலை எதிர்பார்க்காமல் கணைகளை வீசிக் கொண்டே இருந்தாள்.

"ஆமா… சுபி! நீ ஃப்ரண்ட்ஸோட ஊர் சுத்தப் போன சரி. ஆனா நாள் பூராவும் செலவழிக்கற மாதிரி எங்க போனேள்?"

"ஈசிஆர்ல…."

"ஈசிஆரா? எதுக்கு அவ்வளவு தூரம் போகணும்? இந்தக் காலத்து பொம்மனாட்டி குழந்தைகளுக்கு ரொம்பவே தைரியம் தான்."

"....." அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் சுபிக்ஷா தவிர்க்க அதன் பின்னணியை அறிய அடுத்த கேள்வி வந்தது.

"என்ன பதிலையே காணோம். நீ பேசாமல் இருக்கிறதைப் பார்த்தா பசங்களும் வந்தா போல இருக்கே.. அப்படி யார் யாரெல்லாம் போனேள்?"

அந்தக் கேள்வியே பிடிக்கவில்லை என்றாலும் சுபிக்ஷா பதில் சொல்லத் தயங்கவில்லை. "அத்தைஇஇஇ! ஆமா… பசங்களும் சேர்ந்து தான் போனோம். நாங்க எல்லாரும் எல்கேஜில இருந்து ஒன்னா படிக்கிறோம். எல்லாருமே நல்ல ஃப்ரண்ட்ஸ். ஓகே." அவள் சொன்ன தோரணையே ஒழுங்காக ரூட்டை மாத்து என்று கீதாவிற்கு ஓர் எச்சரிக்கை விடுத்தது.

"சரி.. சரி.. உன் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் நல்ல பசங்க தான். ஆனா போன இடத்தில ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்.. பெரியவா துணை இருக்கணும் தானே."

"அப்படி ஒன்னும் நாங்க சேஃப்டி இல்லாத இடமா போகலை. நன்னா அலசி ஆராய்ச்சி பண்ணித் தான் ப்ளேஸையே செலக்ட் பண்ணினோம்."

"அது சரி. பெத்தவாளே பெர்மிஷன் கொடுக்கும் போது நான் யாரு ஊடே..
அப்படியே என்ன விசேஷத்துக்காக இந்த ட்ரீட்னு சொன்னேன்னா என் மனசு குளிர்ந்து போயிடும்" கீதாவின் குரலில் எந்த உணர்ச்சியும் இல்லை. தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே.

"அதைத் தான் ஸ்வீட்டோட சொல்லலாம்னு உங்க ஆத்துக்குப் போனேன். நீ தான் அங்கே இல்லையே!"

"அதான் எப்படின்னு எனக்குப் புரியவே இல்லை. அத்திப்பூத்தாப் போல நீ எங்க ஆத்துக்கு வந்த நேரம் நான் இல்லாமல் போயிட்டேன் பாரு." கேள்வி சுபிக்ஷாவை நோக்கி கேட்கப்பட்டாலும் கீதாவின் பார்வை அனுராதா விடம் இருந்தது.

'நீ தானே பொண்ணுக்கு மெசேஜ் அனுப்பி உஷார் பண்ணி விட்டே?' என்று கேட்டது அந்தப் பார்வை. அவளோ எந்த ஒரு பதட்டமும் இன்றி அந்தப் பார்வையை எதிர்கொண்டாள்.

"அதனால என்ன அத்தை ஸ்வீட் ஒன்னும் வேஸ்ட்டா போகலையே. அத்திம்பேரும் ஹரியும் சாப்பிட்டாளே. அதோட உன்னையும் தான் இங்கே பார்த்தாச்சே"

"அதானே..‌நீயே சொல்ற மாதிரி நான் தான் இங்க இருக்கேனே.. இப்போ சொல்லு விஷயத்தை."

"ஸ்வீட் இல்லையே.."

"பரவாயில்லை. நான் துளி சக்கரைய வாயில போட்டுக்கறேன். நீ சொல்லு."

தானே போய் சர்க்கரையை எடுத்து வந்தவள் அத்தையின் வாய்க்குள் அள்ளிப்போட்டு, "எனக்கு வேலை கிடைச்சிருக்கு அத்தை. அதைக் கொண்டாடத் தான் ட்ரீட்டு.." என்றாள்.
வாய் நிறைய இருந்த சர்க்கரை கீதாவை உடனே பேசவிடவில்லை. மருமகளை முறைத்தாள், நிதானமாக சர்க்கரையை முழுங்கிய பின்னர் பேச ஆரம்பித்தாள்.

"பேப்பர்ல போடற அளவுக்குப் பெரிய சம்பளத்தோட பெரிய வேலை கிடைச்சிருக்கு. ஆத்து மனுஷா கிட்ட சொல்ல முடியல. ஃப்ரண்ட்ஸோட பார்ட்டி கொண்டாடியாச்சு. ஆத்துலயே இருக்கற பெரிய மனுஷி கிட்டயே சொல்லலையே.. நானெல்லாம் யாரு. இந்த ஆத்துல என் லெவல் என்னன்னு இன்னைக்கு நன்னா புரிஞ்சு போச்சு. எங்க போனாலும் நன்னா இருடியம்மா" என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்த கையோடு அவளுக்கு ஒரு ஆசியை வழங்கி விட்டுப் பையனுடன் கிளம்பி விட்டாள் கீதா.

"டிபன் சாப்பிட்டு போங்கோ அக்கா. ஹரி இப்போ தானே அவ்வளவு தூரம் டிரைவ் பண்ணி வந்திருக்கான். கொஞ்சம் ரிலாக்ஸாக கிளம்பலாமே" என்ற சம்பிரதாயமான அனுராதாவின் வார்த்தைகளுக்கு, 'அது ஒன்னு தான் குறைச்சல் ' என்று மனதுக்குள் கவுன்டர் கொடுத்தாளே ஒழிய வெளியே வேறு பேசினாள்.

"அதெல்லாம் அவனுக்கு நிறைய டிரைவ் பண்ணி பழக்கம் இருக்கு. நானும் என் பிள்ளையும் சேர்ந்து ஹோட்டல்ல சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. இல்லடா ஹரி. இன்னைக்கு என் ட்ரீட்டு டா. ஓகேவா. என் பங்குக்கு சுபிக்கு வேலை கிடைச்சதைக் கொண்டாடிக்கறேன்" என்று குரலில் நக்கல் நையாண்டி என்று எதையெதையோ கலந்து சொல்லி விட்டுக் கிளம்பி விட்டாள்.

"அப்பாடா! தப்பிச்சேன்" என்று முனகிய அனுராதா குங்குமம் கொடுத்து நாத்தனாரை வழியனுப்பி வைத்தாள்.

மகளை அனுப்பி வைத்த கையோடு பத்மாசனியும் அவருடைய அறையில் சென்று அடைந்து கொண்டார். ரங்கராஜனுக்கு ஏதோ ஃபோன் வர அவர் போர்டிகோவில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஃபோனில் ஐக்கியம் ஆனார்.

தனித்து விடப்பட்ட தாயும் மகளும் ஹை ஃபை கொடுத்துக் கொண்டனர்.
"அம்மா! யூ ஆர் கிரேட்!" என்று தாயை அணைத்துக் கொண்டாள் சுபிக்ஷா.
அவளது நினைவுகள் சில மணி நேரம் பின்னே சென்றன.

மாலை நான்கு மணி வரையிலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கழித்த நண்பர்கள் அனைவரும் களைத்துப் போய் சற்று நேரம் ஓய்வாக அமர்ந்து கொண்டார்கள். வியர்வையில் குளித்திருந்தவர்கள் குளித்து விட்டு மாலை காபிக்குத் தயாரானார்கள். அதுவரை மறந்து போயிருந்த மொபைல் ஃபோனை எடுத்து ஆராய்ச்சி செய்து கொண்டு காபியுடன் வந்த நொறுக்குத் தீனியை அனுபவித்தனர்.

தானும் ஜோதியில் ஐக்கியமான சுபிக்ஷா தாயிடம் இருந்து வந்திருந்த வாட்ஸ்அப் மெசேஜில் ஆழ்ந்த சிந்தனைக்குப் போனாள்.

"Nanganallur puyal @our home from morning 10. Don't know how to pacify her. Plan your return accordingly."

"நங்கநல்லூர் புயல் நம் வீட்டில் காலை பத்து மணியில் இருந்து மையம் கொண்டிருக்கிறது. எப்படி சமாதானப் படுத்துவது என்று தெரியவில்லை." அனுராதாவே இப்படி ஒரு மெசேஜ் கொடுத்தால் நிலைமை மோசம் தான் என்று நினைத்த சுபிக்ஷா சற்று யோசனைக்குப் பின்னர், "யுரேகாஆ!" என்று கத்தினாள்.

அவளை ஏலியனைப் போலப் பார்த்த நண்பர்களுக்கு ஒரு அசட்டுச் சிரிப்பை வழங்கி விட்டு தனது திட்டத்தை விவரித்தாள்.

"ஃப்ரண்ட்ஸ்! நம்ம ரிட்டர்ன் ட்ரிப்ல ஒரு சேஞ்ச் ஆஃப் ரூட் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். வாட் டு யூ திங்க்?"

"ஹேய் என்ன விளையாடறியா?"

"சேஞ்ச் ஆஃப் ரூட்ஆ.. எதுக்கு?'

"திடீர்னு அப்படி எங்க போகணும்?"

"இப்போ கிளம்பினாலே நாம ட்ராஃபிக்ல நீந்தி வீடு போய்ச் சேர எட்டு மணி ஆகிடும்"

ஆளாளுக்குப் புலம்ப ஆரம்பித்தவர்கள், "ஷ்ஷ்.. எல்லாரும் என்னைக் கொஞ்சம் பேச விடறீங்களா?" என்று சத்தம் போட்ட சுபிக்ஷாவின் வார்த்தையில் கவனமானார்கள்.

"நாம தரமணி அடையார் வழியா போனால் தான் ஹெவி ட்ராஃபிக் இருக்கும். அதனால சிட்டிக்குள்ள போயிடலாம். மூவிங் ட்ராஃபிக் தான் இருக்கும். எனக்கு ரொம்ப முக்கியமா நங்கநல்லூர் போயே ஆகணும். என்னை ட்ராப் பண்ணிட்டு நீங்க கிளம்பிடுங்க. ட்ராவல்ஸுக்கு நான் நாளைக்கு செட்டில் பண்ணிக்கிறேன்." ரொம்ப முக்கியம் என்று அவள் சொன்ன பிறகு நண்பர்கள் எதையும் பேசவில்லை.

"எதுக்கும் டிரைவர் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுப்போம். அவர் எதுவும் சொல்ல மாட்டார், இருந்தாலும் கேட்கிறது தான் நல்லது" என்று ஒருவன் சொல்ல டிரைவரிடம் விசாரித்த போது அவர் எதுவானாலும் சரியென்று தலையாட்டினார்.

அதன் படியே நங்கநல்லூர் சென்ற சுபிக்ஷா அத்தையின் வீட்டு வாசலில் மாலை ஆறு மணிக்கு இறங்கிய போது அவளுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது.

"ஹேய் சுபி! வாட் எ சர்ப்ரைஸ்!" என்று ஆச்சரியப்பட்ட ஹரி, "யு ஹேவ் டன் இட் மேன். கங்கிராஷூலேஷன்ஸ்" என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்க "வா வா சுபி! வெல்கம் வெல்கம்!" இரு மொழிகளில் வரவேற்றார் அவனது தந்தை. இப்படி ஒரு வரவேற்பை சுபிக்ஷா அங்கே எதிர்பார்க்கவே இல்லை. திக்குமுக்காடிப் போனாள்.

நண்பர்களை அனுப்பி விட்டு உள்ளே வந்தவள் அத்தையைப் பற்றி எப்போது எப்படிக் கேட்பது என்று மனதுக்குள் ஒத்திகை நடத்தினாள்.

"ஸ்வீட் எடுத்துக்கோங்கோ அத்திம்பேர். உங்களுக்குப் பிடிச்ச காஜூ கத்லி. ஹரி இந்தா நீயும் எடுத்துக்கோ, உனக்கு மில்க் ஸ்வீட் இருக்கு பாரு. அத்தைக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்பெஷல் மைசூர் பா" என்றவள் அத்தையைக் காணாது திகைத்தாள்(!?)

"என்ன ஹரி? அத்தை எங்கே? அத்தை! கீதா அத்தை! வெளில எங்கேயும் போயிருக்காளா? நான் இவ்வளவு சத்தம் போட்டும் வரலையே" என்று ஆஸ்கார் லெவலுக்கு நடித்தாள்.
அவளது நடிப்பை அறியாத மற்றவரோ கீதா அண்ணாநகர் போயிருப்பதை விலாவாரியாக விளக்கினார்கள்.

"ஓ.. இட்ஸ் ஓகே ‌ நான் அத்தைக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைச்சேன். எனக்கு அவா கொடுத்துட்டா.. அப்போ நான் கிளம்பறேன் ஹரி. என்னை மெட்ரோ ஸ்டேஷன்ல விடறியா? அம்மா கிட்ட டின்னருக்கு ஆத்துக்கு வந்துடறேன்னு சொல்லி இருக்கேன்" என்றாள் பாவமாக. மணி ஆறரையைத் தாண்டி இருந்தது.

"ஹேய் இந்த நேரத்தில எப்படி உன்னைத் தனியா அனுப்பறது? நான் ட்ராப் பண்றேன். அப்படியே அம்மாவ பிக்கப் பண்ணிண்டு வந்திடறேன். இல்லேன்னா இன்னைக்கு ராத்திரி அங்க வைகுண்ட ஏகாதசி தான்" என்று கண்ணடித்தான் ஹரி. மிகவும் சரியாகத் தனது அன்னையைப் புரிந்து வைத்திருந்தான்.

ஹரியின் ப்ரிபரேஷனில் ஸ்ட்ராங்காக ஒரு காஃபியைக் குடித்து விட்டுக் கிளம்பினாள் சுபிக்ஷா. இரண்டே நிமிடத்தில் ஈசிஆரில் இருந்து நங்கநல்லூர் போய் அங்கிருந்து அண்ணாநகர் வந்தவள் அனுராதாவின் தொடர் புலம்பல்களைக் கேட்டுச் சிரித்தாள்.
.
"நல்ல வேலை பண்ணின சுபி. இல்லேன்னா இன்னைக்கு என்னவெல்லாம் பேச்சு கேட்டிருக்கணுமோ. ஆமா.. உனக்கு எப்படி இப்படி ஒரு ஐடியா தோணித்து. நான் மெசேஜ் போட்டதே நீ ஆத்துக்கு வரும் போது புயலை ஃபேஸ் பண்ணத் தயாரா வரணும்னு தான். உனக்கு முன்னாடியே தெரிஞ்சா நல்லதுன்னு நினைச்சேனே ஒழிய இப்படி யோசிக்கவே இல்லை."

"இது உன் ஐடியா தான் மா. ப்ளான் யுவர் ரிட்டர்ன்னு நீ எதை நினைச்சு சொன்னயோ, நான் இப்படித் தான் மீன் பண்ணின்டேன்."

"என்னமோ போ. யார் செஞ்ச புண்ணியமோ இன்னைக்கு குறைப் பொழுதுக்கு என் காது தப்பிச்சது. கார்த்தால உங்க அத்தை கண்ணகியாட்டம் வந்ததைப் பார்த்து பயந்தே போயிட்டேன் தெரியுமா?

உங்க அப்பா பேசவே முடியாமல் பதறிப் போய் நிக்கறார். கூடவே, உங்க பாட்டி, நீ கிளம்பினதும் மூடின வாய் தான். அப்புறம் சாப்பிடறதைத் தவிர வேறெதுக்கும் வாயைத் திறக்கவே இல்லை.

அதுவும் கூட ஒரு விதத்திலே நல்லதாத் தான் போச்சு. உங்க அத்தை தான் திறந்து வாயை மூடவே இல்லையே. இதுல பாட்டியும் சேர்ந்திருந்தா இரட்டை நாயனத்தைச் சமாளிக்கறதுக்குள்ளே எனக்குத் தலை சுத்திப் போயிருக்கும். ஷப்பாஆஆ.. இதுவே கண்ணைக் கட்டிடுத்து போ.." என்ற அனுராதா அடுத்து சொன்னதை அவளது மகள் எதிர்பார்க்கவே இல்லை என்பதை அவளது ஷாக் ரியாக்ஷனில் வெளிக்காட்டினாள்.

"அம்மா! என்னம்மா இப்படிச் சொல்ற?"

"ஆமா..‌சுபி.. என்ன இருந்தாலும் இன்னைக்கு நாம‌ பண்ணது தப்பு தான். இது வரைக்கும் எந்த விஷயத்தையும் பாட்டி கிட்ட சொல்லாமல் விட்டதில்லை. லேட் ஆனாலும் வெளி மனுஷாளுக்குத் தெரியறதுக்கு முன்னாடி சொல்லிடுவோம்.

மாமியார் மாட்டுப் பொண்ணுன்னு எங்களுக்குள்ள வர மனஸ்தாபங்கள் வேற, இது வேற. ஆத்துக்கு பெரியவா, அதுவும் ஆத்துலயே இருக்கறவா. நாம ஒதுக்கிட்டது மாதிரி இருக்கும். ம்ஹூம். இது சரியே கிடையாது.

உங்க அத்தை விஷயம் வேற. ஆனால் பாட்டி கிட்ட இன்னைக்கு கார்த்தாலயாவது சொல்லி இருக்கணும். அவாளுக்கு தெரிஞ்சா என் பேத்தியைப் போல உண்டான்னு ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சிருப்பாளே தவிர வேறெதுவும் கல்மிஷமா நினைக்க மாட்டா."

சுபிக்ஷா மட்டும் அல்லாது சாப்பிடலாம் என்று தன் அறையை விட்டு வெளியே வந்த பத்மாசனியும் அனைத்தையும் கேட்டிருந்தார். அனுராதா வைத்த கடைசி பஞ்ச்சில் 'அதானே! என் பொண்களைக் கூட நம்ப முடியாது. மாட்டுப்பொண்ணு புடம் போட்ட தங்கமாச்சே' என்று அவளுக்குக் கோவிலே கட்டிவிட்டார். அப்படி என்ன தான் சொன்னா இந்த அனுராதா.

இதோ இதைத் தான்..

"சுபி! புதன்கிழமை நீ வேலைக்குப் போறதுக்கு முன்னால பாட்டிய சேவிச்சுட்டு ஆசிர்வாதம் வாங்கிண்டு போ. எல்லாம் நல்லபடியா நடக்கும். நாளைக்குக் கார்த்தால முதல் வேலையா உன் வேலையைப் பத்தின டீடெயில்ஸ், நீ என்னைக்கு ஜாயின் பண்ணனும் எல்லாம் அவா கிட்ட சொல்லிடு"

தாயின் சொற்பொழிவை ஆவென்று கேட்டுக்கொண்டிருந்த சுபிக்ஷா "நீயா பே
சியது? என் அன்பே! நீயா பேசியது?" என்று பாவனையோடு சத்தமாகப் பாடினாள்.

தாயைக் கேலி செய்தவள் மறுநாள் காலை என்ன செய்யக் காத்திருக்கிறாள்? தெரிஞ்சுக்க வெயிட் பண்ணுவோம்..
 

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே - 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom