- Joined
- Jun 17, 2024
- Messages
- 27
அனந்தன் காடு 5
பத்மநாபன் திருவடி அணுகினால் தேவராகலாம்
புண்ணியம் செய்துநல்ல
புனலொடு மலர்கள்தூவி,
எண்ணுமி னெந்தைநாமம்
இப்பிறப் பறுக்குமப்பால்,
திண்ணம்நாம் அறியச்சொன்னோம்
செறிபொழில் அனந்தபுரத்து,
அண்ணலார் கமலபாதம்
அணுகுவார் அமரராவார்.
திருவாய்மொழி
இரவின் அமைதியில் இரண்டாம் முறையாகத் தெளிவாகக் கேட்ட அந்த ஒலியை அலட்சியம் செய்ய முடியாது எழுந்து அமர்ந்தார் மஹாராஜா ஸ்வாதித் திருநாள் ராம வர்மா.
மெதுவே எழுந்து சௌச்சாலயத்திற்கு சென்று வந்து, இளம் சூட்டில் இருந்த சுக்குவெள்ளத்தை அருந்திய பின், எதிர்ப் புறத்தில் இருந்த அறைக்குச் சென்றார்.
கொட்டாரத்தின் (அரண்மணை) எதிரே பரந்து கிடந்த பத்ம தீர்த்தத்தைத் தொட்டு வந்த காற்றில் குளிர்ந்திருந்தது அறை. நேரத்தைப் பார்க்க, லண்டன் மாநகரில் இருந்து தருவிக்கப்பட்ட கடிகாரம் மணி ஒன்று என்றது.
அவர் சாஹித்யங்கள் இயற்றும் அறை அது. அம்பாரி முகப்பின் (சாளரம்) அருகே சென்று வானளாவி நின்ற கோபுரத்தைப் பார்த்தார். கோபுரத்தின் ஏழு நிலைகளில் இரண்டில் விளக்கெரிந்தது.
கண்களை மூடி அம்பலத்துள் ஒவ்வொரு சந்நிதியையும் அகக் கண்ணில் கண்டு தியானித்தார்.
ஆலயத்தினுள் அனந்தனில் சயனித்திருக்கும் அனந்தனை மனதில் நிறுத்திய கணம் மீண்டும் கேட்ட ஒலியில் உடல் சிலிர்த்தது.
அவ்வப்போது கேட்கும் ஒலிதான் எனினும், இன்று மூன்றாவது முறையாகக் கேட்ட சிம்ம கர்ஜனை எதையோ தனக்கென சங்கேதமாகக் கூறுவதான எண்ணம் எழுந்தது.
நந்தா விளக்கிலிருந்து கசிந்த சன்னமாக ஒளியைப் பிரகாசிக்கச் செய்யவும் நிழல் தண்ட, வணங்கிய கேசவன்
“ஏதெங்கிலும் வேணோ?”
“உறங்கான் போய்க்கோடா” என்ற மன்னர்,
மேஜை இழுப்பறையிலிருந்து காகிதத்தையும் எழுதுகோலையும் எடுக்கவும், அவர் எழுதுவதற்கு ஹேதுவாக மற்றொரு விளக்கைத் தூண்டி மேஜையில் வைத்த கேசவனைக் கண்டு சிறு புன்னகையுடன் தலையசைக்க, மீண்டும் கேட்ட சிம்மக்குரலில் “கேசவா, திருமேனிக் காவலை விளிச்சோடா” என்றார்.
கோவிலுக்குள் காவல் காத்து கர்ஜிக்கும் உக்ர ந்ருஸிம்மனுக்கு அஞ்சியே, நடைசாற்றிய பின் உள்ளே செல்லும் துணிவு யாரிடமும் இல்லை. வெளியே இருப்பவர்கள் இருவராகவோ, மூவராகவோதான் காவலுக்கு இருப்பர்.
பின்பக்கமாகவே நகர்ந்து வெளியேறியவனை மீண்டும் அழைத்து “உறங்குகா” என்றார்.
‘நரசிம்ம மாமவ பகவான் நித்யம்
ஹர விரிஞ்ச வாசவனுத ஷௌர்ய சிந்தோ அதிரபாஸா நிஹதஸூரா தீனபந்தோ…’
அம்பலத்துள் அலையும் அரிமாவை ஆரபி ராகத்தில் ஸ்ருதி, லயத்தோடு ஸாஹித்யம் அமைத்து எழுதிப் பாடினார்.
நேரம் உஷத் காலத்தை நெருங்கவும், அனந்த பத்மநாபஸ்வாமியின் நிர்மால்ய தரிஸனத்திற்கு வருபவர்களின் சலசலப்பும், நடை திறக்க வந்த காவலர்களும், எங்கிருந்து எப்போது உள்ளே சென்றனர் என்றே தெரியாத நம்பூதிரிகளுமாக, வெளியே நடமாட்டம் தெரிந்தது.
மனதில் தோன்றிய பரபரப்பில், வேகமாக ஸ்நானம் செய்து வெளிக்கிட்டவர் இளையம்மா கௌரி பார்வதி பாயைக் கண்டு நின்றார்.
“உன்னி, இத்தனை அதிகாலையில் …”
“அம்பலத்துக்குச் சென்று அனந்தனைத் தரிஸிக்க”
“காவல், திவான், யாரும் இல்லாமலா?”
“கேசவன் குட்டி கூட வரும். எனிக்கு ஏகாந்த தர்ஸனம் காணனம்”
“பத்ரம் உன்னி”
அம்பலத்தினுள் நுழைந்தவரின் நடை, பாவனை பார்வை எல்லாம் அவரறியாது மேலும் வினயமடைந்தது.
‘ஸ்ரீகிருஷ்ணம் க்ஷேத்ரபாலம்
த்வஜாபதி சஹிதம்
பூதநாதம் நரசிம்ஹம் வ்யாஸம் ஸதம்பம் கணேசம்
ரகுவர அனுஜம் ஜானகி வாயுபுத்ரம் பூமி
பிரம்மாதி ஸேவிதம்
வந்தே ஸ்ரீ பத்மநாபம்
பரமபதமகோ பன்னக மோகசாயின்’
எனக் கோவிலின் சந்நிதிகளை வரிசைப்படுத்தும் ஸ்லோகத்தை முணுமுணுத்தவாறே இடதுபுறமாகத் திரும்பி நடக்கத் தொடங்கினார்.
கோவில் பிரகாரத் தூண்களில் ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்த தீப்பந்தங்களின் வெளிச்சத்தில், ராஜ அலங்காரங்கள் அதிகமின்றி எளிமையான முண்டும் மேலே அங்கவஸ்திரமும் உடுத்தி, ஒற்றை அடப்பக்காரனுடன் வந்தவரை அடையாளம் கண்டு பக்தர்கள் விலகி நிற்க, பரமனின் சந்நிதியை நோக்கிச் சென்றார் , சுவாதித் திருநாள் மஹாராஜா.
தன் எதிரே இருந்த மூன்று நிலைகளின் வழியே தெரிந்த பன்னகசயனனின் ஆகர்ஷணத்திற்கு ஆட்பட்டு நின்றவரின் கண்ணையும் கருத்தையும் நிறைத்தாலும், இன்னும் இன்னும் உன்னில் என்னை நிரப்பிக்கொள் என்றது இறை.
மனதின் அழுத்தங்களுக்குத் தீர்வும் முக்தியும் கிடைக்கப் பெற்ற உணர்வை அடைந்தவர், தீர்த்தத்தைப் பெற்றுக்கொண்டு சிரஸில் தரித்து, மக்கள் தரிசிக்க வழி விட்டுப் பின்னே நகர்ந்து ஒத்தைக்கல் மண்டபத்தில் ஏறினார்.
அந்த மண்டபத்தின் தரையில் கிடக்கும், இருக்கும், விழும் அனைத்தும் அந்த அனந்தனுக்கே அர்ப்பணம் என்பது ஐதீகம்.
ஆனால், திருவிதாங்கூர் அரச குடும்பமே பத்மநாப தாஸர்களாக இருக்க, அரசர் அங்கே நமஸ்கரிப்பதில் புதிதாக என்ன என்று மாதவனையும் மன்னரையும் மாறி மாறிப் பார்த்தனர் மக்கள்.
தன்முனைப்பில் இருந்த ஸ்வாதித் திருநாள் மஹாராஜா ‘என் முன்னோர்கள் வழி, மரபின் வழி வந்த அனந்தபத்மநாப ஸ்வாமியின் தாஸனான நான் இன்னொருவருக்கு அடிமை செய்யேன்’ என்ற உறுதியுடன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தார்.
தெளிந்த மனதுடன் எழுந்தவருக்கு எதிரே யோகநித்திரையில் இருந்த அனந்தபத்மநாபனின் மேல் சதகம் எழுதும் எண்ணம் எழ, அதை எழுத அருள்புரிய அந்த பத்மநாபனையே வேண்டினார்.
மண்டபத்துள் அவர் மட்டுமே இருக்க, மெலிதாகக் கேட்ட சதங்கை ஒலியில் திகைத்தார்.
வெள்ளி முளைத்துக் கீற்றாக வெளிச்சம் பரவிய வேளை, உற்சாகம் குமிழியிட, ஸ்ரீஸ்வாதித் திருநாள் மஹாராஜாவின் மெல்லிய, தாழ்ந்த குரலில் “கீத த்வனி கு தகதிம் நதிர்கிருதத்ததோம்
நச் ரரஹி கோரி ததிட்டை தை தட்டைத் திராடகா…
…பத்மநாப துமாரி லீலா”
என அனந்தனின் லீலைகளை வியந்தது , ஹிந்துஸ்தானி ராகமான தனஸ்ரீயில் பிறந்த அந்த தில்லானா.
மூச்சுக் காற்று கூட மன்னரின் இசையைக் கேட்பதைத் தடுக்காத அளவிற்கு அமைதி காத்து, பாட்டை ரசித்த தரிஸனத்திற்குக் கூடியிருந்த பக்தர்களின் கரகோஷம் எழ, தலையசைத்து ஏற்றுக்கொண்ட மஹாராஜா மீண்டும் ஒருமுறை அனந்தனை சேவித்து வெளியில் வந்து ந்ருஸிம்மரைத் தரிஸித்தார்.
‘தெளிவு பிறந்ததா?’ என நரஹரி கண்ணைச்சிமிட்டும் உணர்வு தோன்ற ரோமாஞ்சனம் உண்டானது.
யுக யுகமாக அவ்விடத்தில் குடிகொண்ட பரம்பொருள், பக்தனுக்கு இடையறாது தன் இருப்பை உணர்த்திய பரமன், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பரந்தாமன், தன் மனக்கிலேசத்தைப் போக்கவென, இரவில் கர்ஜித்து, உஷத் காலத்தில் தரிஸனம் தந்து, பாட வைத்து, சதகம் எழுதும் சிந்தையைத் தூண்டி, தெளிவு தர வேண்டுமெனில், அந்தப் பெருமை முழுவதும் அந்த அனந்தசயனனையும் தன் பரம்பரையையே அவனது தாஸர்களாகப் பணிந்த தன் முன்னோரையும் எண்ண, எண்ண வியப்பும் சிலிர்ப்பும் ஒருங்கே எழுந்தது.
நன்கு விடிந்து விட, வழியில் தென்பட்டவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொட்டாரத்தை நெருங்க, ஏழெட்டு அடி உள்ள நாகம் குறுக்கிட்டது.
சட்டென மன்னருக்கு முன்னால் வந்த கேசவன் “ராஜாவே, பதுக்கே” என, அவன் சொன்னபடியே பாம்பு பாதையைக் கடக்கும் வரை அதையே பார்த்தபடி பொறுமையாக நின்றிருந்தவர்,
“கேசவா, இது அனந்தனன்டே காடு. நம்மலானு வழி முடக்குன்னது” என்று உரக்க நகைத்தார் மஹாராஜா.
கொட்டாரத்துக்குள் வந்து காலை உணவு முடிந்து சற்று நேரத்தில், திவான் சுப்பாராவ் உள்ளே வந்தார். வருடன் மன்னர் தனக்காகக் காத்திருந்தவர்களை சந்திக்கச் சென்றார்.
தேவைப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளையும், நிர்வாக அலுவல்களில் ஐயங்கள், பிரச்சனைகளுக்கான தீர்வையும் விவாதித்த மன்னர், உள்ளே செல்லப் போக, திவான் சுப்பாராவ், எதையோ சொல்லத் தயங்குவது கண்டு நின்றார்.
திவான் சுப்பாராவ், திருவாங்கூரின் திவான் மட்டுமன்றி, மஹாராஜா ஸ்ரீஸ்வாதித் திருநாளுக்கு சமஸ்க்ருதம், மராத்தி, சமூக அறிவியல் போன்றவற்றைக் கற்பித்த ஆசானும் கூட. அவரது சங்கடத்தைக் கண்ட மன்னர் காத்திருக்காது,
“ஏதும் பிரச்சனையா?”
“நான் என் பதவியை ராஜிநாமா செய்து விடுகிறேன் மன்னா”
“என்ன சொன்னான் அந்த கிருஷ்ணா ராவ்?”
“...”
“என் மீதே ஊழல் புகார் வந்து விடும்போல் தெரிகிறது…”
“நான் பார்த்துக் கொள்கிறேன்”
ஜெனரல் கலனின் தலையீடும், அவரது கையாளான பேஷ்கார் கிருஷ்ணாராவின் பதவி ஆசையும் சமஸ்தான அதிகாரிகளை சீண்டுவதும்… மஹாராஜாவின் பொறுமையும் சகிப்புத்தன்மையும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்தது.
‘திவானை பணியில் அமர்த்தவே, மதறாஸ் மாகாண அரசின் ஒப்புதல் வாங்க வேண்டி இருக்கிறது. அதுவுமே அந்த ஸ்வேதா (வெள்ளையன்) மூலமாகத்தான் போக வேண்டும். அவர்களை மீறி செயல்படவும் முடியாது. இதில் நேர்மையும் நாணயமுமில்லாத, தந்திரங்கள் நிறைந்த, வெள்ளையனின் அடிவருடியை திவானாக நியமிப்பதற்கு பதில், நான் நேராக சமுந்தரத்தில் இறங்கி விடலாம்’
எல்லாம் சேர, ஜெனரல் கலன் கொடுத்த குடைச்சல் தாளாது, நீண்ட யோசனைக்குப் பின் தன் தந்தை ராஜ ராஜ வர்மா விய தம்புரான், இளையம்மா கௌரி பார்வதி பாய், தம்பி உத்திரம் திருநாள் வர்மா மூவரையும் அழைத்தவர், திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் பிரிட்டிஷ் அரசுக்குமான தொடர்பை முறித்துக் கொள்வதாக எழுதியிருந்த கடிதத்தைக் காட்டினார்.
திருவிதாங்கூர்
சமஸ்தானத்தை சுதந்திரமான சுதேச அரசாக நீட்டிக்க கம்பெனியாருடன் இணக்கமாக இருக்க இளையம்மா (சித்தி) கௌரி பார்வதி பாய் , ஸ்ரீஸ்வாதித் திருநாளின் தந்தை மற்றும் தம்பி என மூவருமே, அந்தக் கடிதத்தை அனுப்புவது உசிதமன்று என்று
வலியுறுத்தினர். மன்னருக்கு இதில் உடன்பாடு இல்லையெனினும், தனது சுதந்திரப் போக்கைக் கை விட அவர் தயாராக இல்லை.
தொடர்ந்து அவரது எதிர்ப்புகளைப் பதிவு செய்வதும் அதற்கான விளைவுகளை எதிர்கொள்வதுமாக இருப்பதும் மன அழற்சியைக் கொடுத்தது.
இது தவிர, முன்பே மனைவி நாராயணியையும், சமீபமாக பச்சிளம் மகனைப் பறி கொடுத்தது, என தன் தனிப்பட்ட வாழ்விலும் இழப்புகளைச் சந்தித்தவர், மகனுக்காகவென இரண்டாவதாக நீலம்மா அம்மாச்சியைத் திருமணம் செய்து கொண்டிருந்தாலும், சிறிது விலகலுடனே இருந்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் தஞ்சையிலிருந்து கர்நாடக இசைஞர்கள், நடன மணிகள், கதாகாலக்ஷேபம் செய்பவர்கள் என கலைஞர்கள் பலரும் அடைக்கலம் தேடி மஹாராஜா ஸ்ரீஸ்வாதித் திருநாளின் அரசவைக்கு வந்தனர்.
சுந்தர லக்ஷ்மி
திருவாங்கூர் மன்னர் ஸ்ரீ ஸ்வாதித் திருநாளின் சமகால அரசரான தஞ்சையை ஆண்ட ஸ்ரீ சரஃபோஜி மன்னரின் மறைவை அடுத்து, தஞ்சையின் இசை, நடனக் கலைஞர்கள் வேறிடம் நோக்கி நகர்ந்தனர்.
திருவனந்தபுரத்தை நோக்கி வந்த கலைஞர்களை, கலா ரசிகரும், இசைஞருமான ஸ்ரீஸ்வாதித் திருநாள் பேரன்போடு வரவேற்றுப் புகலிடம் தந்தார்.
அவ்வாறு புலம் பெயர்ந்தவர்களில் இருவர்தான் நடனமணிகளான சுகந்தவல்லி மற்றும் சுந்தரலக்ஷ்மி சகோதரிகள்.
சுந்தரலக்ஷ்மியின் நடனத்திலும் நளினத்திலும் மயங்கிய ஸ்ரீஸ்வாதித் திருநாள் அவரைத் திருமணம் செய்து கொண்டு,
தஞ்சாவூர் அம்மாவீடு என்ற பெயரில் தனியானதொரு மாளிகை கட்டி, சுந்தரலக்ஷ்மியை அதில் குடியேற்றினார். ஆயினும்,
அவரது அரச குடும்பம் அதை அங்கீகரிக்கவில்லை.
இதனால் அரசருக்கும் அவரது இரண்டாவது மனைவி நீலம்மாவிற்கும் இடையே உரசல்கள் எழுந்தன.
கசந்த திருமண உறவு, அரசியல், மனைவி, மக்களின் இழப்பு, தன் காதல் மனைவியை குடும்பம் அங்கீகரிக்காதது என எல்லாம் சேர்ந்தது.
இறுதியாக, பெரும் பொருளாதார நெருக்கடியை நேர் செய்த ஸ்ரீஸ்வாதித் திருநாள், அவரது தந்தையின் மறைவுக்குப் பின் தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டார். அத்தியாவசியமானவற்றைத் தவிர, அதிக நடமாட்டமின்றி தனிமை விரும்பியானார்.
சதா சர்வ நேரமும் ஸ்ரீபத்மநாப ஸ்வாமியின் ஸ்மரணையிலேயே இருந்த ஸ்ரீஸ்வாதித் திருநாள், பெரும்பாலும் வெளியாட்களை சந்திப்பதையே தவிர்த்த நிலையில் நவராத்திரி உற்சவம் நெருங்கியது.
நவராத்திரி உற்சவம்
திருவாங்கூர் சமஸ்தானத்தின் முந்தைய தலைநகரான பத்மநாபபுரம் அரண்மனையில் பஞ்ச லோகத்தால் ஆன ஒரு சரஸ்வதி விக்ரஹம் உள்ளது.
கவிச் சக்ரவர்த்தி கம்பர், கம்பராமாயணத்தை எழுதுகையில், தன் வீட்டில் வைத்து வழிபட்டு, சமாதியாகும் முன் சேரமான் குலசேகர பெருமாளிடம் தந்த சரஸ்வதி விக்ரஹம்.
ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோவிலின் நிர்வாகப் பொறுப்பை யாரிடம் கொடுத்தாலும், தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் பிரச்சினை எழுந்ததில், ஆலயத்தின் அறப்பணிகளைத் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள எண்ணி தலைநகரத்தை பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினர்.
ஆனால், அதன் பின் பல வருடங்களுக்கு, பத்மநாபபுரத்தில் இருந்த சரஸ்வதிக்கான ஆராதனைகள் முன்பின்னாக நடந்தது.
மஹாராஜா ஸ்ரீ ஸ்வாதித் திருநாள், நவராத்ரி உற்சவமாகக் கொண்டாட உறுதி பூண்டு, ஆண்டு தோறும் சரஸ்வதி விக்ரஹத்தை, பூஜாபுராவில் உள்ள அரண்மனைக்குக் கொண்டு வந்து, ஒன்பது நாள் நவராத்திரி விழா கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
‘நவராத்ரி க்ருதிகள்’ என நாளுக்கொன்றாக ஒன்பது பாடல்களையும் இயற்றினார். இந்த விழாவின் வழமைகள் மற்றும் முறமைகள் அனைத்தையும் ‘உத்ஸவ பிரபந்தம்’ எனும் நூலில் அற்புதமாக விவரித்திருக்கிறார், ஸ்ரீ ஸ்வாதித் திருநாள்.
இம்முறை உற்சவத்தை எடுத்துச் செய்ய தம்பி உத்திரம் நாள் வர்மாவை அனுப்பி விட்டு, அறையில் முடங்கி, தான் இயற்றிய நவராத்திரி க்ருதிகளை தனக்குளேயே பாடியபடி, தன் நடமாட்டத்திற்கு எல்லை வகுத்துக்கொண்டார் மன்னர்.
காலப்போக்கில் அவரது அக, புற வாழ்க்கையில் எதிர்பாராது நடந்த பல திருப்பங்கள் அவரை பல பரிமாணங்களுக்கு எடுத்துச் சென்றது.

Author: VedhaVishal
Article Title: அனந்தன் காடு 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.