• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அனந்தன் காடு 6

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
27
அனந்தன் காடு 6

கோவிந்தனை நணுகுவோம்

அமரராய்த் திரிகின்றார்கட்
காதிசேர் அனந்தபுரத்து,
அமரர்கோன் அர்ச்சிக்கின்றங்
ககப்பணி செய்வர்விண்ணோர்,
நமர்களோ!சொல்லக்கேண்மின்
நாமும்போய் நணுகவேண்டும்,
குமரனார் தாதைதுன்பம்
துடைத்தகோ விந்தனாரே.

திருவாய்மொழி



சூழலும் சூழ்ச்சியும் கை கோர்த்ததில் ஸ்ரீ ஸ்வாதித் திருநாளின் உடல் உபாதைகளும் அமைதியின்மையும் நாளுக்கு நாள் அதிகரித்தது.

தன் நினைவுகளுடன் தனக்குள் மூழ்கி இருந்த மஹாராஜா ஸ்ரீஸ்வாதித் திருநாள்,
ஸ்ரீஅனந்த பத்மநாப ஸ்வாமியின் அற்புதங்கள், அவரில் பொதிந்துள்ள ரகசியங்கள், அவர் நிகழ்த்திய லீலைகள் அனைத்தும் நினைவிலாடுகிறதா அல்லது நேரில் நிகழ்கிறதா என்ற ஐயத்தோடே ஐயனில் திளைத்தார்.

சில நேரம் ஆழ்கடலில் அமிழ்ந்திருப்பது போலவும், தலைக்கு மேல் ஓயாத அலையோசையும், பாம்புகளின் சீற்றமும் கேட்பது போல் உணர்ந்தார். இரவின் இருளில் ஆழ்ந்த உறக்கத்தில் கண்கள் கூசும் அளவு ஒளிர்வை கண்டார்.

எல்லையில்லா பாற்கடலில் எந்தேரமும் மிதந்தபடி இருக்கும் ஆதிசேஷனின் ஆயிரம் தலைகளும், அந்த உயிரிக்கத்தின் மேல் யோக நித்திரையில் கிடக்கும் பரமபுருஷனும், சயனித்திருக்கும் அவரது வலக்கையின் கீழே உள்ள சிவலிங்கமும், காலடியில் அமர்ந்திருக்கும் மஹாலக்ஷ்மியும்…

இதென்ன…?

அறிதுயில் கொண்டவரின் நாபியிலிருந்து ஒரு தாமரையும், அதன் மேலே நான்முகனும்…

பிரபஞ்ச சிருஷ்டியின் மொத்த இயக்கமும், பிரளயமும், யுகசந்தியும், த்ரிமூர்த்திகளும், நான்மறைகளும், பஞ்ச பூதங்களும் என, அனந்தசயனத்தூரானின் மூர்த்தத்துள் எத்தனை அடையாளங்கள், எத்தனை குறியீடுகள்!

மொத்த பிரபஞ்சத்துக்குமான குறியீடு அல்லவா அனந்த சயனன்?

அனந்தசயனம் எனும் உருவம் உருவகப்படுத்தும் பொருள் மிக ஆழமானது. இந்த பிரபஞ்ச சிருஷ்டியின் தத்துவத்தைச் சொல்வது. மூன்று உலகங்களையும் குறிப்பது.

கீழே திருப்பாற்கடல். நடுவில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் நாராயணன். அவரது காலடியில் மஹாலக்ஷ்மி. கையின் கீழ் சிவலிங்கம். மேலே நாராயணனின் நாபிக்கமலத்திலிருந்து நீண்ட தாமரையில் பிரம்மா.

இதில் திருப்பாற்கடல் என்பது பரந்த பெருவெளி. உள்ளும் புறமும் உருவமுமற்ற பெருவெளி. எதுவுமே இல்லையென்றால் அது எப்படி கடலாகும், அதுவும் பாற்கடல்?

வெளி என்றால் வெறுமை, ஒன்றுமில்லாதது என்பதால்தான், இது பாற்கடல். அது ஒரு முழுமை. நிறைவு. அதனால்தான் இது கடல்.

ஒன்றுமில்லாத ஒன்று எப்படி பூரணமாக இருக்க இயலும்?
இந்தப் பிரபஞ்சத்தின் ஜீவராசிகள் அனைத்தும் இந்தக் கடலின் நீராலானது. இங்கிருந்தே உருவாவது, இங்கேயே சங்கமிப்பது. அதனாலேயே பூரணத்துவம் நிறைந்தது. நிரந்தரமானது. அனந்தமானது.

சிருஷ்டிக்கு முன்னும் பின்னும் வியாபித்திருக்கும் சாஸ்வதமான முழுமை இந்தப் பாற்கடல்.

பிரபஞ்சத்தின் சுழற்சியை, பிரளயம் உட்கொண்ட பின் எஞ்சுவது ஆதிசிவம். உயிர்கள் அனைத்தும் ஒடுங்கும் இடம். அதிலேயே பிறப்பு, அதிலேயே இறப்பு.

இது எதனால் ஆனது? எதனாலும் அல்ல. இதற்குப் பிறப்பு அழிவு கிடையாது. தொடக்கம் கிடையாது. முடிவு கிடையாது. ஆதி அந்தமில்லா அண்டப் பெருவெளி. அதுவே சிவம். அதுவே பரம்பொருள்.

இந்தப் பரம்பொருளின் நாபிச்சுழியில் பொதிந்திருக்கிறது இப்பிரபஞ்சத்தின் உயிர்சக்தி.

பிரளயத்துக்கும் சிருஷ்டிக்கும் இடைப்பட்ட ஆழ்ந்த உறக்கத்தில் உயிர்ப்புடன் இருப்பது பாற்கடல் மட்டுமே.

அடுத்து பாற்கடலின் மேலே ஆதிசேஷனின் மீது அனந்தசயனத்தில் கிடக்கும் நாராயணனும் அவரது காலடியில் இருக்கும் திருமகளும்.

சேஷம் என்றால் மீதமிருப்பது, எஞ்சி நிற்பது என்று பொருள்.
இந்த பிரளயமும் பிரபஞ்சத்தின் இயக்கமும் சிருஷ்டியின் சுழற்சியும் இடையறாது நடந்தாலும், சிலவற்றை பிரக்ஞை தக்க வைத்துக் கொள்கிறது. அந்த எச்சத்திலிருந்துதான் மீண்டும் புதிய சிருஷ்டி கண்டு, உலகம் பரிணாம வளர்ச்சி அடைகிறது.

முடிவில்லாத அனந்தனாகிய ஆதிசேஷனின் எச்சத்திலிருந்து ஒன்று இரண்டாகி, சிலவாகி பின் பலவாகிறது. சேஷனின் ஆயிரம் தலைகளின் குறியீடு இதுதான்.

உயிர்கள் உருவாக ஆண், பெண், சிவம், சக்தி இரண்டுமே தேவை என்பதாலேயே இங்கே நாராயணனின் காலடியில் மஹலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

அதற்கும் மேல் தாமரை மலரின் நடுவே வீற்றிருக்கிறான் பிரம்மன். உயிர்கள் தனக்கான உலகில் பெறும் ‘நான்’ என்ற சுய சிந்தனையே பிரம்மன்.

உயிர்களின் பிறப்பும் இருப்பும், நான் எனும் சுய உணர்வையும், ஆசாபாசங்களையும் கடந்து அறிவை உணர்வதில் முடிகிறது.

அனந்தனில் சயனித்திருக்கும் பரம்பொருள் தனக்குள்ளே இருக்கும் பிரபஞ்ச சக்தியின் மீது கொண்ட கவனமே யோக நித்திரை அல்லது அறிதுயில்.
அத்தகைய மஹாபுருஷன்
தங்கள் குல தெய்வமாக இருந்து, தங்களை தாஸனாக ஏற்றுக்கொண்டு, வழி நடத்தி, எண்ணற்ற சந்தர்ப்பங்களில் அரணாக நின்று காத்து, ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி, இடையறாது தன் இருப்பை உணர்த்தி அபயமளிக்கும் கருணைக் கடலான ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமியை எந்நேரமும் ஸ்மரித்த மஹாராஜா உடலும் மனமும் நெகிழ்ந்தார்.

ஸ்ரீ ஸ்வாதித் திருநாளின் மூடியிருந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவர் கண்ட உள்முக தரிஸனத்தில் எத்தனை நாட்கள், மாதங்கள் இப்படிச் சென்றதென அவருக்குத் தெரியவில்லை.

உடல் உபாதையை விட மன அழுத்தம் அதிகமாக இருந்ததில் உறக்கமா விழிப்பா எனத் தெரியாத நிலையில் பெருமளவு மௌனத்திலிருப்பவர் சில சமயம் வாய் விட்டுப் புலம்பவும் செய்தார்.

சுபாவத்தில் இளகிய மனமும் இரும்பு இதயமும் கொண்டவரான மஹாராஜா ஸ்ரீஸ்வாதித் திருநாளின் உடல்நிலை நாளுக்கு நாள் க்ஷீணித்துக்கொண்டே செல்ல, ராஜ்ஜியத்தின் அலுவல்களில் இருந்தும், மக்களை சந்திப்பதிலிருந்தும் விலகியே இருந்தார்.

மஹாராஜாவின் இந்த உள்முகத்தன்மை அவருக்கு ஸ்ரீபத்மநாப ஸ்வாமியிடமும், கோவிலின் மீதும் ஒருவித மூர்க்கமான அர்ப்பணிப்பையும்
பக்தியையும் தந்தது.

அறையின் அம்பாரிமுகப்பின் வழியே தெரியும் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோவில் கோபுர தரிஸனம் ஒன்றுதான் மனதிற்கு இதமளித்தது.

பல நேரம் அக்கோபுர உச்சியில் அனந்தசயனத்தில் இருந்தபடி பெருமாள் தன்னோடு பேசுவதாக உணர்ந்தார். மன்னரின் அனந்தனின் மீதான ஒருமுகப்பட்ட அன்பானது, ஒரு கட்டத்தில் மிகப் பிரத்யேகமானதாகி விட்டது.

மஹாராஜாவின் தம்பி உத்திரம் திருநாள், இளையம்மா போன்றவர்களிடம், அடிக்கடி ‘எனிக்கும் பெருமாளினம் பவித்ரமாய திவ்யஸ்நேஹம்’
என்று சொல்லிச் சொல்லி பரவசித்தார்.

ஒரு கட்டத்தில் சுய விருப்பு வெறுப்புகளைப் புறந்தள்ளி, தன்னையே நிராகரிக்கும் மனநிலைக்குச் சென்றார் ஸ்ரீ ஸ்வாதித் திருநாள் மஹாராஜா. தங்களது புரவலரான மன்னரைப் புகழ்ந்து வடிவேல் நட்டுவனார் ஒரு வர்ணம் இயற்றிப் பாடினார்.

அரசர்களைப் புகழ்ந்து பாடல்கள் இயற்றிப் பரிசில் பெறுவது அந்நாளில் வழக்கம்தான். அந்தப் பாடலின் அற்புதமான இசையை சிலாகித்த மன்னர், இனி ஸ்ரீபத்மநாப ஸ்வாமியின் பெருமையை போற்றிப் புகழ்ந்து பாட வேண்டுமே தவிர, என்னை அல்ல” என்று பணித்தார்.

ஸ்ரீஸ்வாதித் திருநாளின் வார்த்தைகளிலேயே சொன்னால் “நரஸ்துதி வேண்டா, நாராயணஸ்துதி மாத்ரம்”

பதினாறாவது வயதில் அரசராகப் பொறுப்பேற்றதுமே ஹிரண்யகர்ப்ப தானம் செய்து குக்ஷேத்திர பெருமாள் பட்டத்தைப் பெற்ற மஹாராஜாவிற்கு, ஸ்ரீபத்மநாபப் பெருமாளுக்கு எத்தனை கொடைகள் சமர்ப்பித்தாலும் மனம் நிறையவில்லை.

ஷோடஸ மஹா தானங்கள் எனப்படும் பதினாறு வித தானங்களைச் செய்தார். எண்ணற்ற பொன் மற்றும் வெள்ளியாலான பாத்திரங்களும், வாஹனங்களும், ஆபரணங்களும் அளித்தார்.

பிரிட்டிஷ் அரசிடம் போராடி அனுமதி பெற்று, திருவாங்கூரின் பெருமையையும் இறையாண்மையையும் பறைசாற்றும் வகையில், தங்க நாணயங்களை அச்சிட்டு தானம் செய்தார்.

திடீரெனத் தோன்ற, மூட்டைகளில் கட்டி எடுத்து வந்த சூரத் நாணயங்களை பெரிய பெரிய வெள்ளிப் பாத்திரங்களில் நிரப்பி, ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியின் சந்நதிக்கு எதிரே, ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்கு மேல், அவரது நலிந்த உடல் நிலையைப் பொருட்படுத்தாது, மஹாராஜா தன் கையாலேயே சமர்ப்பித்த தொகை முப்பது லட்சம் ரூபாய்கள்.

(சூரத் நாணயங்கள் - மொகலாய மன்னர் ஔரங்கஸீபின் காலத்தில் சூரத்தில் அச்சிடப்பட்டது. மதிப்பு மிக்கது)

ஸ்ரீஸ்வாதித் திருநாளின் உடல் வலிமையும் உயிர் சக்தியும் அவரிடமிருந்து மெது மெதுவே நழுவிச் செல்ல, மஹாராஜாவின் உலகம் அவருக்கும் அவரின் அத்யந்தமான ஸ்ரீபத்மநாப பெருமாளுக்குமாக சுருங்கியது.

அறிவும் ஆன்மாவும் அனந்தனிடம் அடைக்கலமாகி இருக்க, ஆவி மட்டுமே அவனது அழைப்புக்காகக் காத்திருந்தது.

அந்த தனுர் மாதத்தின் குளிரடர்ந்த அதிகாலை வேளையில், நிர்மால்ய தரிஸனத்திற்காக ஸ்ரீபத்மநாபஸ்வாமியின் கருவறை கதவைத் திறந்த பெரிய நம்பி, தன் கண்ணெதிரே கண்ட காட்சியில் ஸ்தம்பித்து நின்றுவிட்டார்.

பூட்டப்பட்டிருந்த கருவறைக்குள், முண்டும் அங்கவஸ்திரமும் அணிந்து, அனந்தசயனனின் காலடியில், பணிவும் பக்தியுமாக நின்றிருந்த மஹாராஜா ஸ்ரீஸ்வாதித் திருநாளைக் கண்டு குழம்பிய பெரிய நம்பி, கண்களை கசக்கிக்கொண்டு பார்க்க முற்பட்ட வேளையில், கொட்டாரத்திலிருந்து மன்னர் மறைந்ததற்கான அறிகுறியாக சங்கநாதம் ஒலித்தது.

நம்பி அதிர்ந்து விழிக்க, அனந்தனின் காலடியில் நின்ற அரசரின் உருவம் மறைந்தது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கும் வேண்டுதல்களுக்கும் பதிலாக, கர்ப்பஸ்ரீமானாக, பிறக்கும்போதே திருவாங்கூர் மஹாராஜாவாக, பன்மொழி வித்தகராக, கலைகளின் காவலராக, நானூற்றுக்கும் மேற்பட்ட ஸாஹித்யங்களை, ஸ்லோகங்களை இயற்றிய இசையரசராக, மக்களின் மனம் கவர்ந்த மன்னராகத் திகழ்ந்த
ஸ்ரீ பத்மநாப தாஸ ஸ்வாதித் திருநாள் ராம வர்ம குலசேகரப் பெருமாள், தனது முப்பத்தி மூன்றாம் வயதில் பத்மநாபனின் பதம் சேர்ந்திருந்தார்.

ஆண்டாள், தியாகபிரம்மம் போன்ற ஜோதியில் கலந்தவர்களின் பக்திக்கு சற்றும் சளைத்ததில்லை மஹாராஜா ஸ்ரீஸ்வாதித் திருநாளின் பக்தி.

கருவிலே திருவுடன் பிறந்தாலும், மஹாராஜாவாகவே இருந்தாலும், மானிட வாழ்க்கையின் அத்தனை ஏற்றத் தாழ்வுகளையும் சந்தித்ததவரை ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமியிடம் அவர் வைத்திருந்த அளவற்ற அன்பும் பக்தியும் நம்பிக்கையுமே வழி நடத்தியது.

பிறந்த ஆறாம் மாதத்தில் பெற்ற அன்னையை இழந்து, அரியணைக்காகவே வளர்க்கப்பட்டு, தனிப்பட்ட திருமண வாழ்க்கையின் துயரங்கள், குழந்தைகளின் மறைவு, அரசியல் சூழ்ச்சி, பிரிட்டிஷ் அரசின் நெருக்கடி என சுழன்றடித்த வாழ்வில், அந்த அனந்தனையே அன்னையாய் பாவித்து அன்பு செலுத்திய ஸ்ரீஸ்வாதித் திருநாள் மஹாராஜா, இனி அனந்தனின் அனுக்கனாய், அன்பனாய், அடியவனாய்…

மஹாராஜா பிறந்த சமயம் அவருக்காகப் பாடப்பட்ட இறையிமான் தம்பியின் தாலாட்டு காற்றில் ஒலிக்கிறது.

ஓமன திங்கள் கிடாவோ, நல்ல கோமள தாமர பூவோ

பூவில் நிரஞ்ச மதுவோ, பரி-பூர்ணேந்து தந்தே நிலவோ

புத்தன் பவிழ கொடியோ, செரு-தடகல் கொஞ்சும் மொழியோ

சாஞ்சாடி ஆடும் மயிலோ, மிருது-பஞ்சமம் பாடும் குயிலோ

துள்ளுமிலா மான் கிடாவோ, ஷோபா-கொள்ளுன்னோரன்ன கொடியோ

ஈஸ்வரன் தன்ன நிதியோ, பரமேஸ்வரியெண்டும் கிளியோ

பாரிஜாதத்தின் தளிரோ, என் பாக்ய-த்ருமதின் பலமோ

வால்சல்யா ரக்னாதே வைப்பான், மாமா வாய்ச்சோறு காஞ்சனா செப்போ

திருஷ்டிக்கு வைச்சோரம்ருதோ, கூறியது வாய் விளக்கோ

கீர்த்தி-லதக்குள்ள வித்தோ, என்னும் கேடு வரத்துல்ல முத்தோ

ஆர்த்தி திமிரம் கலவன், உள்ள மாற்றாண்டா தேவ பிரபயோ

சுக்தியில் கண்ட பொருளோ, அதி சூக்ஷ்மம் வீணை-ஆரவமோ

வம்பிச்சா சந்தோஷ வல்லி, தந்த கொம்பத்து பூத பூவல்லி

பிச்சகத்தின் மலர் செந்தோ, நாவின்-இச்ச நல்குன்ற கல்கண்டோ

கஸ்தூரி தந்தே மனமோ, எத்த சத்துக்கல்க்-உள்ள குணமோ

பூமாணம்-எத்தூர் காட்டோ, ஈட்டம் பொன்னில் லிஞ்சுல்லா மாட்டோ

காச்சி குருக்கிய பாலோ, நல்ல கந்தமெழும் பணிநீரோ

நன்ம விளையும் நிலமோ, பஹு தர்மங்கள் வாழும் கிரகமோ

தாஹம் கலயும் ஜலமோ, மார்க-கேதம் கலயும் தனலோ

வாதாத மல்லிகா பூவோ, ஞானம் தேடி வைச்சுள்ள தானமோ

கண்ணினு நல்ல கனியோ, மாமா கைவண்ண சிந்தா மணியோ

லாவண்யா புண்ய நதியோ, உன்னி கார்வர்ணன் தந்தே காளியோ
லட்சுமி பகவதி தந்தே, திரு-நெட்டியிலிட்ட குறியோ

என் உன்னிகிருஷ்ணன் ஜெனிச்சோ, பாரில் இங்கனே வசம் தரிச்சோ

பத்மநாபன் தன் கிருபாயோ, முத்தும் பாக்யம் வரும் வழியோ


பளீரென மின்னல் வெட்டி, வானம் இடித்த ஓசையில், சிந்தை கலைந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். நிர்மால்ய தரிஸனம் முடிந்து நடை சாற்றி இருக்க, மழை வலுவாகப் பெய்ததில், பிரகாரத்திலும், வாயிலுக்கு அருகிலும் மக்கள் குடும்பமாக, குழுக்களாக நின்றிருந்தனர்.

கோவிலின் உள்ளே ஆங்காங்கே கண்காணித்தபடி நின்றிருந்த கேரள மாநில காவல்துறையைச் சேர்ந்த காவலர்களைப் பார்த்தேன். நான்கு நாட்களாக அனந்தனுக்கு அடுத்தபடி என்னை ஆச்சர்யப்படுத்திய விஷயங்களில் ஒன்று ஸ்ரீபத்மநாப ஸ்வாமி கோவில் பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் காவலர்களின் சீருடை.

இடுப்பில் வேட்டியும், அதன் மேல் பட்டை பெல்ட்டும், கையில் வாக்கி டாக்கியும், இடுப்பில் சொருகிய பட்டன் அலைபேசியுமாக, அனந்தனின் சேவையில். சிலரிடம் கைத்துப்பாக்கி. சிலரிடம் இயந்திரத் துப்பாக்கி.

ஏன் இந்த உடை என்ற கேள்விகள் இல்லை. இந்த ஆலயத்தின் நியதி இதுதான். என்ன பதவியில் இருந்தாலும், இந்த எல்லையில் இதற்கான விதிகளுக்கு உட்பட்டுதான் நடக்க வேண்டும் என்ற புரிதலும், அதை கடைபிடிப்பதும் என்னைக் கவர்ந்தது.

பேசாமல், கேரள காவல்துறையில் சேர்ந்து, கோவில் காவலுக்கு வந்து விடலாமென்ற ஆசை கூட எழுந்தது.

கோவிலின் கதையைச் சொல்லி வழிகாட்டும் ஒருவர் அருகில் வந்து அமர்ந்தார்.

“நாகராஜா கோவில் கண்டோ?” என்றார்.

மறுப்பாகத் தலையசைத்தேன்.

“தமிழோ?”

“ம்”

“போவாம், வரு”

சற்று யோசித்த நான், சம்மதமாகத் தலையசைத்தேன். மழை குறைந்து சற்று வெளிச்சம் வந்தபின் இருவரும் நடந்தோம்.

புத்தகங்களில், இணையத்தில், இப்போது நேரில் என எனக்குத் தெரிந்தவற்றையே தமிழ், மலையாளம், ஆங்கிலம் கலந்து அவர் பறைய கேட்டுக் கொண்டேன்.

நாகராஜாவின் கோவில் அதிக தொலைவில் இல்லை. கோட்டைக்கு உள்ளேயேதான் மேற்கு நோக்கி, அதாவது ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியின் திருமுகத்தை நோக்கியபடி இருந்தார், இங்கு நாகராஜாவாக வழிபடப்படும் அனந்தன் எனும் ஆதிசேஷன். கோவிலில் கூட்டம் அதிகமில்லை.

திவாகர முனிக்கும் வில்வமங்கலத்து சாமியாருக்கும் காட்சியளிக்க இலுப்பை மரத்தில் பெருமாள் உதித்த இடம். கிருஷ்ணனே குழந்தை வடிவில் வந்து வழிகாட்டிய, அனந்தசயனன் ப்ரத்யக்ஷமான அனந்தன்காடு.

ஒரு யோஜனை துரம் பரவி இருந்த பெருமாளைக் கற்பனை செய்ய வயிற்றுக்குள் சிலீரென்றது.

நாகபடத்தின் கம்பீரத்தைப் பார்த்ததும் உடலில் உள்ளூர ஒரு
நடுக்கம் ஓடியது.

ஸர்ப்பம் என்றால் என்ன என்பதும், அதன் பல்வேறு பெயர்களும், வகைகளும், அவற்றின் நச்சுத்தன்மையும், அவை குறித்தான நம்பிக்கைகளும், அதற்கு அடிப்படையான பயமும், பாம்பென்றால் படையும் நடுங்கும் போன்ற பழமொழிகளும் நாம் அறிந்தவை.

ஆனால், நாராயணன் ஏன் ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கறார்? அதன் தாத்பர்யம் என்ன?

நமது கற்பனையா, அல்லது அதற்கு உள்ளார்ந்து வேறு அர்த்தம் உண்டா?

நமது புராணங்களில், கடவுளர்களின் சிற்பங்களில் மறைமுகமான பொருள் ஒன்று பொதிந்திருக்கிறது. நாம் காணும் உருவம் வேறு, அதன் உருவகம் வேறு.

அடையாளமும் குறியீடுகளும் ஒன்றுபோல் தோன்றினாலும் இரண்டும் வெவ்வேறு தன்மையை, காரணங்களைக் கொண்டவை. மொழியும், வார்த்தைகளும், பெயர்களும் அடையாளங்கள்.

யானை என்பது ஒரு பெயர். அந்த உருவத்தில் இருக்கும் விலங்கை அடையாளப்படுத்திக் கொள்ள நாம் கொடுத்த பெயர் யானை.

அதே யானை ஒரு சித்திரத்திலோ சிற்பத்திலோ,
முழு உருவமாக இல்லாது, அதன் தலை / முகவடிவம் மட்டும் இருந்தால், அதுவே ஓம்காரத்தின் குறியீடாக, வேழ முகத்தோனை உருவகிப்பதாக மாறி விடுகிறது.

யானை தெரிந்த பெயர், பொருள். ஆனால் அந்த வடிவம் உருவகப்படுத்தும் மறைபொருள் நாம் நேரடியாகக் கண்டோ, கேட்டோ அனுபவித்து உணர முடியாத ஒன்றைக் குறிக்கிறது.

அப்படியெனில் ஆதிசேஷனின் உருவம் எதன் குறியீடு? பல சுற்றுகளாகச் சுருண்டிருக்கும் அவனது உடல் எதைக் குறிக்கிறது?

பரமபுருஷனான நாராயணன் அலையாடும் பாற்கடலில், அசைந்தாடும் அனந்தனின் மீது சயனித்திருப்பதன் மறைபொருள்தான் என்ன?

அனந்த ரஹஸ்யத்தை அறிய ஆவலானேன்.


 

Author: VedhaVishal
Article Title: அனந்தன் காடு 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Active member
Joined
Jun 19, 2024
Messages
141
அருமை அருமை🙏🙏🙏🙏🙏
அனந்த இரகசியத்தை அறிய ஆவலுடன் 💞💞💞💞
 
Top Bottom