• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நீருக்குள் பூத்த நெருப்பு - 5

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
308
நீருக்குள் பூத்த நெருப்பு

அத்தியாயம் 5

நட்பும் ஒரு கண்ணாடியோ!
குறைகளை மறைக்காமல்
சுட்டிக் காட்டும் கண்ணாடி!
குறைகளை நீக்கி நிறைகளாக்கி
உலகத்தின் முன்னே
உயரம் தொட வைத்து
கைகோர்த்து உடன் நடக்கிறது
நட்பெனும் அற்புதம்!


பூரணி, மணிமேகலை இருவரும் தங்களுக்குள் கேட்டுக்கொண்ட கேள்விகளும் கூறிக்கொண்ட விடைகளும், விளக்கங்களுமாகச் சேர்ந்து அவர்களுடைய வாழ்க்கையின் இளம் பருவம் அதாவது பள்ளிப் பருவத்தின் ஒரு பகுதியை நமக்குக் கண்ணாடி போலப் பிரதிபலித்தது.

அந்தக் கண்ணாடியின் வழியே புகுந்து நாமும் அவர்களுடைய பள்ளியின் வளாகத்தில் சுற்றி அவர்களைக் கண்காணித்து விட்டுத் திரும்பலாம்.

மாஞ்சோலை கிராமம். கம்பத்தில் இருந்து சுருளி அருவிக்குப் போகும் வழியில் இருந்த ஒரு சிறிய கிராமம். நல்ல பசுமையான கிராமம். ஒரு காலத்தில் மாமரங்கள் நிறைய இருந்ததால் இந்தப் பெயர் வந்திருக்கலாம். இப்போது திராட்சைத் தோட்டங்களே அதிகம். திராட்சையில் முதலீடு செய்து நிறைய இலாபத்தைப் பார்க்கும் பணக்கார விவசாயிகள் அதிகம் வசித்த கிராமம். அந்த ஊரில் இருந்தது ஒரே ஒரு உயர்நிலைப்பள்ளி. ஒரு சிறிய சிவன் கோயில்.

மணிமேகலையின் தந்தை அந்தப் பள்ளியில் ஆசிரியர். மனைவி இல்லாதவர்க்கு உடனிருந்து உதவி செய்வது அவருடைய அம்மா. மணிமேகலை பிறந்ததில் இருந்து பாட்டியின் வளர்ப்பு. நெருங்கிய உறவினர் என்று யாரும் அவர்கள் வீட்டிற்கு வருவதில்லை. ஏதோ காரணத்தால் சொந்த பந்தங்களிடம் இருந்து ஒதுங்கி வாழ்ந்தது அந்தக் குடும்பம். அப்பா, பாட்டி, மகள் என்று மூன்று பேர் மட்டும் இருந்தாலும் அன்பு என்னவோ அதிக அளவில் செங்கோலோச்சிய சூழ்நிலை. பாட்டியின் பாசமும், அக்கறையும் மணிமேகலைக்குக் கிடைத்த அற்புதமான வரங்கள். அம்மா இல்லை என்கிற குறையை மறக்கடிக்கும் அளவிற்குப் பாட்டி, பிரியத்தைப் பொழிந்து தங்கள் வீட்டு கண்ணம்மாவை வளர்த்து வந்தார்.

அப்பாவுக்குப் பாட்டியைப் போல அன்பை அதிகம் வெளிக்காட்டவே தெரியாது. அமைதியாக இருப்பார். தான் உண்டு, தன் வேலையுண்டு என்று ஒதுங்கியே இருந்தார். மணிமேகலைக்கும் அவருடைய சுபாவம் பழகிப் போனதால் மனதில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததில்லை. அப்பா பார்க்கும் பார்வையிலேயே அவருடைய அன்பை முழுமையாக உணர்ந்தாள் மணிமேகலை. சின்னக் குழந்தையாக இருந்தாலும் அவளால் அந்த அன்பின் கனத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“ ஏதோ பெரிய பாரத்தை மனசுல வச்சிருக்காரு போலத் தோணுது. சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாமல் தவிக்கிறார். முகத்தில் என்னவோ சொரத்தே இல்லை. ஒரு வேளை மனைவியைப் பறிகொடுத்த துயரமா இருக்கலாம்” என்று அவர்களைச் சுற்றியிருக்கும் கிராமத்துவாசிகள் பேசிக் கொள்ளும்போது என்னவென்று மணிமேகலைக்கு சரியாகப் புரிவதில்லை. அப்பா மனதில் ஏதோ வருத்தம் என்று மட்டும் மனதின் மூலையில் போட்டு வைத்துக் கொண்டாள்.

மணிமேகலையின் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மற்றொரு மாணவி பூரணி. அவளுடைய கன்னங்கள் புஸுபுஸுவென்று இருப்பதால், பூரி என்று சக மாணவிகள் அவளைச் செல்லமாக அழைப்பதுண்டு. அவளும் அந்தப் பெயரை உற்சாகமாக ஏற்றுக் கொண்டாள்.

சிட்டுக்குருவியாக வட்டமடித்துக் கொண்டிருந்த பூரணியின் வாழ்க்கையில் புயல் வீசியது. பூரணியின் அம்மா விஷக் காய்ச்சலால் இறந்து போனார். பூரணியின் அப்பா, அந்த ஊரிலிருந்த சிவன் கோயிலில் அர்ச்சகர். அதிக வருமானம் இல்லாத ஏழைக் குடும்பம் அவர்களுடையது. தாய் இல்லாமல் வளர்ந்துவந்த மணிமேகலையால் பூரணியின் துக்கத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“ பூரணி, கவலைப்படாதே. எனக்கும் அம்மா இல்லை. உனக்கும் அம்மா இல்லை. உனக்காவது இவ்வளவு நாட்கள் உங்கூட இருந்துருக்காங்க. எனக்குப் பாரேன். பொறந்ததில் இருந்து அம்மா இல்லை. அம்மா மொகம் எப்படியிருக்கும்னு கூடத் தெரியாது. உங்க அம்மா வானத்துல நட்சத்திரமா ஜொலிக்கறாங்க பாரேன். ராத்திரி நீ பாக்கலாம். அவங்களோட பேசலாம். மேலே இருந்து உன்னைப் பாத்துக்குவாங்க” என்றெல்லாம் சொல்லித் தனக்குத் தெரிந்த வழியில் தோழியைத் தேற்றினாள் கலை. அம்மா இல்லாத இருவரும், அந்தக் காரணத்தினாலேயே நெருங்கிய தோழிகள் ஆனார்கள்.

மனைவியை இழந்த பூரணியின் அப்பா, ஆறே மாதங்களில் அவர்களுடைய சொந்தத்தில் இருந்தே இன்னொரு பெண்ணை மணமுடித்து அழைத்து வந்தார்.

“ பாவம், என்ன பண்ணுவான் அவனும்? சின்ன வயசு அவனுக்கு. இந்த வயசுல சந்நியாசி மாதிரி வாழ்க்கை நடத்தமுடியுமா என்ன? பெண் கொழந்தை வேற. அவளை வளக்கறத்துக்காவது உதவி தேவை இல்லையா? ” என்று அர்ச்சகரின் திருமணத்தை நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் நியாயப்படுத்தினார்கள் . இதே நியாயம், பூரணியின் அம்மா கணவரை இழந்திருந்தால் கிடைத்திருக்குமா என்ன? ஏகப்பட்ட நிபந்தனைகளை அவள் மீது சுமத்தி, அவளுடைய பூவையும், பொட்டையும், வாழ்க்கையின் வண்ணங்களையும் ஏன் சிரிப்பையும் கூடப் பறித்தும் பசியடங்காமல் பரிதவிக்கும் இந்தக் கேடுகெட்ட சமுதாயம்.

மாற்றாந்தாயாக வந்த மகராசிக்கு வந்த நாள் முதல் பூரணியைப் பிடிக்கவில்லை. அந்தச் சிறு குழந்தை அவளுக்கென்னவோ முள்ளாக உறுத்தினாள். ஆசை ஆசையாகப் புது அம்மாவிடம் பேச வந்தவள், புறக்கணிக்கப் பட்டாள். அவளுடைய வெறுப்பை பூரணி மீது காட்டப் பல்வேறு தாக்குதல்களைத் தொடங்கினாள் பூரணியின் சித்தி.

“ பூரணி, மசமசன்னு நிக்காத்தே. வேலையெல்லாம் கத்துக்கோ. பொண்ணாப் பொறந்துட்டாலே நாளைக்குக் கல்யாணமாகி இன்னொரு வீட்டுக்குப் போய்த்தான் ஆகணும். அதுக்கு இந்த வயசுலேந்து வேலை கத்துக்கறது ரொம்ப அவசியம்” என்று சொல்லி, பூரணியின் வயசுக்கு மீறிய வேலைகளை அவள் மீது சுமத்துவாள்.

“ இந்தா, அம்மியில் இதை அரைச்சு எடுத்துட்டு வா.

இட்லிக்குக் கறுப்பு உளுந்து நனைச்சு வச்சிருக்கேன். நன்னாக் களைஞ்சு அந்தக் கழனித் தண்ணியை மாட்டுக்குன்னு தனியா எடுத்துவை.

கல்லுரலில் அரிசியையும், உளுந்தையும் அடுத்தடுத்து போட்டு அரை பாக்கலாம். உளுந்து புஸுபுஸுன்னு பந்து மாதிரி வரணும். அவசரப்பட்டு எடுத்துராதே. அப்புறம் இட்லி கல்லு மாதிரி வரும்.

மெஷினுக்குப் போயி இதை அரைச்சுண்டு வா. என்ன தூக்க முடியலையா? எல்லாம் முடியும். தூக்கிப் பழகிக்கோ. போடற சாப்பாடு எங்கே போறதோ தெரியலை.

இந்தக் காய்கறி, கீரை எல்லாம் சரியா ஆய்ஞ்சு நறுக்கி எடுத்துண்டு வா கொஞ்சம்”

என்று விதவிதமாக வேலைகள் சுமத்தப்படும் அந்தச் சிறுகுழந்தை மேல். மிளகாயை அம்மியில் அரைத்து விட்டு எரியும் கையை அவள் ஊதிக் கொண்டே இருப்பதைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும்.

“ குருவி தலையில பனங்காய் கூட இல்லை பூசணிக்காயை இல்லை தூக்கி வைக்கிறா இந்தச் சித்தி. பழிகாரியா இருக்கா. ஏதாவது கேட்டா புலுபுலுன்னு சண்டைக்கு வந்துருவா. நாம ஏதாவது கேக்கப் போயி, கோபத்துல அந்தப் பச்சைக் கொழந்தையை இன்னும் படுத்துவாளோன்னு பயமா இருக்கு” என்று யோசித்த அக்கம்பக்கத்தினர், பூரணியின் சித்தியிடம் பேசவே பயந்தார்கள்.

பூரணியின் அப்பாவும் புதுப் பெண்டாட்டி மயக்கத்தில் இந்த அநியாயங்களைக் கவனிக்கவில்லை. அவர் மட்டுமே தட்டிக் கேட்கும் உரிமை உள்ளவர். அவரே தட்டிக் கேட்காத போது மற்றவர்கள் எப்படித் தலையிட முடியும்?

பூரணியிடம் தெரிந்த மாற்றங்கள் மணிமேகலையின் கண்களில் நன்றாகவே பட்டன.

“ என்ன பூரணி? கையில் காயமா இருக்கு? இது என்ன தீச் சுட்ட காயம் மாதிரி இருக்கு? தோல் கூட வழண்டு கெடக்கே? பயங்கரமா எரியுமே? நெருப்பு கிட்ட எதுக்குப் போனே? ” என்று அக்கறையுடன் கேட்ட மணிமேகலை, தோழியின் கையைப் பிடித்து ஊதினாள்.

“ இதோ இடது கையில் இருக்கற காயம், காய் நறுக்கும்போது பட்டது. இந்தத் தீக்காயம்
குமுட்டி அடுப்பு பக்கத்துல உக்காந்து விசிறும்போது பட்டது. அடுப்பில் இருந்து தணல் கையில் விழுந்திருச்சு. அந்த இடத்திலேயே நேத்து சொவத்துல இடிச்சுண்டுட்டேன்.அப்ப அந்தத் தோல் வழண்டு வந்துருத்து. ராத்திரி எல்லாம் ஒரே எரிச்சல். அழுதுண்டே படுத்திருந்தேன்” என்றாள் அந்தப் பிஞ்சுச் சிறுமி.

“ அப்பாவையோ, சித்தியையோ கூப்பிட்டிருக்க வேண்டியதுதானே? ”

“ அப்படில்லாம் கூப்பிட முடியாது. அவங்க வேற ரூம்ல தூங்குவாங்க. நான் தனியா இன்னொரு ரூமில. அம்மா இருந்த வரைக்கும் அம்மா பக்கத்துல தான் படுத்துண்டு தூங்குவேன் நான். இப்பல்லாம் தனியாத் தூங்கும்போது ரொம்ப பயமா இருக்கு தெரியுமா? ” என்று சொல்லும்போது பொலபொலவென்று கண்ணீர் உகுக்கத் தொடங்கிவிடுவாள் பூரணி.

மதியம் சாப்பாடு கூட இப்பொழுது கொண்டு வருவதில்லை பூரணி. மணிமேகலை அவளுக்கும் சேர்த்துக் கொண்டு வந்துவிடுகிறாள். வேண்டாமென்று பூரணி மறுத்தாலும் அவளுக்குத் தன் கையால் ஊட்டிவிட்டு எப்படியாவது சாப்பிட வைத்து விடுவாள். சாயந்திர நேரத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் சமயத்தில் இரண்டு பேரும் சேர்ந்து நடந்து போவார்கள். முதலில் மணிமேகலையின் வீடு வரும். வலுக்கட்டாயமாக பூரணியைத் தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்று அவளுடைய காயங்களுக்கு மருந்து போட்டுவிட்டுச் சாப்பிடவும் கை நிறைய நொறுக்குத் தீனி கொடுத்தே அனுப்புவாள் மணிமேகலை. கிழிந்த ஆடைகளை அவள் போட்டுக்கொண்டு வரும்போது தன்னுடைய ஆடைகளைக் கொடுத்து அவளை அணியச் சொல்லி அனுப்புவதும் உண்டு.

பூரணியின் இருண்ட வாழ்க்கையில் அவளுக்கு ஆதரவாக இருந்தது மணிமேகலையின் நட்பு மட்டுமே. பாவம், பூரணியின் குண்டுக் கன்னங்கள் வற்றிப்போய், பூரியிலிருந்து இப்போது சப்பாத்தியாக உருமாறிவிட்டன. அதுவும் பழைய சப்பாத்திகளாகத் தேய்ந்து போய் விட்டன.

இப்போது பூரணிக்குக் குட்டித் தம்பி பிறந்துவிட்டான். வீட்டில் வேலைகள் அதிகமாகி விட்டன.

“ பாட்டி, பூரணி அடிக்கடி லீவு போடறா இப்பல்லாம். . ஸ்கூலுக்கு ஒழுங்காவே வரதில்லை. அட்டன்டென்ஸ் கொறைச்சலா இருந்தாப் பரீட்சை எழுதவிட மாட்டாங்களாம். இப்பல்லாம் ஹோம் வொர்க் சரியா டயத்துக்கு முடிக்கறதில்லை. கால் பரீட்சை, அரைப் பரீட்சையில் எல்லாம் கூட மார்க் ரொம்பக் கம்மியா வாங்கிருக்கா. அவளுக்கு எப்படி ஹெல்ப் பண்ணறதுன்னே தெரியலை. ஏதாவது செய்யணும். என்ன செய்யலாம்? ” என்று பாட்டியிடம் புலம்பினாள் மணிமேகலை.

“ அவளுக்குத் தம்பிப் பாப்பா பொறந்திருக்கு இல்லையா? அதுனால குழந்தை அழற சத்தத்தில் படிக்க முடியாதா இருக்கும்? அடுத்த வருஷம் நல்லாப் படிச்சு சரி பண்ணிடுவா. நீ அதையே நெனைச்சு அனாவசியமாக் கவலைப்படாதே கண்ணம்மா” என்பார் பாட்டி.

“ ஒரு தடவை அவங்க வீட்டுக்குப் போய் அவங்க சித்தி கிட்டப் பேசிப் பாக்கலாமா பாட்டி? அவளை ஸ்கூலுக்கு அனுப்பச் சொல்லி நீங்க சொல்லுங்க. பெரியவங்க அட்வைஸ் செஞ்சாக் கேட்டுக்குவாங்க இல்லையா? “

“ அப்படில்லாம் எடுத்தோம், கவிழ்த்தோம்னு எதுவும் செய்ய முடியாது. இன்னொருத்தர் வீட்டு விஷயத்துல நாம மூக்கை நுழைக்க முடியாது. அவங்க அதை விரும்பமாட்டாங்க. நாம எதையாவது சொல்லப் போயி, ஏடாகூடமா பதில் சொல்லிட்டாங்கன்னா நமக்கு அவமானமாப் போயிடும். ஒண்ணு வேணாச் செய்யலாம். குழந்தையைப் பாக்கற மாதிரிப் போகலாம். அப்படியே நிலவரம் என்னன்னு பாத்து அதுக்கேத்த மாதிரிப் பேசிட்டு வரலாம்” என்று பாட்டியே ஒரு தீர்வையும் சொல்லிவிட்டார். மணிமேகலை குதூகலத்துடன் துள்ளிக் குதித்து ஓடினாள்.

அன்றைய தினமே மாலை நேரத்தில் பூரணியின் தம்பிக்காகப் புதுச் சட்டைகள் மற்றும் கிலுகிலுப்பை ஆகியவற்றை வாங்கிக் கொண்டு குழந்தையைப் பார்க்கப் பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு சந்தோஷமாகவே கிளம்பினாள் மணிமேகலை. தன் தோழியை நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கப் போகும் மகிழ்ச்சி, அவளுடைய நடையிலேயே தெரிந்தது.

ஆனால், பூரணியின் வீட்டுக்கு ஏன்தான் போனோமோ என்கிற அனுபவமே ஏற்பட்டது அவர்களுக்கு. பூரணியின் சித்தி அவர்களை வரவேற்ற விதமே வேண்டா வெறுப்பாக இருந்தது. குழந்தையின் கையின் பாட்டி நூறு ரூபாய் நோட்டை வைத்துப் புதுத்துணியையும் கொடுத்தபோது சித்தியின் முகம் லேசாக மலர்ந்தது.

“ பூரணியை விட்டா யாரு இருக்கா எனக்கு? அவளையேதான் வேலை வாங்கவேண்டி இருக்கு. என்னோட பொறந்த வீட்டில் இருந்தும் யாரும் வரமுடியாத சூழ்நிலை. என்னால முடிஞ்ச வேலையை நான் செய்யறேன். பூரணி எனக்குக் கூடமாட ஒத்தாசை செய்யறா. நீ பேசாம ஸ்கூலுக்குப் போம்மா. படிப்பைக் கெடுத்துக்க வேணாம். நான் எப்படியாவது சமாளிச்சுக்கறேன்னு சொன்னாக் கேக்கமாட்டேங்கறா. அது எப்படி சித்தி, உங்களைத் தனியாத் தவிக்க விட்டுட்டு நான் போக முடியும்னு சொல்லறா” என்று வாய் கூசாமல் பொய் பேசினாள் பூரணியின் சித்தி. பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்த பூரணியைப் பார்த்து மணிமேகலையின் பாட்டியே வருந்தினாள். சாமர்த்தியமாகப் பேசும் பூரணியின் சித்தியின் எதிரே தோற்றுப் போய் எதுவும் பேச முடியாமல் திரும்பினார்கள் இருவரும். சம்பளமில்லாத வேலைக்காரியாக இருந்தாள் பூரணி அவர்கள் வீட்டில்.

அவர்கள் போய்விட்டு வந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நடுநடுவில் அத்திப் பூத்தாற்போல் பள்ளிக்கு வந்தாள் பூரணி. இறுதித் தேர்வுகளையும் எப்படியோ எழுதிவிட்டாள். முதல் மூன்று இடங்களுக்குள் வரும் பூரணி அந்த முறை தேர்ச்சி பேசத் தேவையான மதிப்பெண்களை மட்டும் பெற்று எப்படியோ தேர்ச்சி பெற்றுவிட்டாள்.

அந்த வருடம் கோடை விடுமுறையில் பாட்டி, புண்ணியத் தலங்களுக்கு அழைத்துப் போகும் குழுவில் சேர்ந்து டூர் செல்லக் கிளம்பிய போது பாட்டியுடன் சேர்ந்து மணிமேகலையும் போனாள். அவர்கள் டூர் முடிந்து திரும்பி வந்தபோது பள்ளியும் திறந்துவிட்டது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா என்று பல மாநிலங்களில் சுற்றுப்பயணம் சென்று விட்டுத் தன்னுடைய அனுபவங்களைத் தோழிகளுடன், முக்கியமாக, பூரணியுடன் பகிர்ந்து கொள்ளும் ஆசையுடன் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றாள் மணிமேகலை.

போன இடங்களில் எல்லாம் பூரணிக்காக ஹேர் கிளிப், வளையல், தோடு, மணிமாலை என்று என்னவெல்லாமோ ஆசை ஆசையாக வாங்கிச் சேகரித்த சின்னச் சின்ன பரிசுப் பொருட்களை எல்லாம் வாரி எடுத்துக் கொண்டு போன மணிமேகலைக்கு அதிர்ச்சியே பரிசாகக் கிடைத்தது.

பூரணி பள்ளிக்கு வரவில்லை. பரவாயில்லை, அடுத்த நாள் பார்க்கும்போது கொடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவளுக்கு அடுத்த அதிர்ச்சி. பூரணி, பள்ளியில் இருந்து டி. சி. வாங்கிக் கொண்டு போன தகவல் கிடைத்தது. ஏதோ வெளியூரில் இருக்கும் பள்ளியில் சேர்க்கப் போவதாக பூரணியின் அப்பா சொன்னதாகப் பேசிக் கொண்டார்கள்.

ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பிய, பாட்டியின் மடியில் விழுந்து கதறிக் கதறி அழுது தீர்த்தாள். அன்றைய தினத்திற்குப் பிறகு இப்போது பல வருடங்கள் கழிந்த பின்னர் கொடைக்கானலில் தான் தன்னுடைய தோழியைச் சந்திக்
க முடிந்திருக்கிறது மணிமேகலையால்.

தொடரும்,

திருபுவனம் நெசவாளி.
 

Author: SudhaSri
Article Title: நீருக்குள் பூத்த நெருப்பு - 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
அம்மா இல்லாத பிள்ளை
அன்புக்கு ஏங்கும்
அனாதை தான் போல....
அப்பா இருந்தும்
ஆதரவற்ற நிலை....
ஆணை குறை சொல்லமுன்
ஆட்டி படைக்கும் பெண்ணையும்
அடக்க வேண்டும்....
பெண்ணுனுக்கு
பெண் தான் முதல் எதிரி....
😭😭😭😭😭😭
 
Top Bottom